tamil.goodreturns.in - Prasanna Venkatesh : புதிய ஜிஎஸ்டி விதிகளின்படி, ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்யப்பட்டோர் ஒரு வீடு, அலுவலகம் என எந்தச் சொத்தை வாடகைக்கு எடுத்தாலும் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியைச் செலுத்த வேண்டும்,
இந்தப் புதிய வரி ஜூலை 18 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்புகளும், தொடர்ந்து செய்யப்பட்டு வரும் மாற்றங்களும் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த நிலையில் வீடு, அலுவலகத்திற்கான வாடகை பேமெண்ட்-ல் தற்போது ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டு உள்ளது.
இப்புதிய விதி மாற்றத்தால் யாருக்கு நஷ்டம்..? யாருக்கு லாபம்..? மத்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் என்ன தெரியுமா..?
ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குத்தகைதாரர் அல்லது வாடகைதாரர்களுக்கு மட்டுமே வாடகைக்குச் செலுத்தப்படும் 18 சதவீத வரியானது பொருந்தும். அதாவது வணிகம் அல்லது தொழிலை மேற்கொள்ளும் நபர் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில், வீடு அல்லது அலுவலகத்தின் உரிமையாளருக்குச் செலுத்தும் வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
ரீடைல் வர்த்தக இடங்கள்
முன்னதாக, அலுவலகங்கள் அல்லது ரீடைல் வர்த்தக இடங்கள் போன்ற வணிகச் சொத்துக்களுக்கு அளிக்கப்படும் வாடகை அல்லது குத்தகை தொகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் வீட்டு மனைகளின் வாடகை அல்லது குத்தகைக்கு ஜிஎஸ்டி இல்லாமல் இருந்தது.
ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்
ஆனால் புதிய விதிகளின்படி, ஜிஎஸ்டி-யில் பதிவுசெய்யப்பட்ட குத்தகைதாரர் அல்லது வாடகைதாரர், ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசத்தின் (ஆர்சிஎம்) கீழ் வாடகை மற்றும் குத்தகை தொகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டும். குத்தகைதாரர் அல்லது வாடகைதாரர் இந்த வரி தொகையைத் தங்களது உள்ளீட்டு வரிக் கிரெடிட் மூலம் ஜிஎஸ்டி வரி விலக்காகக் கோரலாம்.
18 சதவீத வரி
குத்தகைதாரர் அல்லது வாடகைதாரர் ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்து, ஜிஎஸ்டி வருமானத்தை வரி தாக்கல் செய்யும்போது மட்டுமே இந்த 18 சதவீத வரி பொருந்தும். இதனால் சொத்தின் உரிமையாளர் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியதில்லை.
வாடகை அல்லது குத்தகை
ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டத்திற்குப் பிறகு அமல்படுத்தப்பட்ட புதிய மாற்றங்கள் மூலம் வாடகை அல்லது குத்தகைக்கு வீடுகளை எடுத்துள்ள நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களைப் பாதிக்கும். இதனால் சாமானிய வீட்டு உரிமையாளர்கள் மற்றும் மாத சம்பளக்காரர்களுக்கு எவ்விதமான பாதிப்பு இல்லை.
நிறுவனங்களுக்குத் தான் பாதிப்பு
விருந்தினர் இல்லங்கள் அல்லது ஊழியர்களுக்கான குடியிருப்புகளாகப் பயன்படுத்த வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு நிறுவனங்கள் செலுத்தும் வாடகைக்கு இப்புதிய வரி மாற்றங்கள் மூலம் இனி 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். நிறுவனங்களின் செலவுகளைத் தான் அதிகரிக்கும்.
மத்திய அரசு விளக்கம்
இதேபோல் வீடுகளைத் தனிநபர்களின் சொந்த பயன்பாட்டுக்காக வாடகை அல்லது குத்தகைக்கு விடும் பட்சத்தில் ஜிஎஸ்டி வரி பொருந்தாது என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இதேபோல் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் சொந்த பயன்பாட்டுக்காக வாடகை அல்லது குத்தகைக்கு எடுக்கும் வீட்டுக்கும் ஜிஎஸ்டி வரி இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக