செவ்வாய், 20 ஜூன், 2023

மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் முயற்சி

Hindu Tamil  : எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்த காங்கிரஸ் முயற்சி
புதுடெல்லி: மோடி அலை காரணமாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக தொடர்கிறது. இன்னும் சரியாக ஒரு வருடத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக மீண்டும் வென்று வரலாறு படைக்கும் சூழல் நிலவுகிறது.
இதை தடுக்கும் முயற்சியில், ஐக்கிய ஜனதா தளம் தலைவரான பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் இறங்கியுள்ளார். இவரது முயற்சியால் எதிர்க்கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர் ஜுன் 23-ல் பிஹாரின் பாட்னாவில் கூடுகின்றனர்.


இக்கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது பற்றி ஆராய எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. ஏனெனில் அப்பதவிக்கு தம்மிடையே பலரும் போட்டியில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை வெல்ல அவருக்கு நிகரான ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது அவசியம்.

இந்நிலையில் காந்தி குடும்பத்தினரை பிரதமர் வேட்பாளராக்க திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகளைத் தவிர, இதர எதிர்க்கட்சிகளுக்கு சிறிதும் விருப்பமில்லை. ஏனெனில், அப்பதவிக்கு தம்மைத் தாமே முன்னிறுத்த அவர்கள் தயாராக உள்ளனர். எனவே, இது தொடர்பான ஆலோசனையை கையில் எடுக்க எதிர்க்கட்சியினர் அஞ்சுகின்றனர்.

தேர்தலுக்குப் பிறகு அதிக எம்.பி.க்களை பெறும் கட்சிக்கே பிரதமர் பதவிக்கான வாய்ப்புகள் உள்ளன. அதிக தொகுதிகள் கிடைக்கும் சூழல் காங்கிரஸுக்கு இருப்பதால் அது, எதிர்க்கட்சிகள் சார்பில் தங்கள் தேசியத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக்க முயற்சிக்கிறது.

கார்கேவை உ.பியின் ரேபரேலியில் இருந்து போட்டியிட வைக்கவும் காங்கிரஸ் திட்டமிடுகிறது. காங்கிரஸ் செல்வாக்கு மிகுந்த இந்த தொகுதியிலிருந்து சோனியா காந்தி, தொடர்ந்து நான்காவது முறையாக எம்.பி.யாக உள்ளார். தனது உடல்நிலை காரணமாக அவர் அரசியலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக கட்சி வட்டாரம் கூறுகிறது. தாய்க்கு பிறகு அந்த தொகுதியின் பொருத்தமான வேட்பாளராக பிரியங்கா உள்ளார்.

இருப்பினும், அரசியல் சூழலை பொருத்து ரேபரேலியில் கார்கேவை போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. இதன்மூலம், உ.பி.யின் முக்கிய வாக்காளர்களான தலித் மற்றும் முஸ்லிம்களை தங்கள் பக்கம் மீண்டும் இழுக்க முடியும் என காங்கிரஸ் நம்புகிறது.

உ.பி.யில் ஐந்து முறை மாயாவதி முதல்வர் ஆவதற்கு தலித் வாக்குகள் காரணமாயின. ஆனால் மாயாவதி தற்போது பாஜகவின் மறைமுக நட்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கார்கேவுக்கு பெரிதாக எதிர்ப்பு எழாது என்பது காங்கிரஸின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுமானால், எதிரணியிலிருந்து பிற கட்சி தலைவரை துணைப் பிரதமராக ஏற்கவும் காங்கிரஸ் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

கர்நாடகாவின் பிதர் தொகுதியை சேர்ந்த கார்கேவும், அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு காரணமானார். இங்கு நிலவிய மதவாத சூழலில் பாஜகவின் பிரச்சாரத்திற்கு உகந்த பதிலடி கொடுத்தார் கார்கே. பிரதமர் மோடியை எந்த தலைவரும் செய்யாத விமர்சனங்களை கார்கே முன் வைத்திருந்தார். கார்கே தனது 43 வருட அரசியல் அனுபவத்தில் 9 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்துள்ளார். மேலும் 2 முறை மக்களவை எம்.பி.யாக இருந்த அவர் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

தலித் தலைவர் ஒருவர் இதுவரை இந்தியாவின் பிரதமராக அமர்த்தப்பட்டது இல்லை. இதன்காரணமாக, காங்கிரஸின் தலித் தலைவரான கார்கேவை எதிர்க்கட்சிகள் ஏற்கும் வாய்ப்புகள் உள்ளன. கார்கேவை பிரதமர் வேட்பாளராக்க எதிர்ப்பவர்கள் தலித் விரோதிகளாக முத்திரை குத்தப்பட்டு அவர்கள் வாக்குகளை இழக்கும் அபாயமும் உள்ளது.

எனவே கார்கேவை முன்னிறுத்தும் காங்கிரஸின் முயற்சி, புரட்சிகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த முயற்சியால் உத்தரப்பிரதேச தலித் வாக்காளர்களும் எழுச்சி பெற்று தங்கள் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளிப்பார்கள் என காங்கிரஸ் நம்புகிறது. எனினும், தலித்தான கார்கேவை பிரதமாரக்க நாடு முழுவதிலும் உள்ள பிற சமூக வாக்காளர்கள் வாக்களிப்பார்களா எனும் கேள்வி எழாமல் இல்லை!
 

கருத்துகள் இல்லை: