ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

முதல்வர் ஸ்டாலின் : இணைய திமுக தொண்டர்களுக்கு அறிவுரை + எச்சரிக்கை! பொய்களுக்கு பதிலடியாக உண்மைகளை பரப்புங்கள்

 மின்னம்பலம் : திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் மாநில செயலாளராக இருந்த நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்று (பிப்ரவரி 5) தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெற்ற காணொலிக் கலந்துரையாடலில் பங்கேற்று, வழிகாட்டுதல்களை வழங்கி உரையாற்றினார் திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின்.
"இந்த அணியை உருவாக்கி இதில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். நிதி அமைச்சராக ஆன பிறகு இரண்டையும் சேர்த்து கவனிக்க இயலாத அளவுக்குப் பணிச்சுமையில் தள்ளப்பட்டார். 'இந்தப் பொறுப்பில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்’ என்று அவர் என்னிடம் சொன்னார். அதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகச் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நியமிக்கப்பட்டார்.

தகவல் யுகமான இந்தக் காலக்கட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கியத்துவம் அதிகமாக இருப்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். செய்திகளுக்காக அடுத்த நாள் காலை வரை மக்கள் காத்திருந்த காலக்கட்டத்தில் இருந்து, இணையவசதியால் நொடிக்கு நொடி செய்திகளை தெரிந்து கொள்ளும் டிஜிட்டல் யுகத்துக்கு வந்துவிட்டோம். எல்லா நிகழ்ச்சிகளையும் இருக்கும் இடத்தில் இருந்தே மக்கள் நேரலையில் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். அதனால், தகவல் தொழில்நுட்ப அணியினரான நீங்கள், எல்லோரையும் விட கூடுதல் வேகத்தோடு பணியாற்ற வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருகிறது. கழக அரசின் சாதனைகளை இளைஞர்களிடையே – சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் உள்ளது.

கோட்டையில் உட்கார்ந்து உத்தரவு போடுபவனாக மட்டுமின்றி – மக்களுக்கு அந்த உத்தரவுகளின் பயன் முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதைக் கவனிக்கும் பணியையும் செய்துகொண்டு இருக்கிறேன்.

சிலர் போல போட்டோஷாப் செய்யாமல் இருப்பதால்தான் நடுநிலையாளர்களின் நம்பிக்கையை நாம் பெற்றிருக்கிறோம். அகில இந்திய அளவிலான ஊடகங்கள் நம்மைப் பாராட்டி வருகின்றன. இதையெல்லாம் நீங்கள் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத சாதனைகளை நாம் செய்துகொண்டு வருகிறோம். கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறோம்.

கோப்புகள் எப்போதும் - எந்தச் சூழலிலும் தேங்கக் கூடாது என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார். அந்த அடிப்படையில், என்னிடம் வரும் அனைத்துக் கோப்புகளையும் அந்தந்த மாதத்துக்குள் முடிவுகளை எடுத்து முடித்திருக்கிறேன்.

இவை அனைத்தையும் தமிழ்நாட்டு இளைஞர்கள், இணையத்தள மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

இந்தச் சாதனைகளைச் சொன்னாலே போதும் – தி.மு.க.வின் வெற்றி எளிதாகிவிடும். திமுக மீதான நம்பிக்கை அதிகம் ஆகும். இந்த சாதனைகளை மறைக்கவும் - திசைதிருப்பவும்தான் எதிரணியினர் முயற்சி செய்கிறார்கள்.

நமக்கு எதிராக, எதிரணியினர் செய்து வருகிற பணிகள் எது என்று கேட்டால் - நம் மீது அவதூறுகள் பரப்புவதும், பொய்கள் சொல்வதும்தான். உண்மையான – ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் பொய்களை, உண்மை போலக் காட்ட நினைக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கடந்த எட்டுமாத காலத்தில் மகத்தான சாதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், நூற்றுக்கணக்கான கோயில்களை இடித்து விட்டதாகப் பொய்ச்செய்தி பரப்பி வருகிறார்கள். எங்கே, எப்போது, ஏன் என்று எந்த ஆதாரத்தையும் அவர்கள் தருவது இல்லை. ஆனால் அவர்கள் பரப்பும் பொய்ச் செய்திகள் வேகமாகப் பரவுகின்றன. இந்த நிலையில், உண்மையில் அந்தத் துறையின் சார்பில் நாம் முன்னெடுத்து வரும் திட்டங்களை ஆதாரங்களோடு வெளியிடுவதுதான் அதற்கான சரியான பதிலாக இருக்க முடியும்.

மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். அதை யாரும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே போதும். எதிரணியினர் நம்மைக் கோபப்படுத்துவார்கள், ஆத்திரப்படுத்துவார்கள். அதற்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது.

அவர்களைப் போல நீங்கள் செய்யாதீர்கள். நாம் மிகப்பெரிய இயக்கம் - அதுவும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இயக்கம். அவர்கள் போல நாம் நடந்துகொள்ள முடியாது. வெறும் கரண்டி பிடித்துள்ளவன் கையை எப்படி வேண்டுமானாலும் ஆட்டலாம். ஆனால் எண்ணெய்க் கரண்டியைக் கையில் வைத்துள்ள நாம் அந்த மாதிரி செய்ய முடியாது. ஆட்சியில், அதிகாரத்தில் நாம் இருப்பதால் அவர்கள் அளவுக்குக் கீழே இறங்கி சண்டை போட முடியாது. எனவே எச்சரிகையுடன்தான் நாம் நம்முடைய வாதங்களை வைக்க வேண்டும். இதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

சாதியைச் சொல்லித் திட்டுவார்கள். மதத்தை வைத்துத் திட்டுவார்கள். பெண்களாக இருந்தால் ஆபாசமாகத் திட்டுவார்கள். நமது குடும்பத்தை இழிவுபடுத்துவார்கள். அதுதான் அவர்களின் பண்பாடு!

'வாழ்க வசவாளர்கள்' என்கிற அடிப்படையில்தான் நாம் செயல்படவேண்டும்! இதுதான் நமது பண்பாடு.

பதில் சொல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு புதுப் பிரச்சினையை உருவாக்கக் கூடாது. சமீபகாலமாகத் தேவையற்ற சில விமர்சனங்களை நம்முடைய இணையத்தளத் தோழர்களில் சிலர் செய்கிறார்கள். அதையும் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் கவனத்துக்கு எதுவும் தப்புவதில்லை.

தலித் தலைவர்கள் குறித்தும் - இலங்கை விவகாரங்கள் குறித்தும் - அவசியமற்ற விவாதங்களைச் சிலர் செய்வது மூலமாகக் கழகத்துக்கு அவர்கள் நன்மையைச் செய்யவில்லை; கெட்ட பெயரைத்தான் தேடித் தருகிறார்கள். அதுபோன்ற செயல்களைச் செய்யாதீர்கள்.

நம்மிடம் சொல்வதற்கு ஏராளமான சாதனைகள் இருக்கின்றன. நம்மிடம் சொல்வதற்கு வரலாறு இருக்கிறது. நமது முன்னோடியான தலைவர்கள், மிகப்பெரியவர்கள் - லட்சிய வேட்கை கொண்டவர்கள் – அதற்காகப் பல தியாகங்களைச் செய்தவர்கள்! இதைச் சொன்னாலே போதும். தேவையில்லாததைச் சொல்ல வேண்டாம்.

தொலைக்காட்சி ஊடகங்கள் - இணையத்தளங்கள் - ஃபேஸ்புக் - ட்விட்டர் ஆகியவற்றின் வரிசையில் அதிகப்படியான மக்களால் படிக்கப்படுவது வாட்ஸ்அப் செய்திகள்தான். புதிய புதிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குங்கள். நம்மைப் போல சிந்தனைகள் கொண்டவர்கள் மட்டுமே இருக்கிற குழுக்களில் கொள்கைகள் – செய்திகளை விவாதிக்கலாம். ஆனால், அதன் மூலமாக நமது சாதனைகளை – வரலாற்றைச் சாதாரண மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. அதனால் குடும்ப வாட்ஸ்அப் குழுக்கள், பொதுவான குழுக்கள் ஆகியவற்றில் நம்முடைய செய்திகளைப் பகிருங்கள். பொய் சொல்வதற்கே சிலர் கூச்சப்படாதபோது, உண்மையைப் பேசுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? அந்தத் தயக்கத்தை உடைத்து எறியுங்கள்.

உண்மையான செய்திகளை எல்லோருக்கும் கொண்டு சேர்ப்போம். அதற்கு உங்களை நீங்களே கூர்தீட்டிக் கொள்ளவேண்டும்; செம்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு நிறையத் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். நிறைய படிக்க வேண்டும். யார் எந்தக் குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு உடனடியாகப் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப அணியின் வேலைகளுடன் மக்களுக்கு நீங்கள் உதவியாகவும் இருக்க வேண்டும்" என்று உரையாற்றினார்

--வேந்தன்

கருத்துகள் இல்லை: