மின்னம்பலம் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று முதல் படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வர மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த 24.1.2022 அன்று எழுதிய கடிதத்தில், "2018ஆம் ஆண்டுக்கு முன்னர் சிறைப்பிடிக்கப்பட்ட 125 பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை வெளிப்படையான முறையில் அகற்றுவதற்கான முயற்சிகளை இறுதி செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி பிரதமருக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைத்திருந்ததையும், அதில், 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறைப்பிடிக்கப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படையினர் விரைவில் விடுவிக்க உறுதி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அதனைத் தொடர்ந்து, இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் 28-1-2022 தேதியிட்ட மின்னஞ்சலில், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் ஏலத்தை இலங்கைத் தரப்பு தொடராது என்றும் உறுதியளிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், இலங்கை அரசு தான் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, எந்தவிதமான ஆலோசனையுமின்றி தொடர்ந்துள்ள ஏல நடவடிக்கை, இதற்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்தியத் தூதரகம் மற்றும் தமிழக அரசின் முயற்சிகளை தடம் புரளச் செய்வதாக அமையும்.
மீட்க முடியாத நிலையில் உள்ள மீன்பிடிப் படகுகள் உரிய நீதித் துறை நடைமுறைகளைப் பின்பற்றி, பல்வேறு இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ள முதல்வர்...
”2018க்குப் பிறகு சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்கவும் பிரதமர் அவசரமாகத் தலையிட வேண்டுமென்றும் இதன்மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராமதாஸ்
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது கண்டிக்கத்தக்கது. 105 படகுகள் ஏலத்தில் விடப்பட்டால் குறைந்தது 7,500 பேரின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். இதை உணர்ந்து படகுகள் ஏலம் விடப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விடுவது இது முதல் முறையல்ல. கடந்த 2014, 2020 ஆகிய கால கட்டங்களிலும் தமிழக மீனவர்களின் படகுகளை அழிப்பது., ஏலத்தில் விடுவது போன்ற அத்துமீறல்களை இலங்கை அரசு அரங்கேற்றியது. இப்போது மூன்றாவது முறையாக தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை சிங்கள அரசு ஏலம் விடுகிறது. இதை இந்தியா வேடிக்கை பார்க்கக் கூடாது.
உணவுக்குக் கூட வழியில்லாமல் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா ரூ.18,090 கோடி கடன் வசதி வழங்கியுள்ளது. அதில் ரூ.3,500 கோடி கடனுக்கான ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன்தான் கையெழுத்து இடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியா - இலங்கை உறவு குறித்து பேச்சு நடத்துவதற்காக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் 3 நாட்கள் பயணமாக நேற்று டெல்லி வந்திருக்கிறார். இத்தகைய சூழலில் இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதும், அதை இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் இந்தியாவின் நிலையை வலுவிழக்கச் செய்துவிடக்கூடும்.
தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படும் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, படகுகள் ஏலம் விடப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருடனான பேச்சுகளின்போது தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளுக்கு இலங்கை கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
-வினிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக