மாலை மலர் : வேட்பு மனுவை வாபஸ் பெறுமாறு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்- சசிதரூர் பேட்டி
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி.சசிதரூர் போட்டியிடும் நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.சுதாகரன், மற்றொரு வேட்பாளர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் வந்த சசிதரூர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
எனது வேட்பு மனுவை வாபஸ் பெற வலியுறுத்துமாறு, ராகுல் காந்தியிடம் சில கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதை அவரே என்னிடம் தெரிவித்தார். கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி இருக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருவதை அவர் (ராகுல் காந்தி) எனக்கு நினைவு கூர்ந்தார். இந்த தேர்தலில் போட்டியிட்டவர்களை வாபஸ் பெறச் சொல்ல மாட்டேன் என்று என்னிடம் அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் பெரிய தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவையும் நான் எதிர்பார்க்கவில்லை, உண்மையில், நான் நாக்பூர், வார்தா மற்றும் ஐதராபாத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்தேன். அவர்கள்தான் என்னைப் போட்டியிடச் சொல்கிறார்கள், பின்வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள். நான் அவர்களிடம் பின்வாங்க மாட்டேன் என்று உறுதியளித்தேன்.
இதுவரை எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் எனக்கு பலத்தை அளிக்கிறது. எனது ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் இளம் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள். அனைவரின் ஆதரவும் எனக்கு தேவை, யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.
யார், யாருக்கு வாக்களிப்பாளர்கள் என்பது யாருக்கும் தெரியாது. தங்கள் விருப்பம் மற்றும் நம்பிக்கைக்கு ஏற்ப வாக்களிக்கலாம். யார் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்து, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவரை தயார்படுத்தலாம். இவ்வாறு சசிதரூர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக