சனி, 24 ஜூன், 2023

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த 7 அம்ச திட்டம்

 tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :  சென்னை: பாட்னாவில் இன்று நடைபெற்ற எதிக்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வலியுறுத்திய 7 முக்கியமான விஷயங்கள் இவைதான்!
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பலரும் கூறி வந்தனர்.
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்தால் பாஜகவை எளிதில் வீழ்த்த முடியும் என ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.


இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், லாலு பிரசாத் யாதவ், உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன் என மொத்தம் 16 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பாஜக அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். தொடர்ந்து மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் சிம்லாவில் அடுத்த மாதம் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றதை அடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் இருந்து சென்னைக்கு திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய முதல்வர் ஸ்டாலின், அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது, தான் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் 7 விஷயங்களை வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வலியுறுத்திய 7 விஷயங்கள்: 1. நாட்டின் பன்முகத்தன்மையைக் காக்க வேண்டுமென்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் உறுதியாக இருக்க வேண்டும் என்று பேசினேன்.

2. 2023 ஜூன் 23ஆம் தேதி கூடினார்கள், 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும்தான் வரலாற்றில் பதிவாக வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

3. மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் கிடைத்த அத்தனை வெற்றிகளுக்குமான காரணமாக அமைந்தது. அதேபோல, அகில இந்திய அளவிலும் ஒற்றுமைதான் முக்கியம் என்பதை நான் வலியுறுத்தினேன்.

4. சில முக்கிய ஆலோசனைகளையும் வழங்கினேன். உதாரணமாக, எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ, அந்தக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.

5. கூட்டணி அமைக்க முடியவில்லை என்று சொன்னால், தொகுதி பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால், பொது வேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம்.

6. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது.

7. அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற 7 பிரச்சினைகளை சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கருத்துகளை இந்தக் கூட்டத்தில் பேசும்போதும் நான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: