செவ்வாய், 20 ஜூன், 2023

அமைச்சர் பொன்முடி குடும்பத்திற்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

minnambalam.com -christopher : அமைச்சரின் குடும்பத்திற்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 19) தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2006-11ஆம் ஆண்டில் திமுக அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் அளவுக்கு அதிகமாக குவாரிகளில் செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பொன்முடி, கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இந்த வழக்கு விழுப்புரத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், “அனுமதியின்றி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடியே, 36 லட்சத்து 40 ஆயிரத்து, 640 ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் ஊழல் தடுப்பு சட்டத்தின்படி இந்த வழக்கு மீதான விசாரணைக்கு தடை விதிக்க முடியாது” என்று கூறி கவுதம சிகாமணி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

இதற்கிடையே தற்போதைய வட மாவட்ட அமைச்சர் ஒருவரின் மகனும், கல்குவாரி குத்தகை எடுத்து நடத்தி வருகிறார். அவரும் இதே போன்ற சர்ச்சையில் சிக்கலாம் என்ற தகவல் திமுகவினர் மத்தியிலேயே ரகசியமாக பேசப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை: