இதற்கான பதிலை ஒற்றை வரியில் சொல்ல முடியாது.
தனி நபர் சார்ந்து பார்க்க வேண்டிய விவகாரமல்ல, இது!
சற்று ஆழமான புரிதலோடு அணுக வேண்டிய விவகாரமாகும்!
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவசரப்பட்டு உள்ளது!
”இந்தக் கைது ஏற்புடையதல்ல” என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.
சவுக்கு சங்கர் கைதின் வழியாக ஜனநாயகத்திற்கான வெளியை நீதிமன்றம் முற்றிலும் முடக்க முன்னெடுக்கும் வாய்ப்புகள் தொடர ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது! நான் கைது செய்யப்பட்ட போது சவுக்கு சங்கர் அதை மிக, மிக நியாயமான நடவடிக்கை என்றார். ”பத்திரிகை சுதந்திரம் என்று தட்டை தூக்கிட்டு வருவாங்க. ரெண்டு மிதிமிதிச்சி விடுங்க” என டிவிட் போட்டிருந்தார்! அதில் எனக்கு தனிப்பட்ட வருத்தம் எதுவுமில்லை.
உண்மையில் சங்கரோடு எனக்கு பல வருடங்களாக அறிமுகம் உண்டே தவிர, நட்பு இருந்ததில்லை. பகையும் இல்லை.
ஜீஸ்கொயர் விவகாரத்தில் அவர் மீது எப்.ஐ.ஆர் போட்டதற்காக எதிர்ப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்ட நிகழ்வில் நானும் பங்கெடுத்தேன். அன்று என்னிடம் சங்கர் தன்னுடைய யூடியூப் சேனலுக்காக என்னை ஒரு பேட்டி எடுக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்திருந்தார். நான் அதற்கு இசைவும் தெரிவித்து இருந்தேன்.
சவுக்கு சங்கர் தன் நேர்காணல்கள் பலவற்றில் நியாயத்தின் பக்கம் நின்றும், சமூக நீதியின் பால் அக்கறை கொண்டும் பேசி வருவது பல நேரங்களில் என்னையும் ஈர்த்துள்ளது. அதனால் தான் முதன்முதலாக நீதிபதி ஜீ.ஆர்.சுவாமிநாதன் சங்கரை கோர்டுக்கு அழைத்த போது நான் கோபப்பட்டேன். ‘சங்கருக்கு ஆதரவாக நாம் ஏதாவது செய்தாக வேண்டுமே’ என சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவர் மணிமாறன் மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றத் தலைவர் பாரதி தமிழன் இருவரையும் தொடர்பு எடுத்துப் பேசினேன்.
நான் அவ்வளவு வேகப்பட்டதற்கான காரணம் நீதிபதி ஜீ.ஆர்.சுவாமிநாதன் அவர்கள், மாரிதாஸ் விவகாரத்தில் தன் சார்பு நிலையை கூச்சமின்றி வெளிப்படுத்தி தீர்ப்பு தந்திருந்தார். அது தொடர்பாக நான் அப்போது, ”பதில் இல்லை? பதற்றம் ஏன் நீதியரசரே?” என்ற கட்டுரை ஒன்றையும் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக ஆவேசமாக எழுதிவிட்டேன். நிறுத்தி வைக்கப்பட்ட அந்தக் கட்டுரையின் சிறு பகுதியை கீழே தருகிறேன்.
ஏன் இந்த பதற்றம்? எதற்கிந்த கோபம்? சவுக்கு சங்கர் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். சங்கர் எழுப்பி உள்ள எந்தக் குற்றச்சாட்டுக்கும் நீதிபதியிடம் பதிலும் இல்லை, விளக்கமும் இல்லை. ஆனால், அதிகாரத்தின் சக்தியை உணர்த்த துடிக்கிறார்!
சங்கரின் சமூக வளைதள பதிவுகள் தொடர்பாக பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். என்றும் காட்டமாக வெளிப்பட்டு உள்ளார் நீதிபதி.சங்கர் மீது இது வரை பெற்ற புகார் விவரங்களை பிரமாணப் பத்திரமாக உரிய அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும். தகவல் தொழில் நுட்பத் துறை செயலாளர் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறேன். என்று பொங்கியுள்ளார் நீதிபதி ஜி.ஆர்.எஸ்!
மேற்படியானவை அந்தக் கட்டுரையின் முதல் இரண்டு பாராக்களாகும்! இந்தக் கட்டுரையை எழுதி முடித்த போது எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது!
மாரிதாஸ் விடுதலைக்கான தீர்ப்பு வழங்கும் முன்பு ஒரு நாள் காலை ஆறு மணிக்கு அழகர் கோவிலில் யாரை சந்தித்தீர்? என நீதிபதி ஜீ.ஆர்.சுவாமி நாதன் படத்தைப் போட்டு சவுக்கு சங்கர் டிவிட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்?
உண்மையிலேயே மாரிதாஸ் விஷயமாக ஏதோ ஒரு சந்திப்பு நீதிபதிக்கும், மாரிதாஸ் தரப்புக்கும் இடையே நடந்துள்ளது என்பதால் தான் சங்கர் இப்படி எழுதி இருப்பாரோ? இதை அவரிடமே கேட்டால் என்ன? என யோசித்து சங்கருக்கு இரண்டு முறை தொலைபேசி செய்தும் அவர் எடுக்கவில்லை. ‘இதற்கான திருப்திகரமான விளக்கம் கிடைக்காமல் நீதிபதிக்கு எதிராக இந்த கட்டுரையை பிரசுரிப்பது சரியாக இருக்காது’ என நிறுத்தி வைத்து விட்டேன்.
ஆனால், இது தொடர்பாக ஒரு சேனலில் சங்கர் பேட்டி தந்த போது தான் தெரிந்தது. நீதிபதி அப்படி சந்தேகப்படத்தக்க வகையில் யாரையும் சந்திக்கவில்லை. ஜீ.ஆர்.சுவாமிநாதன் காலை நேரங்களில் அவ்வப்போது அழகர் கோவில் செல்வார் என்ற ஒரு தகவலை வைத்துக் கொண்டு அவர் மீது சந்தேக நிழலை கட்டமைத்து விட்டார் சவுக்கு சங்கர் என்பது!
நிஜத்தில் நான் அதிர்ந்து போனேன்! பிறகு தான் சற்று நிதானமாக சங்கரை கவனிக்கத் தொடங்கினேன்!
தன்னிடம் ஏதோ ஆதாரம் இருப்பது போல அடித்துப் பேசுவது! ”எங்கே காட்டு” என்றால் நழுவுவது! பொய் சொல்வதில் அவருக்கு எந்தக் குற்றவுணர்வுமே இல்லை. இதை சத்தியம் தொலைக்காட்சி நேர்காணலில் முக்தார் நன்கு அம்பலபடுத்திவிட்டார்.
காவல்துறைக்கு பொதுவெளியில் ஏற்படும் அவப் பெயர்களை களைந்து எறிவதற்கான கருவியாக அவரை உளவுத்துறை பயன்படுத்தி வருகிறது. அவர்கள் தரப்பு நியாயங்களை பேசுவதற்கு – அதுவும் ஒரு சமூக போராளி தோரணையில் வெளிப்படுத்துவதற்கு – அவருக்கு நிகர் அவரே!
கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண விவகாரத்தில் அது தற்கொலை தான், ஸ்ரீமதியின் தயார் நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்றார். இது மட்டுமின்றி, ஸ்ரீமதிக்கு ஒரு கற்பனை காதலனை உருவாக்கிய போதும், மிக மோசமான பள்ளிக் கூட நிர்வாகிகளை வலுவாக ஆதரித்த போதும் நிலை குலைந்து போனேன். அவர் மீதான நம்பிக்கை தகர்ந்து விட்டது.
இதன் பிறகு தான் காவல்துறை தொடர்பான விவகாரங்களில் அவரது கடந்த கால செயற்பாடுகளை ஒவ்வொன்றாக பின்னோக்கி பார்த்தேன்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக அமைதியாக போராடிய மக்களில் 13 பேரை அநீதியாக போலீசார் சுட்டுக் கொன்ற போது, ”அந்த மக்கள் கூட்டத்தில் நிறைய நக்சலைட்ஸ் இருந்தனர். எனவே, அந்த துப்பாக்கி சூட்டை தவறாக பார்க்க முடியாது! போலீசார் திட்டமிட்டு சுடவில்லை, ஏதோ குறி தவறி சுட்டுவிட்டனர். அதுவும் ஒரே ரவுண்டு தான்’’ என்றார்.
தர்மபுரி திவ்யாவைக் காதலித்த இளவரசன் சாதி ஆதிக்க சக்திகளால் ரயில் தண்டவாளத்தில் தள்ளி சாகடிக்கப்பட்ட கொடூர நிகழ்வில் அதை, ”தற்கொலை தான் ” எனக் போலீசின் குரலாய் பேசியதோடு, பெரியாரிஸ்டுகள் மீது பாய்ந்து, ”பெரியாரியம் என்பதே இடைசாதியினருக்கானது. திமுக, அதிமுக இரண்டுமே தலித் விரோத கட்சிகள் தாம்’’ என்றார்.
கெளரவக் கொலையான சுவாதி கொலையில் ராம்குமாருக்கு தொடர்பு உள்ளதாக அடித்துப் பேசினார். ஆர்.எஸ்.எஸ் முக்கியஸ்தரின் மகளான சுவாதி கொலையில் தொடர்புடைய இந்துத்துவ கொலையாளிகள் குறித்து மிக நன்கு தெரிந்தும் உண்மைக்கு புறம்பாகப் பேசினார்.
பொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிகழ்வில் மவுனம் காத்தார்!
நியாயத்திற்கான குரலை உரத்து ஒலிக்கும், மாற்றத்திற்காக ஊடகவியாளர் சங்கத்தை, ”நக்சலைட் அமைப்பினர்” என்றார்.
இப்படி பல முக்கியமான தருணங்களில் அவர் அசராமல் காவல் துறையின் குரலாக, அவர்களின் பிரதிநிதியாக சமூக ஊடகங்களில் சதிராடி வந்துள்ளார்! அதாவது, அதிகார மையத்தின் குரல் தான் அவரது நிஜம்! அவ்வப்போது மக்களுக்கான குரலாக வெளிப்படுவது அவரது சாமார்த்தியம்.
சவுக்கு சங்கரிடம் நீண்ட நெடிய நட்பை பேண முடியாமல் அதிர்ந்து அவரது நட்பு வட்டத்தில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்! உதவி செய்த எவ்வளவு நெருங்கிய நண்பனையும் தீடீரென்று அதிரடியாகத் தாக்கிப் பேசி, விரோதமாக்கிக் கொள்வதும் அவரது இயல்புகளில் ஒன்று! ‘நட்புகளும் சரி, வாழ்க்கை துணையும் சரி நிரந்தரமல்ல’ என்று நம்புவதாகத் தெரிகிறது.
அடிப்படையில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் இள நிலை உதவியாளராக இருந்த அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும் தற்போதும் கூட மாதாமாதம் ஒரு பெரிய தொகையை சம்பளமாகப் பெற்று வருகிறார். 2008 ஆம் ஆண்டு வேலையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு ஏன் தொடர்ச்சியாக சம்பளம் தரப்படுகிறது?
ஏன் இதில் அதிகாரவர்க்கம் ஒரு முடிவுக்கு வரவில்லை! ஆம். ‘அவர் வெளியில் இருந்து வேலை செய்யட்டும்’ என்பதே அவர்கள் நோக்கம்! அதிகார பூர்வமான பதவி இல்லாத போதும் ஒரு வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு காவல்துறை அலுவலர் தான் சவுக்கு சங்கர்!
அரசியல் தலைவர்கள், மக்கள் இயக்கங்கள், பத்திரிகையாளர்கள் இவர்களின் செயல்பாடுகளை உளவுத் துறையின் உச்சத்தில் இருப்பவர்கள் மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ள இப்படிப் பட்டவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள்! அவரை இயக்கும் உச்ச அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் யார்? யார்? என்பது என்னைப் போன்ற மூத்த பத்திரிகையாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.
பத்திரிகையாளனுக்கான அடிப்படைப் பண்பே அதிகார மையங்களிடம் இருந்து விலகி நின்று, தாமரை இலைத் தண்ணீர் போல செயல்படுவது தான்! ஆனால், அணுப் பொழுதும் அதிகார மையங்களோடும், காவல்துறையோடும் நெருங்கி உறவாடுபவர் சவுக்கு சங்கர்.
டி.டி.வி தினகரனோடு இவருக்கு மிக நெருக்கம் உண்டு. ”கடந்த தேர்தலில் அமமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் அணி சேர்ந்து போட்டியிட வேண்டும்’’ என வன்னியரசுவிடம் வலியுறுத்தினார்.
கனிமொழியுடன் நல்ல நட்பில் உள்ளவர். அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். ஆசிரியர்கள் சம்பள உயர்வு கேட்ட போது, அன்பில் மகேஷை மகிழ்விக்க, ”ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை. தண்டமாக சம்பளம் பெறுகிறார்கள் ” என சகட்டுமேனிக்கு பேசி ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமூகத்தையே ‘கேரக்டர் அசாஷினேஷன்’ செய்தார்!
அடையார் போர்ட் கிளப்பில் உள்ள சொகுசான மதுபாரில் விஐபிக்களுடன் அவ்வப்போது மது அருந்தச் செல்வார்! அவருடைய சோர்ஸ்களுக்கான சந்திப்புகள் எல்லாமே பெரும்பாலும் மதுக் கூடங்களில் தான்! செயின் ஸ்மோக்கராக இருந்தார். மிகச் சமீபமாக உடல் நலன் கருதி இவற்றை தவிர்த்தும் வந்தார்!
ஒவ்வொரு கட்சிகளிலும் தங்களுக்கு போட்டியாக உள்ள உள்கட்சி விரோதிகளை ஒழித்துக் கட்ட விரும்புவர்கள் அதற்காக நாடுவது சவுக்கு சங்கரைத் தான்!
நேர்மைக்கு இலக்கணமாகத் திகழும் நீதிபதி ஹரிபரந்தாமன் போன்றவர்களையே இழிவாக எழுதியுள்ளார் சவுக்கு சங்கர்! இத்தனைக்கும் சவுக்கு சங்கர் முதன்முதலாக கைதான போது களத்தில் இறங்கி போராடி இருக்கிறார் ஹரிபரந்தாமன்.
நமது விமர்சனங்களில் உண்மையும், நியாயமும் இருந்தால் கூட, தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கக் கூடாது என்பது என் நிலைபாடு! அதற்கு நேர்மாறனவர் சங்கர். அவன், இவன், வாடா, போடா, போண்டா தலையா, மூடிகிட்டு உட்காரு என்பது அவர் பாணியாகும். இப்படி அதிரடியாக எடுத்தெறிந்து பேசி, தன்னை கவனப்படுத்திக் கொள்வதில் அவருக்கு ஒரு போதை இருக்கிறது என நினைக்கிறேன்.
அவர் யாரையாவது தாக்குகிறார் என்றால், அதன் பின்னணியில் மற்றொரு அரசியல்வாதி அல்லது விஐபி இருக்க வேண்டும் அல்லது உளவுத் துறையின் அசைண்மெண்டாக இருக்க வேண்டும். தமிழக உளவுத்துறை என்பது சில சமயங்களில் இந்திய உளவுத் துறையினருடனும் இணைந்தே இயங்கும். இந்தப் பின்னணியில் அவரது திமுக மீதான கடும் தாக்குதல்களை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, பரந்துபட்ட அரசியல் அறிவும், சமூக இயல்புகளை உணர்ந்து இயங்கவும் கூடிய சவுக்கு சங்கர் தமிழக உளவுத் துறைக்கு மாத்திரமல்ல, இந்திய உளவுத் துறைக்கும் மிகவும் அவசியமானவர்! அவரது திறமையையும், ஆற்றலையும் அவர்கள் வீணடிக்க மாட்டார்கள்.
அந்த வகையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உடனான சவுக்கு சங்கரின் மோதல் போக்கு சூமுகமாக முடிவதற்கான வாய்ப்புகளும் இருந்தன என எனக்கு தெரிய வந்தது! ஆனால், திடீரென்று சமூக நீதி பற்றி பேசி தன்னை சமூக போராளியாக்கி கொண்டு மோதிப் பார்த்து ஹீரோவாகலாம் என முடிவெடுத்துவிட்டார் சங்கர். நீதித்துறை குறித்து சங்கர் பேசிய கருத்துக்களில் நமக்கு உடன்பாடு உண்டு என்றாலும், அது பேசப்பட்டதற்கான நோக்கம் சரியானதல்ல. தன் மீதான குற்றச்சாட்டுகளை திசை திருப்பும் தந்திரமாகவே அவர் நீதித்துறை குறித்து விமர்சித்தார் என்பது தான் உண்மை!
ஒருவேளை சவுக்கு சங்கரை ‘சமூக நீதி ஹீரோவாக்க’ அதிகாரவர்க்கமே இந்த ஆட்டம் ஆடுகின்றதோ என்னவோ?
அதே சமயம் இந்தக் கைதை தனி நபர் சார்ந்து நாம் பார்ப்பது தவறு! சவுக்கு சங்கரின் கைது மக்கள் நலன் சார்ந்து இயங்கும் மற்ற பத்திரிகையாளர்களின் ஊடக சுதந்திரத்தை பறிப்பதாக அமைந்து விடக் கூடாது! ஆகவே, சவுக்கு சங்கர் முறையாக விசாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவரது கைது தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக