திங்கள், 20 ஜூன், 2022

30 ஆயிரம் அடி உயரத்துல பறந்தபோது விமானத்துக்குள்ள பெய்த மழை.. உறைந்துபோன பயணிகள்..!

BBC : இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட விமானம் ஒன்றில், திடீரென கேபினில் இருந்து தண்ணீர் வழிந்து ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
இங்கிலாந்தின் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.40 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று கிளம்பியிருக்கிறது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு சென்ற விமானத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
ஆனால், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் விமானம் பத்திரமாக வாஷிங்டனில் தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் அறிவித்திருக்கிறது.
மழை போல பெருக்கெடுத்த தண்ணீர்
இங்கிலாந்தில் இருந்து கிளம்பி சனிக்கிழமை அமெரிக்கா சென்ற இந்த விமானத்தின் கேபினில் இருந்து தண்ணீர் வழிய துவங்கியிருக்கிறது.
இதனால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். சற்று நேரத்தில் எகானமி வகுப்பு பயணிகளுக்கான படிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது.

இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த பயணிகளை பத்திரமாக வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று அமர வைத்திருக்கிறார்கள் அந்த விமானத்தின் பணியாளர்கள்.

விமானத்தின் பின்புறத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து வழிந்ததை அடுத்து, தொழில்நுட்ப பணியாளர்கள் தண்ணீர் சேகரிப்பு வால்வில் ஏற்பட்ட கோளாறை கண்டுபிடித்து சரி செய்திருக்கின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்,” பாதுகாப்பு குறைபாடு என்ற வாதத்திற்கே வேலையில்லை. தண்ணீர் சேகரிப்பு யூனிட்டில் ஏற்பட்ட சிக்கல் தான் இந்த சம்பவத்திற்கு காரணம். இதுவரையில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் எதிர்கொண்டதில்லை” என்றார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஏர்பஸ் 380 ஜெட் இரண்டு தளங்களை கொண்டதாகும்.

இதில் மொத்தமாக 500 பேர் வரை பயணிக்கலாம். இந்த சம்பவம் குறித்து பேசிய விமான பணியாளர் ஒருவர்,”என்னுடைய அனுபவத்தில் நான் இதுபோன்ற ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை.

ஆனால், பயணிகளை பாதுகாக்க நாங்கள் வேண்டிய முயற்சிகளை எடுத்தோம். அதிஷ்டவசமாக தண்ணீர் சேகரிப்பு பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு உடனடியாக சரி செய்யப்பட்டது” என்றார்.

30,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த வேளையில் திடீரென கேபினில் இருந்து தண்ணீர் கொட்டிய சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: