மின்னம்பலம் - Jegadeesh : அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் அமலாக்கத்துறைக்கு இன்று(ஜூன் 20) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டவிரோத பணபறிமாற்றம் புகாரின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 13 ஆம் தேதி சோதனை நடத்தி கைது செய்தனர்.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில் பாலாஜியை கைது செய்த போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவரது மனைவி மேகலா, மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தார்.
இதனிடையே சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கண்ணதாசன், “அமலாக்கத்துறை விசாரணை செய்த பொழுதும், தான் கைது செய்யப்பட்ட போதும் கடுமையாக நடத்தப்பட்டதாகவும், தன்னை தரதரவென்று இழுத்து தரையில் போட்டதால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் செந்தில் பாலாஜி சொன்னார்.
செந்தில் பாலாஜி தனக்கு தொந்தரவு கொடுத்த அதிகாரிகளின் பெயர்களையும் என்னிடம் கூறினார். அந்த புகாரின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நாளை விசாரித்து முடிவு எடுக்கும்” என்று தெரிவித்திருந்தார்,
இந்நிலையில், மனித உரிமை மீறல் புகார் குறித்து அமலாக்கத்துறையின் சென்னை மண்டல இணை இயக்குநர் 6 வாரத்தில் விளக்கமளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக