Anna Mahizhnan : நட்சத்திரம் நகர்கிறது ....
பிரமாண்டங்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இந்த படத்தைப் பாருங்கள் என்று என் மனைவி சொன்னாள்.
நேற்றிரவு 2.47 மணி நேரம், பா. இரஞ்சித்தின், "நட்சத்திரம் நகர்கிறது" படத்தைப் பார்த்தேன். யதார்த்தங்கள் மனதைப் பிசைந்தன.
தமிழ்நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
இளையராஜாவின் இசையை இரசிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் படம். இளையராஜாவைப் பல இடங்களில் படம் சிலாகித்துப் பேசுகிறது.
நானும் இளையராஜாவின் இசையை மிகவும் நேசிப்பவன் தான். ஆனால், இளையராஜா என்ற பார்ப்பனீயத்தின் மொத்த உருவமான அந்த மனிதரைப் பிடிக்கவே பிடிக்காது.
செல்லியம்மாள், பாப்பம்மாள் போன்ற பெயர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக கொலை செய்யப்பட்ட பெண்கள் என்பதையும், அந்தத் தவறை உணர்ந்த அடுத்த தலைமுறைகள் அவர்களைக் குல தெய்வமாக்கி வழி படுவதையும் அழகாகக் காட்டியிருக்கிறார் ரஞ்சித்.
என்னுடைய பெரியம்மாவின் பெயர் பாப்பம்மாள். மூன்று நான்கு தலைமுறைக்கு முன் எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர். அன்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயரை அடுத்தடுத்த தலைமுறைகளில் தங்கள் வீட்டின் ஒரு பெண்பிள்ளைக்கு சூடுவதையும் மரபாகக் கொண்டிருந்தார்கள். அப்படித்தான் எங்கள் பெரியம்மாவிற்கு "பாப்பம்மாள்" என்று பெயர் வைத்தார்கள்.
இந்தப் படத்தின் ஒரு கதாபாத்திரம் படிக்கும் புத்தகத்தின் பெயர் "இந்தியாவில் சாதிகள் - அம்பேத்கார்".
படத்தில் "தமிழ்" என்ற பெயரோடு வரும் கதாபாத்திரத்தின் சில குணங்கள், 1970களில் வந்த ருத்ரையாவின் "அவள் அப்படித்தான்" திரைப் படத்தில் சிரீப்பிரியா நடித்த கதாபாத்திரத்தின் சில குண நலன்களோடு ஒத்துப் போகிறது. உடனே, ரஞ்சித் ருத்ரையாவைக் காப்பியடித்து விட்டார் என்று சில அதிமேதாவிகள் விமர்சித்தாலும் விமர்சிப்பார்கள்.
உண்மை என்னவெனில், இப்படிப்பட்ட குணநலன்கள் உள்ள பெண்கள் எல்லா காலத்திலும் இருக்கிறார்கள் என்பதே. அந்த கதாபாத்திரம் நிறைய ஆங்கிலம் பேசும். அதுவும் நடப்பதுதான். அது மட்டுமல்லாமல், தமிழ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், Gabriel Garcia வின், "One Hundred Years of Solitude" என்ற புத்தகத்தைப் பற்றிப் பேசுவாள்.
அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று எண்ணி, எண்ணி இன்னமும் படிக்க முடியவில்லை. எண்ணத்தோடே நின்று விட்டது.
படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இசை அற்புதம். படத்தில் வரும் நாடக உருவாக்கம், அப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகள் உண்மையில் நடப்பவை. இப்படிப்பட்ட நாடகக் குழுக்கள் உண்டு.
எங்கள் தந்தையார் தமிழ் மறவர் புலவர். அண்ணாமலை, சேலத்தில் இப்படியொரு நாடகக் குழுவில் அங்கம் வகித்தார். அவரே நாடக ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். என் இளமையில் நாடகக் குழுவிற்கு அப்பாவோடு நான் சென்ற பொழுது கண்ட காட்சிகள் மனத்தில் நிழலோடின.
நட்சத்திரம் நகர்கிறது கதாபாத்திரங்கள் தற்போதைய தமிழகத்தின் சமுதாயத்தைப் பிரதிபலிக்கிறது.
கதாபாத்திரங்கள் இருபாலின நண்பர்கள், ஒரு பாலின நண்பர்கள், பால் திரிபு நிலையாளர், பன்மொழியாளர்கள், ஆதிக்க மனம் கொண்டோர், அவர்களின் காதல், கோபம், நேசம், பிரிவு என்று அத்தனையையும் காட்டியிருக்கிறார் ரஞ்சித்.
ஒரு சாதி எதிர்ப்பு நாடகத்திற்கு எங்கிருந்தோ வரும் ஆணை; அந்த நாடகத்தைக் கலவரமாக்க கட்டுடலுடைய, வட இந்திய முகம் கொண்ட, யோகா செய்கிற ஒரு வில்லன்; அவன் நாடகத்தில் கலவரம் ஏற்படுத்த கையில் அனுமனின் கஜாயுதத்தோடு வருவது; காவல் துறையினர் வரும் பொழுது யாருக்கோ போன் செய்து "அவர்களைப் போகச் சொல்" என்று ஆணையிடுவது; காவலர்களும் போய்விடுவது; நாடகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அந்த கஜாயுதத்தால் நாடகத்தில் நடித்தவர்களை அடிப்பது; அப்பொழுது "we have culture, we have beliefs" என்று பேசுவது எல்லாம் வட இந்திய இந்துத்துவா ரவுடிகள் தமிழ் நிலத்தில் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுவதை மிக அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் ரஞ்சித்.
கதைக் களம் முழுக்க பாண்டிச்சேரியில் நடக்கிறது.
ஆனால், இறுதியில், " அடிவாங்கிய நாடக நடிகர்கள், "ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி" அந்த வட இந்திய ரவுடியை அடித்துத் துவம்சம் செய்து துரத்துவதோடு முடிகிறது படம். உண்மையில் நடக்கப் போவதும் இதுதான்.
இது உண்மையான படைப்பிலக்கிய கலைப் படைப்பு.
என்னை ஆட்கொள்ள வைத்த வசனம்:
" ஊரின் கடைசியில் (சேரிகள்) இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நான் (சேரிகள்) முதலில் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கின்றேன்".
என்னுடைய சொந்த கிராமமான வெள்ளூரில் முதலில்தான் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக