திங்கள், 7 பிப்ரவரி, 2022

"விடுதலை என்பது தலையை மூடியிருக்கும் துணியிலிருந்து அல்ல! ஷர்மிளா செய்யத்

May be an image of 1 person and standing

Sharmila Seyyid : "விடுதலை என்பது தலையை மூடியிருக்கும் துணியிலிருந்து அல்ல, மூளையைச் சுற்றியிருக்கும் குருட்டுச் சிலந்தி வலைகளிலிருந்து வெளியேறுவது தான்" என்று ஒரு சகோதரி முகநூலில் எழுதி உள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் 'ஹிஜாப் ஆர்மி' தற்கொலைப் படை ரேஞ்சுக்கு களமிறங்கி செயல்படும் என்பது எதிர்பார்த்ததுதான்.
இது ஹிஜாபிற்கு ஆதரவாக நிற்க வேண்டிய தருணமே, சந்தேகமில்லாமல்!
ஏனெனில் இங்கே ஹிஜாபிற்கு எதிராக கிளர்ச்சி செய்வோர் இஸ்லாம் விரோத சக்திகள்.
அதேநேரம் ஹிஜாப் ஆர்மியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணமும்  இதுவே.
இந்த சந்தர்ப்பத்தில் தான் பெண்களின் சுய சிந்தனை வெளிப்பாட்டுத் திறனில், இளம் சந்ததிகளின் மண்டையில் சம்மட்டி கொண்டு அடிப்பார்கள்.


உண்மையில் ஹிஜாப் அணிவதோ அணியாமல் இருப்பதோ நீங்கள் ஒரு வெல் செட்டில்ட் நிலையை எட்டிய பிறகு, ஒரு பாதுகாப்பான பொருளாதார ரீதியாக சௌகரியமான வாழ்வில் இருக்கும்போது ஒரு பிரச்சினையோ சவாலோ இல்லை. நிச்சயமாக இல்லை.

நீங்கள் அவ்வாறு நடிப்பதற்கான முழு சுதந்திரத்துடன் இருப்பது வேறு, அன்றாட வாழ்வில் சமூக பாதுகாப்பு இல்லாத சூழலில்  இனவெறுப்பாளர்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கவும் முடியாமல், வேறு தெரிவும் இல்லாமல் தினம் தினம் மத அடையாளத்தை கட்டிக் காப்பாற்றிக் கொண்டு வாழும் எளிய சாதாரண பெண்களின் நிலை வேறு.

இந்த சிக்கலான பின்னணியில் விடுதலை - மூளை வியாக்கியானங்கள் வெறும் தாளிப்புகள். நல்ல வாசனை மட்டும் தான். பசி தீராது.

மூளையைச் சுற்றியிருக்கும் குருட்டுச் சிலந்தி வலைகளிலிருந்து நீங்கள் வெளியேறினால் தலையை மூட ஒரு துணி அவசியமே இல்லை என்ற தெளிவை எட்டுவது தூரமாகாது. ஆனால் உங்களால் இது ஒருபோதும் முடியாது, நீங்கள் முயலவும் போவதில்லை. ஏன் கற்பனை செய்யப் போவதுமில்லை.
இங்கே துணி தலையை மட்டும் மூடவில்லை, மூளைக்குமே மூடியாயிருக்கிறது. நீங்கள் எவ்வளவு உயரத்தில் ஏறி நின்று கூவினாலும் இதுவே எதார்த்தம்.

ஹிஜாப் என்பதே ஒரு குருட்டு சிலந்தி வலை தான் என்பதையும் புரிந்து கொண்டு, இஸ்லாமிய வெறுப்பாக தலை தூக்கியிருக்கும் நிகழ்ச்சி நிரலை உணர்ந்து அழுத்தமாக  ஹிஜாபுக்கு ஆதரவு தெரிவிப்பதில் வெளிப்படும் அற உணர்வு, இந்த சந்தர்ப்பத்தில் ஹிஜாப் பிரச்சாரம் செய்வதில் வெளிப்படுவதற்கில்லை.
இத்தருணத்தில் கலாசாரக் காவலர்களாக களமிறங்கி ஹிஜாப் பிரச்சாரம் செய்து, மேலும் மேலும் பெண்களின் தோள்களில் கலாசார அடையாளத்தை சுமத்தும் அரசியலையே முன்னெடுக்கும் 'பச்சை சங்கிகள்' வினோதமான வார்த்தைகளில் முன்வைக்கும் பிரகடனங்கள் அழுகின்ற குழந்தைக்கு கிளுகிளுப்பையைக் குலுக்கி சிரிக்க வைக்க முயல்வது போல் ஆண்களை, மத பீடங்களை சொறியும் செயல்பாடே தவிர, இந்தப் பிரகடனங்களால் இன முரண்பாடுகள் தீராது.

இந்த விடயத்தில் முஸ்லிம்களாக இருப்போரின் பொறுப்பு, முஸ்லிம் அல்லாதோரின் பொறுப்பு அல்லது அறவுணர்வு ஆகிய இரு நிலைகளின் தொழில்பாடு உள்ளது. ஆனால் இரண்டும் ஒன்று இல்லை என்பதாக கருதுகிறேன். முஸ்லிம் அல்லாதவர்களின் ஹிஜாப் ஆதரவு நிலைப்பாடு அவர்களது குரல்களின் அழுத்தம் என்பவற்றை இஸ்லாமிய கலாசார காவலர்களின் ஹிஜாப் பிரச்சாரம் அடித்து செல்வதே இங்கு நடக்கிறது.
சிந்தியுங்கள், இது உண்மையில் வெறுமனே ஹிஜாப் பிரச்சாரத்திற்கான ஒரு சந்தர்ப்பம் மட்டும் தானா? நாம் பேசவேண்டிய பொருள் என்ன?

கருத்துகள் இல்லை: