திங்கள், 3 அக்டோபர், 2022

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் .சோனியா , பிரியங்கா .கர்நாடகாவில் நாளை இணைகிறார்கள்

 tamil.oneindia.com  -  Mathivanan Maran  :பெங்களூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரையில் அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைய உள்ளனர்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ந் தேதி இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.


தமிழகம், கேரளாவில் தமது பாதயாத்திரையை நிறைவு செய்த ராகுல் காந்தி தற்போது கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவு பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் பயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி இணைய உள்ளனர். இதற்காக இருவரும் நாளை கர்நாடகா வருகை தர உள்ளனர். நவராத்திரி பூஜையை முன்னிட்டு ராகுல் நடைபயணம் 2 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த 2 நாட்கள் ராகுல் காந்தியுடன் சோனியா, பிரியங்கா தங்க உள்ளனர்.

பின்னர் அக்டோபர் 6-ந் தேதி ராகுல் காந்தியுடன் இணைந்து சோனியாவும் பிரியங்காவும் சிறிது தொலைவு பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கின்றனர். ராகுல் காந்தி மொத்தம் 3,600 கி.மீ.தொலைவு பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தற்போது வரை சுமார் 600 கி.மீ. தொலைவை கடந்துள்ளார்.

முன்னதாக நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி நஞ்சன்கூடு தாலுகா பதனவாலு கிராமத்தில் காதி கிரமோத்யோக் மையத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். அப்போது, அண்ணல் மகாத்மா காந்தியடிகள் உயிரை கொடுத்து காப்பாற்றிய அரசியல் சாசனத்துக்கு இன்று நாட்டில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரிவினை அரசியலுக்கு எதிரான மக்களின் குரலே இந்த பாதயாத்திரை என்றார் ராகுல் காந்தி.

கருத்துகள் இல்லை: