நக்கீரன் ''இது இந்தியா... 'ஹிந்தி' யா என பிளவுபடுத்த முயல வேண்டாம்''- அமிஷ்த்தாவிற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
தமிழ் உள்ளிட்ட மொழிகளை இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள அலுவல் மொழியான இந்தியைக் கற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ''தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும். தற்போது இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை உங்கள் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் 'உள்ளூர் மொழிகளை' இந்திக்கு இணையாக மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவியுங்கள். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை அலுவல் மொழிகளாக்கி இந்தி தினத்திற்கு பதில் இந்திய மொழிகள் நாள் என கொண்டாடப்பட வேண்டும்.
பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டுக்கு நேர் எதிரானது அமைச்சரின் கருத்து. இந்தியாவின் வரலாறும், பண்பாடும் இந்தி மொழியில் புதைந்திருக்கவில்லை. தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் தனித்தன்மை மிக்க மொழிகளை காற்பதற்காக அரசியல் சட்டத்தின் வழியே போடப்பட்ட வேலிதான் இணை அலுவல் மொழி என்கின்ற ஆங்கிலம். உள்ளூர் மொழிகள் மீது மத்திய அரசிற்கு உண்மையில் அக்கறை இருக்குமானால் இந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு இணையாக தமிழ் உள்ளிட்ட மொழிகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கலாம். இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா அதனை 'ஹிந்தி' யா என்ற பெயரில் பிளவுபடுத்திப் பார்க்க முயற்சிகள் வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக