திங்கள், 19 ஜூன், 2023

யாழ்- நெடுந்தீவு, நயினா தீவு மற்றும் அனலை தீவுகளில் அதானி மின் திட்டம் ஆகஸ்டில் ஆரம்பம்

வடக்கு தீவுகளில் இந்திய மின் திட்டம் ஆகஸ்டில் ஆரம்பம் | Virakesari.lkவீரகேசரி:  இந்தியாவுடன் கூட்டுமுயற்சித் திட்டத்தின் கீழ் வடக்கு தீவுகளில் ஸ்தாபிக்கப்படவுள்ள சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்கவுக்கும் இந்தியாவின் அதாணி நிறுவனத்தின் மின்சக்தி பிரிவின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
500 மெகாவோட் இந்த திட்டமானது சூரிய ஒளி மற்றும் காற்றாலை ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையில ஸ்தாபிக்கப்படவுள்ளது.
குறுகிய காலத்துக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்து, மின் உற்பத்தியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக  அதாணி நிறுவனத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் மின் நி‍லையத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க இந்த கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பாக்கு நீரிணைக்கு அருகில் அமைந்திருக்கும் நெடுந்தீவு, நயினா தீவு மற்றும் அனலை தீவு ஆகிய 3 தீவுகளில் மின்திட்டத்தை முன்னெடுக்க சீனாவுக்கு வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் திகதி எடுக்கப்பட்டது.

இந்த திட்டத்தை எடுப்பதற்கு இந்தியா முயற்சித்த போதும் நிராகரிக்கப்பட்டது. இறுதியில்  இலங்கை, சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளுக்கிடையில் பெரும் இராஜதந்திர மோதலாக வடக்கு தீவு விவகாரம் வெடித்தது.

வடக்கில் மூன்று தீவுகளை சீனாவுக்கு வழங்கியமை தொடர்பில் கடும் அதிருப்தியை தெரிவித்த டெல்லி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கரிசனையை முன்னிறுத்தி கடுமையான இராஜதந்திர அணுகலை கொழும்பில் முன்னெடுத்தது.

தொடர் அழுத்தம் காரணமாக இறுதியில் குறித்த திட்டத்தை சீனாவிடமிருந்து பெற்று, இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்தது.

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு கடும் அதிருப்தியை வெளியிட்ட சீனா, சர்வதேச ஏல நடைமுறைகளையும் ஒப்பந்தத்தின் பண்புகளையும் கண்டிப்பாக பின்பற்றுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்தது.

இலங்கையின் வட பகுதியில் வாழும் பல்லாயிரக்கணக்கான ‘ஏழை மக்கள்’ இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். சர்வதேச ஏல நடைமுறைகளுக்கமைய ஆசிய அபிவிருத்தி வங்கியால் இந்த திட்டத்துக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

ஏல விதிமுறைகளின்படி, திட்டத்தின் கட்டுமானத்துக்கும் ஒப்படைப்புக்கும் மட்டுமே சீன நிறுவனம் பொறுப்பாகும்.

ஏனைய அனைத்து செயற்பாடுகளும் இலங்கை மின்சார சபையின் முழுமையான கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்தது.

மறுபுறம் மூன்றாம் தரப்பினரின் மூர்க்கத்தனமான தலையீட்டை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தது.

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த சர்வதேச ஏல நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறும், ஒப்பந்தக்காரரின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்குமாறும், அதன் சொந்த நம்பகத்தன்மை மற்றும் சர்வதேச நற்பெயரை பாதுகாக்குமாறும் இலங்கையை சீனா வலியுறுத்தியது.

இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நெடுந்தீவு, நயினா தீவு மற்றும் அனலை தீவு ஆகிய 3 தீவுகளையும் உள்ளடக்கிய மின்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அதாணி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(லியோ நிரோஷ தர்ஷன்)

கருத்துகள் இல்லை: