மின்னம்பலம் : திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக அக்கட்சியின் தற்போதைய மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி நாளை (அக்டோபர் 9) நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழுவில் நியமிக்கப்பட இருக்கிறார்.
தற்போதைய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா. அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் இருக்கிறார்கள்.
துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஈரோட்டைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் சர்ச்சைகளில் சிக்கி தனது கட்சிப் பதவியை கடந்த ஆகஸ்டு மாதமே ராஜினாமா செய்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டார்.
செப்டம்பர் 15 ஆம் தேதி விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவிலும் அவர் மேடையில் இல்லை. இந்த நிலையில்தான் அடுத்த சில தினங்களில் தனது ராஜினாமாவையும் அரசியலில் இருந்தே ஓய்வு பெறும் முடிவையும் அறிவித்தார் சுப்புலட்சுமி.
இந்த நிலையில் இப்போது திமுக தலைமைக் கழகத்தில் நான்கு துணைப் பொதுச் செயலாளர்கள் இருக்கிறார்கள். சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பதிலாக யாரை துணைப் பொதுச் செயலாளராக நியமிப்பது என்ற ஆலோசனையை திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே மேற்கொண்டு வந்தார்.
“ஏற்கனவே நாம் கொங்கு மண்டலத்தில் வீக் ஆக இருக்கிறோம். எனவே சுப்புலட்சுமி ஜெகதீசனின் இடத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு கவுண்டரையே நியமிக்க வேண்டும். அவர் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஆணாகவும் இருக்கலாம்” என்றும் கொங்கு புள்ளிகள் சிலர் ஸ்டாலினிடம் சிபாரிசு செய்தனர்.
இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம், ‘ திமுக தலைமைக் கழகத்தில் நாடார் சமுதாய பிரநிதித்துவம் சற்குண பாண்டியன் அம்மையார் மறைவுக்குப் பின் இல்லை. எனவே நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவரும் திமுகவின் முரட்டு பக்தரின் மகளுமான கீதாஜீவனை நியமிக்கலாம் அல்லது தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தமிழரசியை துணைப் பொதுச் செயலாளர் ஆக்கலாம். தென்மாவட்டங்களில் இது நமக்கு உதவும்” என்றெல்லாம் பல முனைகளில் இருந்தும் பல ஆலோசனைகள் ஸ்டாலின் முன் வைக்கப்பட்டன.
அவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டார், அதுபற்றி தனக்கு நெருக்கமான மிகச் சிலரிடம் விவாதிக்கவும் செய்தார் ஸ்டாலின். ஆனால் யாரை நியமிக்கப் போகிறோம் என்பது பற்றிய எந்த சிக்னலையும் அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் தனது சகோதரியும் திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழியை துணைப் பொதுச் செயலாளர் ஆக்கலாம் என்ற தன் முடிவை முதலில் தன் குடும்ப உறுப்பினர்களிடம் மெல்ல கசிய விட்டார் ஸ்டாலின். இது தெரிந்தவுடனேயே கோபாலபுரம் குடும்பத்தில் இருந்தும், சித்தரஞ்சன் சாலை குடும்பத்தில் இருந்தும் முணுமுணுப்பு எழுந்தது.
Kanimozhi become deputy general secretary of dmk
“இப்போது எல்லா வகையிலும் உங்களுக்கு அடுத்த நிலையில் உதயநிதியை தயார்படுத்தி வருகிறோம். எல்லா விளம்பரத்துலையும் உதயநிதி படம் போடுறாங்க. இப்ப கனிமொழியை துணைப் பொதுச் செயலாளரா கொண்டு வந்தீங்கன்னா நாளைக்கு பிரச்சினை வராதா?’ என்று ஸ்டாலின் குடும்பத்தினர் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை ஸ்டாலின்.
கோபாலபுரம் குடும்பத்தில் முணுமுணுப்புகள் எழுந்தபோது, அவர்களிடம் ஸ்டாலின், ‘யாரும் இதில் தலையிடாதீங்க. அப்பா ஆசைப்பட்டாரு. அவர் விருப்பத்துக்கு மாறா நான் ஒருநாளும் நடக்கமாட்டேன்” என்று மட்டும் பதிலாக சொல்லியிருக்கிறார்.
அப்பா அதாவது கலைஞர் என்ன ஆசைப்பட்டார்?
Kanimozhi become deputy general secretary of dmk
“கலைஞர் உடல் நலம் குன்றி பேச இயலாமல் போவதற்கு முன்னால், அதாவது நல்ல பேச்சுத் திறனோடு இருந்தபோதே ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலரிடம், ‘கனி பொய் வழக்குல சிறையில ரொம்ப கஷ்டப்பட்டுடுச்சிய்யா…. அதுவும் என் பொண்ணுதானே… கட்சியில அது நல்ல நிலைமைக்கு வரணும்.
ஒரு அண்ணனா ஸ்டாலின் தான் கனிமொழியை நல்லா பாத்துக்கணும். அதான் என்னோட விருப்பம்’ என்று மனம் விட்டு பேசியுள்ளார். இது ஸ்டாலின் காதுக்கும் போகும் என்று தெரிந்துதான் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களிடம் கலைஞர் தெரிவித்திருந்தார். அதன்படியே கலைஞர் பகிர்ந்து கொண்டதை ஒரு சிலர் ஸ்டாலினிடமும் அப்போதே தெரிவித்துவிட்டனர்.
அதை தன் ஆழ்மனதில் போட்டு வைத்திருந்த ஸ்டாலின் அதுபற்றிய தனது ரியாக்ஷன்களை பெரிதாக வெளிப்படுத்தவில்லை. இதன் பின் கலைஞர் உடல் நலம் குன்றி அவர் காலமாகி… ஸ்டாலினும் கட்சிக்குத் தலைமையேற்று தேர்தலை சந்தித்து முதல்வரும் ஆகிவிட்டார்.
தான் கட்சித் தலைவர், முதல்வரானதில் இருந்தே கனிமொழியையும், ராஜாத்தி அம்மையாரையும் கட்சி அளவிலும் குடும்ப அளவிலும் விட்டுக் கொடுக்கவில்லை. முக்கியமான தினங்களில் கனிமொழி வீட்டுக்குச் சென்று ராஜாத்தி அம்மையாரிடம் ஆசி பெற்றே வருகிறார் ஸ்டாலின்.
Kanimozhi become deputy general secretary of dmk
இந்த நிலையில்தான்… சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா முடிவு பற்றி கடந்த ஆகஸ்டு மாதமே அறிந்த ஸ்டாலின் அப்போதே திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழியை நியமிப்பது என முடிவெடுத்துவிட்டார். இதற்கு குடும்ப அளவிலே சில முணுமுணுப்புகள் எழுந்தபோதும் அதற்கான பதிலை தனது செயல்பாடுகள் மூலமாகவே உணர்த்தினார் ஸ்டாலின்.
அதாவது கடந்த மாதம் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மையாரின் உடல் நலம் குன்றியதால் சிகிச்சைக்காக ஜெர்மனி நாட்டுக்கு சென்றார். அப்போது தனது மாப்பிள்ளை சபரீசனும் வெளிநாட்டில் இருந்தார்.
அவ்வப்போது கனிமொழியிடம் தாயாரின் நலம் விசாரித்த ஸ்டாலின், வெளிநாட்டில் இருந்த தனது மருமகன் சபரீசனைத் தொடர்புகொண்டு ஜெர்மனி சென்று ராஜாத்தி அம்மையாரின் சிகிச்சை பற்றி விசாரிக்குமாறும் அவர்களுக்கு அங்கே தேவைப்படும் உதவிகளை செய்யுமாறும் கட்டளையிட்டார்.
அதன்படியே ஜெர்மனி சென்ற சபரீசன் அங்கே கனிமொழியை சந்தித்து ராஜாத்தி அம்மையாரின் சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்து தேவையான சில ஏற்பாடுகளையும் செய்தார்.
இவ்வாறு தனது ஒவ்வொரு செயல்பாடுகள் மூலமும் கனிமொழியின் மீதான பாசத்தை வெளிப்படுத்தி வந்த முதல்வர் ஸ்டாலின்…பொதுக்குழுவில் அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கி… தன்னை இந்த உயரத்தில் உட்கார வைத்ததன் முழு முதற்காரணமான கலைஞரின் விருப்பத்தை பூர்த்தி செய்யப் போகிறார் என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள்.
திமுக பொதுக்குழுவில் பல பாலிடிக்ஸ் முள்களைத் தாண்டி பாச மலர் பூக்கப் போகிறது.,.
–வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக