செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

Hijab Issue : தேசியக் கொடியின் இடத்தில் காவிக்கொடி... ஜெய் ஸ்ரீராம் கோஷம்... போர்க்களமான ஷிமோகா கல்லூரி!!

 tamil.asianetnews.com -Narendran S : கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் சிவமோகாவில் ஒரு கல்லூரியில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை அகற்றிவிட்டு காவி கொடியை மாணவர் ஒருவர் ஏற்றியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முஸ்லீம் மாணவிகள் தலையில் ஹிஜாப்பை அணிய கர்நாடகாவில் ப்ரீ யூனிவர்சிட்டி கல்லூரிகளில் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுவே இப்போது அந்த மாநிலத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. குந்தாப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.


கர்நாடகாவில் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. பள்ளியைத் தொடர்ந்து, மங்களூருவிலும் இந்து மதம் சார்ந்த அமைப்பினரின் அழுத்தம் காரணமாக அங்குள்ள சில பள்ளிகள் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிஜாப் அணிவது தங்களது உரிமை என பள்ளி வளாகத்துக்கு வெளியே 3 நாட்களுக்கு மேலாக மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இது தொடர்பான உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும்வரை, தற்போதுள்ள சீருடை தொடர்பான விதிகளைப் பின்பற்றுமாறு கல்வி நிறுவனங்களை கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய இடங்களில் உள்ள அரசு பி.யூ. பள்ளிகளில் ஹிஜாப் போராட்டத்துக்குப் போட்டியாக, காவித் துண்டு அணியும் போராட்டத்தில் மாணவர்கள் சிலர் ஈடுபட்டது அனைத்துத் தரப்பு மாணவர்களிடத்திலும், மக்களிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவமோகாவில் மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சிவமோகாவில் ஒரு கல்லூரியில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை அகற்றிவிட்டு காவி கொடியை மாணவர் ஒருவர் ஏற்றியதால் பெரும் பதற்றம் நிலவியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படும் அபாயமும் உள்ளது. அதன் எதிரொலியாக கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: