புதன், 14 செப்டம்பர், 2022

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மாலை மலர்  :  புதுடெல்லி: தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
நரிக்குறவர், குருவிக்காரர் என அழைப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி அர்ஜூன் முண்டா கூறியுள்ளார்.
சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் - குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த பிரதமர் மற்றும் மோடி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோருக்கு தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

1965ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டி நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. தமிழக பாஜகவின் தொடர் முயற்சியாலும், நரிக்குறவர் மக்களின் நீண்ட கால கோரிக்கையையும் மனதில் கொண்டு பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், இந்த மகத்தான முடிவு நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு சம உரிமையையும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: