BBC Tamil : மலேசிய முன்னாள் அமைச்சரும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமான ‘துன்’ சாமிவேலு இன்று காலமானார். அவருக்கு வயது 86.
துன் என்ற மலேசிய நாட்டின் உயரிய பட்டத்தை அவர் பெற்றிருந்தாலும், அதற்கு முன் அவர் பெற்ற டத்தோ என்ற பட்டமே அவரது அடையாளமாக மாறியது. தமிழ்நாட்டில் பரவலாக அவர் டத்தோ சாமிவேலு என்றே அவர் அறியப்பட்டார்.
மலேசியாவில் நீண்ட காலம் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர் சாமிவேலு. சுமார் 29 ஆண்டுகள் நாட்டின் தொழில்நுட்பத் துறை, பொதுப் பணித்துறை உள்ளிட்ட பல அமைச்சுகளுக்கு பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்ட அவர், மலேசிய இந்திய சமுதாயத்தின் அடையாளமாகத் திகழ்ந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் பதவியில் 29 ஆண்டுகள்:
மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் இடம்பெற்று சேவையாற்றி உள்ள சாமிவேலு, தமது நீண்ட அரசியல் பயணத்தில் எதிர்கொண்ட சோதனைகள் அதிகம்.
தமிழகத்துக்கும் மலேசியத் தமிழர்களுக்கும் இடையே உறவுப்பாலமாக இருந்தவர் சாமிவேலு. காலஞ்சென்ற தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு நெருக்கமானவராக இருந்த அவர், தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் திரையுலக கலைஞர்கள், சமூகப் பிரமுகர்கள் ஆகியோருடனும் இணக்கமான உறவும் நட்பும் பேணி வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவுக்கான மலேசிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட அவர், 2010ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
மலேசியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘துன்’ விருதை சாமிவேலுவைத் தவிர மேலும் ஒரு மலேசிய இந்தியர் (தமிழர்) மட்டுமே பெற்றிருந்தார். அவர், அந்நாட்டு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சம்பந்தன் ஆவார்.
தோட்டப்புறத்தில் பால் மரம் சீவும் வேலை பார்த்தவர் சாமிவேலுவின் தந்தை சங்கிலிமுத்து. சிறு வயதில் சாமிவேலுவும் தந்தைக்கு உதவிகரமாக இருந்துள்ளார்.
ஏழ்மை காரணமாக பள்ளியில் இருந்து இடைநிற்க வேண்டிய சூழலில் அவரால் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. சிறு வயதிலேயே ஒரு சுருட்டு நிறுவனத்தில் சுருட்டு சுற்றும் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
இடைப்பட்ட காலத்தில், சமையல் உதவியாளர், பேருந்து ஓட்டுநரின் உதவியாளராகவும்கூட அவர் பணியாற்றி உள்ளார்.
எனினும், கல்வி மீதான ஆர்வத்தால் இரவு நேர வகுப்புகளுக்குச் சென்றதாக பின்னாட்களில் நாட்டின் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் கூறியதுண்டு. ஏழ்மை தனது லட்சியங்களை மாற்றியமைக்க தாம் அனுமதித்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சொந்த ஊரில் இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு குடிபெயர்ந்த பின்னர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கத் தொடங்கியவருக்கு, கட்டடக்கலை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. பின்னாட்களில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அவருக்கு இந்த அனுபவம் கைகொடுத்தது.
மலேசிய வானொலியிலும் தொலைக்காட்சிஅலைவரிசையிலும் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவர் சாமிவேலு. அதற்கு முன்பு அலுவலக உதவியாளராகவும் வேலை பார்த்துள்ளார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், பின்னர் மலேசிய அரசியல் களத்தில் கால்பதித்து, அங்குள்ள இந்திய வம்சாவளியினரைப் பிரதிநிதித்துவபடுத்தி அந்நாட்டு அமைச்சரவையில் இடம்பெற்றார். சாமிவேலு நாடகக் கலைஞரும் ஆவார். தமிழ்ப் பற்றாளரான அவர், தமது உணர்ச்சிமிகு அரசியல் உரைகளால் மலேசியத் தமிழர்கள் மத்தியில், குறுகிய காலத்தில், முக்கியத் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
1974ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் என்ற நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி சார்பாக, அதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சாமிவேலு. அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அத்தொகுதியில் வெற்றி பெற்று வந்தார்.
மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியாக மலேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த மஇகாவில் (மலேசிய இந்திய காங்கிரஸ்) 1960ஆம் ஆண்டு தம்மை இணைத்துக்கொண்டார் சாமிவேலு. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் மஇகா கிளை செயலாளராகவும், பின்னர் மத்திய செயலவை உறுப்பினராகவும் தேர்வானார்.
இதையடுத்து, மஇகா தேசிய கலாசாரப் பிரிவுத் தலைவராக கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டார். சாமிவேலுவுக்கு கட்சியில் எந்த அளவுக்கு ஆதரவு இருந்ததோ, அதற்கேற்ப எதிர்ப்பாளர்களும் இருந்தனர்.
பின்னாட்களில் கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்தபோது, அதைப் பயன்படுத்திக் கொண்டார் சாமிவேலு. லண்டனுக்குச் சென்று கட்டடக் கலை தொடர்பான படிப்பை மேற்கொண்டார்.
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், தேசிய உதவித் தலைவர் – துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட்டு கடும் சவால்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றார்.
மஇகா, மலேசியாவில் தொடர்ந்து ஆட்சியில் இருந்த தேசிய முன்னணிக் (பாரிசான் கூட்டணி) கூட்டணியில் அங்கம் பெற்றிருந்ததால், சாமிவேலுவுக்கு மத்திய அரசில் துணை அமைச்சர் பதவி கிடைத்தது.
கட்சியின் துணைத்தலைவர் என்பதால், துணை அமைச்சராக 1978இல் நியமிக்கப்பட்ட நிலையில், 1979ஆம் ஆண்டு கட்சியின் அன்றைய தேசியத் தலைவர் மாணிக்கவாசகம் காலமான பிறகு, முழு அமைச்சராகவும் வாய்ப்பு கிடைத்தது.
அன்று முதல் 2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடையும் வரை, கட்சியிலும் அரசாங்கத்திலும் சாமிவேலு ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் துணைநின்றவர்:
தமிழுக்கு இணையாக மலாய் மொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் சாமிவேலு. மலாயில் சரளமாகப் பேசக்கூடியவர் என்பதால், மலாய்க்காரர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகமான தலைவராக உருவெடுத்தார்.
நாடாளுமன்றத்தில் தமது அமைச்சு சார்ந்த பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு, மலாய் மொழியில் ஆணித்தரமாகப் பதிலளிப்பார் சாமிவேலு. அதே சமயம் மலேசிய இந்திய வம்சாவளியினர், குறிப்பாக தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திடம் வெளிப்படையாக கோரிக்கைகளை முன்வைத்தவர்.
MIED, Aimst ஆகிய இரு பல்கலைக்கழகங்களை நிறுவினார். Tafe என்ற கல்லூரியையும் தொடங்கி வழிநடத்தியதன் மூலம், இந்திய வம்சாவளி மாணவர்கள் பயனடைந்தனர்.
“மலேசியாவில் நடைபெற்ற அனைத்து உலகத் தமிழ் மாநாடுகளும் சிறப்பாக நடைபெற துன் சாமிவேலு பேருதவியாக இருந்தார். மலேசிய தமிழ் எழுத்தாளர்கள், இசை நடனக் கலைஞர்களுக்கு விருதுகளும் பொருளுதவியும் அளித்துள்ளார்.
“அமைச்சரவைக் கூட்டங்களில் இந்திய சமூகத்தின் கோரிக்கைகள் குறித்து வலுவாக வலியுறுத்துவார். இந்தியர்களுக்கான திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இவர் முன்வைக்கும் கோரிக்கைகளை பிற இனங்களைச் சார்ந்த அமைச்சர்கள் ஏற்கும் வரை தொடர்ந்து போராடுவார்,” என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மலேசிய அமைச்சரவையில், 29 ஆண்டுகள் அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார் சாமிவேலு.
ஜூன் 1983 முதல் ஜூன் 1989 வரை பொதுப்பணி அமைச்சராக பணியாற்றினார். மேலும் மே 1995 முதல் மார்ச் 2008 வரை மீண்டும் அவரிடம் அதே பொறுப்பு வழங்கப்பட்டது.
ஜூன் 1989 முதல் மே 1995 வரை எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகவும், மலேசிய பொதுப் பணி பொதுவசதிகள் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இந்த காலகட்டங்களில் சர்ச்சைகள், அரசியல் மோதல்களைக் கடந்து அன்றைய மலேசிய பிரதமர்களின் ஆதரவு அவருக்கு கிடைத்தது.
மலேசியாவின் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தியவர்
மலேசிய பொருளாதாரம் 1980களில் மேம்பாடு கண்டபோது, நாடு முழுவதும் சாலைப் போக்குவரத்தைக் கட்டமைக்கும் பொறுப்பை ஏற்றார் சாமிவேலு. பொதுப்பணி அமைச்சராக அவர் பொறுப்பு வகித்த காலகட்டத்தில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மிகத்தரமான, நேர்த்தியான சாலைகள் போடப்படுவதை அவர் உறுதி செய்தார்.
சாமிவேலுவின் மறைவையொட்டி, மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் வெளியிட்ட இரங்கல் செய்தியில், மலேசிய சாலைப்போக்குவரத்தின் தரத்தை சாமிவேலு உயர்த்தியதை நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும் இந்திய சமூகத்தின் கல்வி நிலை மேம்பட அவர் மேற்கொண்ட பணிகளைப் பாராட்டிய மலேசியப் பிரதமர், இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்காக சாமிவேலு கடுமையாக உழைத்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்துடன் நீடித்த ஆழமான தொடர்புகள்:
தமது அரசியல் பயணத்தைத் தொடங்கியது முதலே, தமிழ்நாட்டுடன் பல்வேறு வகையிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அவற்றை வலுவாக கட்டமைத்துக் கொண்டார் சாமிவேலு.
தமிழக அரசியல் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்களுடன் அவருக்கு அணுக்கமான தொடர்புகள் இருந்தன.
மலேசியாவில் பல்வேறு கலை, இலக்கிய, சமூக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர்களை அழைத்து வந்து கௌரவித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது அவருக்கு அளவற்ற அன்பும் மரியாதையும் இருந்ததாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சென்னைக்கு வரும் சமயங்களில் எல்லாம், அவர் கருணாநிதியைச் சந்திக்கத் தவறியதில்லை. அதே சமயம், ஜெயலலிதா உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற தலைவர்களுடனும் மலேசிய அமைச்சர் என்ற வகையில் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
2001ஆம் ஆண்டில் தமிழகத் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி, முரசொலி அறக்கட்டளையின் சார்பில் சாமிவேலுவிற்கு ‘கலைஞர் விருது’ வழங்கிச் சிறப்பு செய்தார்.
சர்ச்சைகளும் அரசியல் வீழ்ச்சியும்
2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்டார் சாமிவேலு. அதன் பிறகு அவரது அரசியல் வீழ்ச்சி தொடங்கியது என்றும், அவரைச் சூழ்ந்திருந்த சர்ச்சை வளையத்தில் இருந்து விடுபட முடியவில்லை என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்கத்தின் பல்வேறு மானியங்கள் மக்களைச் சென்றடையவில்லை என்பது சாமிவேலு எதிர்கொண்ட மிகப்பெரிய குற்றச்சாட்டாக அமைந்தது.
மலேசியத் தமிழர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர் உரிய வகையில் தீர்வுகாண தவறிவிட்டதாகவும் ஒருதரப்பினர் கூறினர். ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் போராட்டம் வெடித்தபோது, அதை சாமிவேலு சரிவரக் கையாளவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
மேலும், தமது தலைமைத்துவத்தின்போது மஇகாவில் சாதி சார்ந்த அரசியலை அவர் ஊக்குவித்தார் எனும் குற்றச்சாட்டும் உண்டு.
ஒரு காலகட்டத்தில், முன்னாள் பிரதமர் மகாதீரின் நம்பிக்கைக்குரிய இந்திய சமூகத் தலைவராக இருந்தார் சாமிவேலு. எனினும், பின்னாட்களில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக மோதிக்கொள்ளும் வகையில் மலேசிய அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. அப்போது சாமிவேலு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார் மகாதீர். அவற்றுக்கு சாமிவேலுவும் பதிலடி கொடுத்தார் என்றாலும், இந்திய சமூகத்துக்கான அரசாங்கத்தின் மானியங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க சாமிவேலு தவறிவிட்டார் என்றும், இந்திய சமூகத்துக்குப் போதுமான அளவு நிதி ஒதுக்கப்பட்டது என்றும் மகாதீர் பகிரங்கமாக குற்றம்சாட்டியது அரசியல் களத்தில் சாமிவேலுவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு தெற்காசியாவுக்கான மலேசிய சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்ட போதிலும், தமது அரசியல் நடவடிக்கைகளைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு, பின்னர் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார் சாமிவேலு.
நன்றி: பீபீசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக