Kalai
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதுரவாயல் – துறைமுகம் சாலைத் திட்டம் 2024 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலத்தில், நெடுஞ்சாலை,நீர்வளம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அமைச்சர்கள் எ.வ வேலு, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “பருவமழைக்கு முன்னரே வடிகால்கள் மற்றும் இதர முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகிறோம்.
10 சதவீத பணி மீதமுள்ளது. அதனால் கூட பிரச்சினை வரக்கூடாது என பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம்.
நீர்மேலாண்மைத் துறையின் பராமரிப்பில் உள்ள கால்வாய் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலம் முடிந்த பின்னர் பக்கிங்காம் மற்றும் கூவம் கால்வாய் பராமரிப்பில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்ட சாலை என்பது கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, ஒன்றிய அரசின் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் தலைமையில் ரூ. 1000 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் அந்தத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், ஒன்றிய அரசிடம் மீண்டும் அந்தத்திட்டம் குறித்துப் பேசி அதை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தினார்.
ஒன்றிய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியும், மாநில அரசு ஒத்துழைப்பு தந்தால் பணிகளை விரைவில் முடிப்பதாக உறுதி அளித்தார்.
அதன்படி மதுரவாயல் – துறைமுகம் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது. எனவே இந்தத் திட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எ.வ.வேலு தெரிவித்தார்.
துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டே மதுரவாயல் – துறைமுகம் இடையே இரண்டு அடுக்கு சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது.
தற்போது அந்தத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ. 5800 கோடி ஒதுக்கி பணிகள் தொடங்க இருக்கின்றன. சென்னை துறைமுகத்தின் உட்புறத்தில் தொடங்கும் இந்த சாலை மதுரவாயலில் முடிவு பெறுகிறது.
முதலில் 6 வழிபாதையாக திட்டமிடப்பட்டு தற்போது 4 வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
இதில் துறைமுகம் முதல் கோயம்பேடு வரை 2 அடுக்கு சாலையாகவும், கீழ் அடுக்கில் கார், இருசக்கர வாகனங்கள் செல்லவும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் கனரக வாகனங்கள் செல்லவும் வகை செய்யப்பட்டுள்ளது.
20.56 கிலோ மீட்டர் நீளத்தில் 4 வழிப்பாதையாக அமைக்கப்பட உள்ள இந்த உயர்மட்ட சாலைப்பணிகள் 2024 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி நேற்று(அக்டோபர் 3) தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக