bbc.com : சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர், பிறகு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
சென்னை அயனாவரம் ஏராங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). கடந்த 20ஆம் தேதியன்று ரயில்வே ஊழியரான பெரம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடியை கல்லால் அடித்து ஆகாஷ் உடைத்து விட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஆகாஷை ஓட்டேரி காவல் நிலைய காவல்துறையினர் கடந்த 21ஆம் தேதி பிடித்தனர்.
அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதற்குப் பிறகு அன்று இரவு 11 மணியளவில் ஆகாஷ் மதுபோதையில் மயக்க நிலையில் இருப்பதாக கூறி அவரது சகோதரியிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மயக்க நிலையில் இருந்த ஆகாஷை அவரது குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ், இன்று சிகிச்சை உயிரிழந்தார். ஆகாஷை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதால்தான் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கின் விசாரணையை எழும்பூர் நடுவர் மன்ற நீதிபதி லட்சுமி தொடங்கி உள்ளார். குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 176 (1) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள ஆகாஷின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்த நீதிபதி, தற்போது ஆகாஷின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஆகாஷ் மீது கொள்ளை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் 'C' பிரிவு ரவுடியாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்கள்
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காவல் நிலையம் தொடர்பான மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
1. 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று நகை திருட்டு வழக்கு ஒன்றில் சீர்காழியைச் சேர்ந்த சத்தியவாணன், அப்துல் மஜீத், சூர்யா ஆகியோர் தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் சத்தியவாணன் உயிரிழந்தார். விசாரணையின்போது சத்தியவாணனுக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்ததாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
2. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதியன்று பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலம் சேவல் கட்டு மூளை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை பாலியல் புகார் ஒன்று தொடர்பாக பரமத்தி வேலூர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மயக்கமடைந்து உயிரிழந்தார்.
3. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், 2021 டிசம்பர் மாதம் 4ஆம் தேதி மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் காவல் துறையினரின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு வீடு திரும்பினார். அடுத்த நாள் அதிகாலையில் அவர் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதாலேயே தங்கள் மகன் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர்.
4. திருநெல்வேலியில் ஒரு வாகனத் திருட்டு வழக்கில் விசாரணைக்காக 2022 பிப்ரவரி 5ஆம் தேதி மேலப்பாளையம் ஆமீன் புரத்தை சேர்ந்தச் சேர்ந்த சுலைமான் என்பவர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, மயங்கி விழுந்ததாகவும் பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
5. 2022 ஏப்ரல் 18ஆம் தேதி சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் 25 வயதுடைய விக்னேஷ் என்பவர் உயிரிழந்தார். புரசைவாக்கத்தில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரும் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு போலீஸ் காவலில் இருக்கும்போதே விக்னேஷ் மரணமடைந்தார். இந்த நிகழ்வில், விக்னேஷின் குடும்பத்தினர் கடுமையாக மிரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
6. திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி ஏப்ரல் 26ஆம் தேதி காலை திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் ஏப்ரல் 27ஆம் தேதி காலையில் திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தங்கமணிக்கு வலிப்பு ஏற்பட்டதாக அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு 9 மணி அளவில் தங்கமணி உயிரிழந்ததாக உறவினர்களிடம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
7. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற அப்புவை ஜூன் 11ஆம் தேதி இரவு நகை திருட்டு தொடர்பான ஒரு வழக்கின் விசாரணைக்காக காவல் துறையினர் அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்றனர். அவரை பழைய கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து கொண்டிருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் மயங்கி விழுந்ததாகவும் இதையடுத்து அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக