கலைஞர் செய்திகள் : காங்கிரஸ் கட்சியால்தான் கொரோனா பரவியது என மக்களவையில் மோடி பேசியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 31ம் தேதி துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தன் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது.
இதையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு விளக்கம் அளித்துப் பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசுகையில், "இந்தியாவில் கொரோனா தொற்று முதல் அலையின்போது காங்கிரஸ் கட்சி பொறுப்பற்ற முறையில் செயல்பட்டது. அப்போது இருக்கும் இடத்திலேயே மக்கள் இருக்க வேண்டும் என சொல்லப்பட்டது.
ஆனால் உத்தர பிரதேசம், பீகார், மும்பையிலிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் ஊர்களுக்குச் செல்ல ரயில்களில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பியது. அதேபோல் டெல்லி அரசாங்கமும் புலம் பெயர் தொழிலாளர்களை வெளியேறச் சொன்னது. இதனால்தான் பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் கொரோனா தொற்று பரவியது" என தெரிவித்துள்ளார்.
மோடியின் இந்த உரைக்குக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உட்படப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தாமல் தவற விட்டது மட்டும் அல்லாமல் புலம் பெயர் தொழிலாளர்களைப் பற்றி கவலையே படாமல் இருந்த இந்த அரசு தான் இன்று கொரோனா பரவலுக்குக் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என அபாண்டமாக மோடி பொய் பேசுகிறார் என சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக