வெள்ளி, 24 ஜூன், 2022

ஜெர்மன் உதவியுடன் 100 மின்சார பேருந்துகள் வாங்க தமிழக அரசு தீர்மானம்

மாலைமலர் : : சென்னை மாநகரில் புதிதாக 100 மின்சார பேருந்துகள்  இயக்கப்பட உள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்குவதற்காக இந்த 100 மின்சார பஸ்களை வாங்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
ஜெர்மனி வங்கியின் நிதி உதவியுடன் இந்த பேருந்துகள்  வாங்கப்படுகின்றன.
 இதற்காக டெண்டரும் விடப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்டவையாக இருக்கும்.
இதில் 36 பேர் அமரும் வசதி கொண்டது. சக்கர நாற்காலியில் சென்று அமரக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு இருக்கையும் இதில் அடங்கும்.


பேருந்துகளின்  படிக்கட்டின் உயரத்தை தரையில் இருந்து 400 மில்லி மீட்டர் உயரத்துக்கும் குறைவாக வைத்திருக்குமாறு டெண்டர் எடுப்பவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் பயணிகள் எளிதாக பேருந்துகளில் ஏறவோ, இறங்கவோ முடியும். மேலும் சக்கர நாற்காலியை ஏற்றிச்செல்லும் வகையில் சாய்வு தளம் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்,
டெல்லி, மும்பை, புனே ஆகிய நகரங்களுக்கு அடுத்த படியாக சென்னை நகரம் தான் கடைசியாக மின்சார வாகன பயன்பாட்டில் இணைந்துள்ளது.
மாநில அரசு இந்த செயல்முறையை விரைவுபடுத்தும் என நம்புகிறோம்' என்றார். இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
2023-ம் ஆண்டு முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்  இயங்க தொடங்கும்.
முதலில் 100 பேருந்துகள்  வாங்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இயக்குவதற்கு 2024-ம் ஆண்டுக்குள் மேலும் 400 பேருந்துகள்  வாங்கப்படும்.
மின்சார பேருந்துகளை சார்ஜிங் செய்வதற்கான கட்டமைப்பு மாடல்களை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யவில்லை. 2 வகைகளில் சார்ஜிங் வசதி இருக்கும். முதல் வகையில் ஒரே இரவில் சார்ஜிங் செய்யப்படும். மற்றொரு வகையில் ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் 10 முதல் 30 நிமிடங்கள் சார்ஜிங் செய்யப்படும். இதில் டெண்டர் மதிப்பீட்டுக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்' என்றார்.

கருத்துகள் இல்லை: