Sathyaperumal Balusamy : எம்.எஸ்.சுப்புலட்சுமி, என்.சி.வசந்தகோகிலம், டி.கே.பட்டம்மாள், கே.பி.சுந்தராம்பாள், யு.ஆர்.ஜீவரத்தினம், பி.ஏ.பெரியநாயகி, ராவு பால சரஸ்வதி, பி.பானுமதி, எஸ்.வரலக்ஷ்மி, எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, ஜிக்கி, இன்னும் எத்தனையோ பேர் தமிழ் திரையிசையில் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பி.சுசீலா வந்ததும் அவரே பின்னணிப் பாடகியரின் இலக்கணமாக மாறிப்போனார்.
அப்படிப்பட்ட சுசீலாவிற்கு ஐந்தாண்டுகளுக்கும் முன்பே இந்தித் திரையுலகில் அறிமுகமாகிப் பின்னணி பாடுவதின் இலக்கணமாக விளங்கிக் கொண்டிருந்தார் லதா மங்கேஷ்கர். அன்றைக்கு இந்திய அளவில் எந்தப் பாடகி பின்னணி பாடவந்தாலும் லதா மங்கேஷ்கரை இணை வைத்தே அவரது திறமை அளவிடப்பட்டது.
தேவிகா ராணி, ஷாந்தா ஆப்தே, ஜோதி பாய், நூர் ஜஹான், உமா ஷஷி, சாயா தேவி, பேலா முகர்ஜி, உத்பலா சென், இந்திராணி ராய் போன்ற பல பாடகர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தை லதா அடைவதற்கு முழுமுதற் காரணம் அவரது தேன் குரல்.
ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், ஜிக்கியின் குரலில் சங்கீதத்தின் எந்த லட்சணமும் பேசும். ஆனால் சற்று மென்மை குறைவு. சிறு அதட்டல் உடன் வந்து கொண்டேயிருக்கும். பி.லீலாவின் சங்கீத ஞானம் அபாரமானது. சங்கதிகளும் ப்ருகாக்களும் தடையின்றி வந்து விழும். எப்படிப்பட்ட பாடலையும் அதற்குரிய லட்சணங்களோடு பாடிவிடுவார். ஆனால் ஒரு முதுமை அந்தக் குரலில் உடன் வந்து கொண்டேயிருக்கும். எம்.எல்.வியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஒரு சாஸ்த்ரீயமான மாமியின் குரலாகத் தான் அது இருந்தது.
ஆனால், பி.சுசீலாவினுடையது அப்படிப்பட்டதல்ல. தங்கக் குரல். அதில் இளமையும், இனிமையும் ததும்பி வழிந்தன. அதன் தெளிவும், துல்லியமும் இணையற்றதாக இருந்தன. அன்றைய இசையமைப்பாளர்களின் கனவுக் குரல் சுசீலாவிடம் இருந்தது. எந்தவித மாற்றுக் கருத்துமின்றி உச்சிக்குப் போனார்.
இதைப் போன்றது தான் லதா மங்கேஷ்கர் உடனடியாக உச்சத்தை அடைந்த வரலாறும். அன்றைக்கு முன்னணியில் இருந்த அத்தனை பாடகர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துக் கொண்டது அந்தச் சன்னமான குரல்.
அந்தக் குரல், காதலுக்காக இரங்கியது, இறங்கியது, கிறங்கியது, தவித்தது, தழுதழுத்தது, ஏங்கியது, அழுதது, விம்மியது, ஆறுதல் சொன்னது என்னென்னவோ மாயங்களைச் செய்து காட்டியது. தாய்மையின் குரலாக அது ஒலித்த போதெல்லாம் மக்கள் தலைசாய்ந்து அதன் மடியில் இளைப்பாறினார்கள். மதன் மோகன் போன்ற இசையமைப்பாளர்கள் லதாவின் இசையில் பித்தாகிக் கிடந்தார்கள். இந்தி, மராத்தி, பங்ளா ஆகிய மொழிகளில் அவரது கொடி பட்டொளி வீசிப் பறந்தது. இந்தியப் பெண் பாடகர்களின் ஒற்றை அடையாளமாக மாறிப்போனார்.
வடயிந்திய ஊடகங்கள் அவரை நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா என்று கொண்டாடின. இன்று வரைக்கும் அப்படித் தான் கொண்டாடிக் கொண்டும் இருக்கின்றன.
ஆனால், உண்மையில் அந்தக் குயிலின் குரல் விந்தியமலைக்குத் தெற்கே பெரிதாகப் பதியப்பட்டதில்லை. அதன் கொடி தென்னிந்தியாவில் பறந்ததும் இல்லை. அப்புறம் எப்படி அனைத்திந்தியப் பாடகியாகப் புகழப்பட்டார்? காரணம், வட இந்தியர்களைப் பொறுத்த அளவில் இந்தியா என்பது வடயிந்தியா மட்டும் தான். விந்திய மலைக்குத் தெற்கே இருக்கும் திராவிடபூமியைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதேயில்லை. தென்னிந்தியாவைப் பற்றிய இளக்காரமான மதிப்பீடே அவர்களுக்கு இருந்தது. இருக்கிறது.
லதாவிற்கு ஐந்தாண்டுகளுக்கு அப்புறம் அறிமுகமான சுசீலாவும், பத்தாண்டுகளுக்கு அப்புறம் அறிமுகமான எஸ்.ஜானகியும் எந்த வகையிலும் லதாவிற்கு இளைத்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவரைவிடவும் சிலபடிகள் மேலானவர்கள்.
பொதுவாகவே வடயிந்தியப் பாடகர்களால் தென்னிந்திய மொழிகளைச் சரியாக உச்சரிக்க முடிந்ததில்லை. ஒரே விதிவிலக்கு ஸ்ரேயா கோஷால் மட்டும் தான். அவரே தற்போதைய அனைத்திந்தியப் பாடகர். லதாவிற்கும் ஆஷாவிற்கும் தென்னிந்திய மொழிகளை உச்சரிப்பதில் மிகுந்த சிக்கல் இருந்தது. அத்தி பூத்தாற் போன்ற வளையோசை கலகல பாடலில் கூட வீசுதூ கூசுதூ என்று முற்றியலுகரமாகத்தான் லதாவால் ஒலிக்க முடிந்தது. இங்கே இன்னொன்றையும் சொல்லவேண்டும். சில பாடகர்களது குரலில் சில மொழிகளில் பாடும் போது இருக்கும் இனிமை சில மொழிகளில் பாடும் போது இருப்பதில்லை. லதாவும் ஆஷாவும் இந்தியில் பாடும் போது அத்தனை இனிக்கிறார்கள். ஆனால் தமிழில் பாடும் பொழுதோ அதன் மாற்று சற்று குறைந்துவிடுகிறது. உச்சரிப்பின் மீதான கவனச் சிதறலால் இப்படி நேர்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஏனென்றால், சுசீலாவோ, ஜானகியோ, ஸ்வர்ணலதாவோ இந்தியில் பாடும் பொழுது அதே இனிமையுடன் தான் பாடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், எஸ்.ஜானகி மிகத் துல்லியமான இந்தி உச்சரிப்புடன் அநியாயத்திற்கும் இனிமையாக
ஒலிக்கிறார். நமது பெரும்பாடகர்களில் மேற்குறிப்பிட்ட மூவரும் உச்சரிப்பிற்கு, மண்மணம் மாறாத உச்சரிப்பிற்குப் பேர் போனவர்கள். எஸ்.ஜானகியை இந்தியில் கேட்கும் வடயிந்தியர்களால் கூட அவர் தென்னிந்தியர் என்று கண்டுபிடிக்க முடியாது. கிட்டத்தட்ட ஒருநூறு பாடல்களுக்கும் மேல் அவர் இந்தியில் பாடியிருக்கிறார். ஆனால் அவரை ஒரு போதும் வடயிந்தியர்கள் நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா என்று சொல்வதில்லை. நைட்டிங்கேல் ஆனப் சௌத்இந்தியா என்று தான் சொல்கிறார்கள். தென்னிந்திய மொழிகளில் லதா பாடிய அத்தனை பாடல்களையும் கூட்டினாலும் மொத்த எண்ணிக்கை நூறைத் தொடாது. ஆனாலும் அவர் தான் அவர்களுக்கு அகில இந்தியப் பாடகி!
அதனால் தான் தனக்குப் பத்மபூஷன் தரப்பட்டபோது பெற்றுக்கொள்ள மறுத்தார் ஜானகி. தென்னிந்தியக் கலைஞர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றார். வேண்டுமானால் பாரத ரத்னா கொடுங்கள் பெற்றுக்கொள்கிறேன் என்றார். ஒரு எம்எஸ்விக்கோ, கே.வி.மஹாதேவனுக்கோ, டிஎம்.எஸ்ஸூக்கோ தரப்படாத விருது தனக்குத் தேவையில்லை என்று அவர் எண்ணியிருக்கலாம்.
அவர் அகில இந்தியப் பாடகர் இல்லை என்று சொல்வதால், லதாவின் புகழுக்குக் களங்கம் ஒன்றும் வந்துவிடாது. தென்னிந்திய மொழிகளில் பெருவாரியாகப் பாடியதில்லை என்றாலும் கூட அவர் இசையரசி தான். மாபெரும் இசைக்குயில் தான். அவருக்கு எம் அஞ்சலிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக