tamilmurasu.com.sg : இந்தியாவின் மெய்டன் பார்மசியூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த இருமல் மருந்துகள் சிறார் உடலில் சிறுநீரகத்தைக் கடுமையாக பாதித்துவிடக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. மரணங்களுக்கும் மருந்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டும் அறிக்கையை தன்னிடம் தாக்கல் செய்யும்படி உலக சுகாதார நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. படம்: உலக சுகாதார நிறுவனம்
இந்தியாவின் மெய்டன் பார்மசியூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த இருமல் மருந்துகள் சிறார் உடலில் சிறுநீரகத்தைக் கடுமையாக பாதித்துவிடக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் டஸன் கணக்கான சிறார்கள் மாண்டுவிட்டனர். அந்த மரணங்களுக்கும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு நிறுவனத்தின் இருமல் மருந்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து இந்தியா தனது புலன்விசாரணையைத் தொடங்கி இருக்கிறது. இந்தியாவின் சுகாதார அமைச்சை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இந்த விவரங்களைத் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறி இருக்கிறது.
இவ்வேளையில், காம்பியா மரணங்கள் தொடர்பில் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு தலைமை அலுவலகத்தோடும் புதுடெல்லியில் செயல்படும் ‘மெய்டன் பார்மசியூட்டிக்கல்ஸ்’ என்ற நிறுவனத்தோடும் தொடர்புகொண்டு உலக சுகாதார நிறுவனம் புலன்விசாரணை நடத்தி வருவதாக அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் புதன்கிழமை தெரிவித்தார்.
மெய்டன் அந்த இருமல் மருந்தைத் தயாரித்து மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்ததாக அந்த இந்திய அதிகாரிகள் கூறினர்.
காம்பியா மரணங்களுக்கும் இந்திய இருமல் மருந்துக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய அறிக்கையைத் தனக்கு அனுப்பும்படி உலக சுகாதார நிறுவனத்திடம் இந்திய அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது.
இந்த விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இநதிய அரசு உறுதி கூறி இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் முன்னதாக ஓர் எச்சரிக்கையை விடுத்தது. மெய்டன் நிறுவனத்தின் நான்கு வகை இருமல் மருந்துகளைச் சந்தையில் இருந்து அகற்றிவிடும்படி ஒழுங்குமுறை அமைப்புகளை அது கேட்டுக்கொண்டது.
அந்த மருந்துகள் சாதாரண சந்தைகளின் வழியாக பல இடங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு இருக்கக்கூடும்.
இருந்தாலும் இதுவரையில் காம்பியாவில் மட்டுமே நிலவரங்கள் தெரியவந்து இருக்கின்றன என்று அந்த எச்சரிக்கையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அந்த இருமல் மருந்தில் சிறுநீரகத்தைப் பாதித்துவிடக்கூடிய ரசாயனப் பொருள்கள் ஏற்றுக்கொள்ள இயலாத அளவுக்கு இருக்கிறது என்று ஆய்வுக்கூட பகுப்பாய்வுகள் மூலம் தெரியவந்து இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சிறார்கள் பலருக்குப் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து காம்பியா மருத்துவ அதிகாரிகள் ஜூலை மாதம் அபாயச் சங்கு ஊதினர்.
அந்த மருந்து காம்பியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரச் சேவை இயக்குநர் டாக்டர் முஸ்தபா பிட்டாயே கூறினார்.
காம்பியாவில் இதுவரை 66 சிறார்கள் மாண்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வயது 5க்கும் கீழ் என்று தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக