தேசம் நெட் - அருண்மொழி : விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறை அவசியம் என கோர் குழு வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக 19 அம்ச தீர்மானத்தை முன்வைத்து கோர் குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
உயர் ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள் பேரவையின் விசேட நடைமுறைகளுடன் இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாட்டை வரவேற்ற குறித்த குழு, அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை, எரிபொருளில் தட்டுப்பாடு, அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை மற்றும் வீட்டு வருமானம் குறைப்பு போன்றவற்றின் விளைவாக பொருளாதார நெருக்கடியின் மனித உரிமைகள் தாக்கம் பற்றி கோர் குழு கவலை வெளியிட்டுள்ளது.
இராணுவமயமாக்கல் நடவடிக்கை, முக்கிய நிறுவனங்களின் சுதந்திரம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு தொடர்பாகவும் கோர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமைகளின் பாரதூரமான மீறல்களுக்கான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ள குறித்த நாடுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச் செயல்களுக்கும், உடனடி, முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை
அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் பயனுள்ள மற்றும் சுயாதீனமான செயற்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் ஊழல்களை விசாரிப்பது உட்பட, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக