சனி, 10 ஜூலை, 2021

திராவிட மாடல்' வளர்ச்சிக்கு உதவுவீர்: பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

 hindutamil.in : அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் ‘திராவிட மாடல்’ வளர்ச்சி. அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திமுக. நமது வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’க் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அக்குழுவின் உறுப்பினர்கள் எஸ்தர் டஃப்லோ,.ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் டிரீஸ், திரு.எஸ்.நாராயண், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.



கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பில் முதல்வரின் பேச்சு இடம்பெற்றுள்ளது.

முதல்வர் பேச்சின் முழுவிவரம்:

தமிழ்நாட்டைத் தன்னிகரற்ற மாநிலமாக உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் வணக்கம்!

உங்களது அறிவு உலகளாவியது; உங்களது திறமை உலகத்தவர் அனைவராலும் போற்றப்படுவது; உங்களது செயல்கள், உலகம் முழுவதும் பயன்பட்டு வருவது - இவை அனைத்தையும் இந்த அரசு அறியும். இத்தகைய நெருக்கடி மிகுந்த சூழலில் தமிழ்நாடு அரசின் அழைப்பை ஏற்று பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற ஒப்புக்கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் என்பது ஸ்டாலின் என்ற தனிநபர் மட்டுமல்ல, அது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று நினைப்பவன் நான். அந்த அடிப்படையில் அந்தக் கூட்டுப் பொறுப்புக்குள் உங்களையும் சேர்த்துள்ளேன். உங்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்து பேசிப் பழகும்

சூழ்நிலை இதுவரையில் அமையாவிட்டாலும் உங்களை தூரத்தில் இருந்து அறிவேன்.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்தவர்கள். பேராசிரியர் ரகுராம் ராஜன் - இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர். எஸ்தர் டஃப்லோ உலகத்தின் உயரிய நோபல் பரிசு பெற்றவர். அரவிந்த் சுப்ரமணியன் - ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர். ஜீன் டிரீஸ் பொருளாதார வல்லுநர், அமர்த்தியா சென்னுடன் இணைந்து புத்தகம் எழுதியவர். எஸ்.நாராயண் ஒன்றிய அரசின் நிதிச் செயலாளராக இருந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு துறைகளை திறம்பட வழிநடத்தியவர். போபாலில் பிறந்திருந்தாலும் ரகுராம் ராஜனின் பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அரவிந்த் சுப்ரமணியன் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையில்தான் படித்துள்ளார். எஸ்.நாராயண் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான்.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பேரில் மூவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்கள் உலகப் புகழ்பெற்ற ஆளுமைகளாக வளர்ந்திருப்பதும் நம் மாநிலத்துக்கு கிடைத்த பெருமையாகும். எஸ்தர் டஃப்லோவாக இருந்தாலும் ஜீன் டிரீஸாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியா புதிதல்ல. இந்தியாவைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளீர்கள்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எஸ்தர் டஃப்லோ அமெரிக்காவில் இருக்கிறார். இவரும் இவரது கணவர் அபிஜித் பேனர்ஜியும் இணைந்து வறுமை ஒழிப்பு தொடர்பான புத்தகம் எழுதியவர்கள். நோபல் பரிசு பெற்றவர்கள்.

ஜீன் டிரீஸ் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். இங்கிலாந்தில் படித்தவர். இந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்றவர். அமர்த்தியா சென்னுடன் இணைந்து புத்தகம் எழுதி உள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை கொண்டு வந்து கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியவர். இப்படி இந்தியாவை அறிந்தவர்கள் நீங்கள். தமிழ்நாட்டை அறிந்தவர்கள் நீங்கள். தமிழ்நாட்டைப் புரிந்து வைத்திருப்பவர்கள் நீங்கள். எனவே தமிழ்நாட்டின் களநிலவரம் குறித்து உங்களுக்கு நான் அதிகம் விளக்கிச் சொல்லத் தேவையில்லை.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள உங்களை தமிழ்நாடு நன்கு அறியும். ரகுராம் ராஜனின் புத்தகங்கள் தமிழில் வெளியாகி உள்ளன. ஜீன் டிரீஸும் அமர்த்தியா சென்னும் இணைந்து எழுதிய புத்தகம், 'நிச்சயமற்ற பெருமை' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சமூக நலன் சார்ந்த வளர்ச்சிதான் தமிழ்நாட்டை இந்தளவுக்கு முன்னேற்றி இருக்கிறது என்பதை ஜீன் டிரீஸ் அந்தப் புத்தகத்தில் விரிவாகச் சொல்லி இருக்கிறார். ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது விநியோகத் திட்டம் ஆகிய இரண்டும் சேர்ந்து தமிழ்நாட்டை எப்படி வளர்த்துள்ளது என்பதை அவர் எழுதி இருக்கிறார்.

இந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு அடித்தளம் எது என்பதையும் அந்தப் புத்தகத்தில், “1920-இல் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட பல முன்னோடி சமூக சீர்திருத்தங்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சாதிகள் பெற்றுள்ள அரசியல் அதிகாரம், கவர்ச்சிகர அரசியல் பிடிமானம், தமிழ்ச்சமூகத்தில் ஆக்கபூர்வமான பெண் அமைப்புகள் ஆகியவைதான் இந்தக் கட்டமைப்பை தமிழ்நாட்டில் உருவாக்கக் காரணமாக அமைந்தன" என்று ஜீன் டிரீஸும் அமர்த்தியா சென்னும் எழுதி இருக்கிறார்கள்.

இதைவிட தந்தை பெரியாருக்கு, பேரறிஞர் அண்ணாவுக்கு, கருணாநிதிக்கு வேறு பாராட்டு தேவையில்லை.

எஸ். நாராயண் னது புத்தகத்தில், ''கருணாநிதியின் ஆட்சிக் காலமானது சமூக மாற்றத்துக்கான அடித்தளங்களைக் கிராம அளவிலும் கூட்டுறவு மட்டத்திலும் அமைப்புரீதியாகவும் அமைத்தது" என்று எழுதி இருக்கிறார்.

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி!

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி!

அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி!

இதுதான் ‘திராவிட மாடல்’ என்பது. அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை!

இந்த நோக்கத்துக்கு வழிகாட்டவே உங்களை அழைத்துள்ளோம்.

* பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

* சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள் குறித்த ஆலோசனைகள் தர வேண்டும்.

* பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு சமமான வாய்ப்புரிமை வழங்க ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

* மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

* மாநிலத்தின் மொத்தமான நிதி நிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் தர வேண்டும்.

* மக்களுக்கு சேவை செய்வதற்கான மாநிலத் திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும்.

* புதிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்றக் கூடிய தீர்வுகளுக்கான ஒரு வலுவான ஆலோசனை மையமாக நீங்கள் திகழ வேண்டும்.

* எவ்வித பிரச்சினைகளுக்கும் ஆராய்ந்து சாத்தியப்படக்கூடிய சிறந்த சமூகப் பொருளாதாரத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களது ஆலோசனைகளை உடனுக்குடன் எங்களுக்குத் தெரிவியுங்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருக்கிறோம். கரோனா காலமாக இல்லாமல் இருக்குமானால் நாம் அனைவரும் நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பினைக்கூட ஏற்படுத்தி இருக்கலாம். கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு நாம் நேரில் சந்திப்போம்.

இப்படி ஒரு குழுவை அமைத்ததன் மூலமாக தமிழ்நாட்டின் பெருமை உலகளாவியதாக ஆகிவிட்டது. இந்தியாவின் மிக முன்னணி இதழ்கள், இக்குழுவையும் இதில் இடம்பெற்றவர்களையும், தமிழ்நாடு அரசையும், என்னையும் பாராட்டி எழுதினார்கள்.

இந்தப் பாராட்டுகள் அனைத்தையும் மக்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலைவாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும்.

மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும். இக்கனவுகள் சாதாரணமாக நிறைவேறி விடாது என்று எனக்கும் தெரியும்.

நமது சிந்தனை ஒன்றாகவும் - உண்மை நிலவரம் வேறாகவும் இருக்கிறது என்பதை நானும் அறிவேன். தமிழ்நாடு அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கின்றன.

நிதி ஆதாரம் என்பது விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சில துறைகளின் மூலமாக மட்டும்தான் வருகிறது. வரி வசூலில் இருந்த மாநில உரிமைகளை ஒன்றிய அரசு ஜிஎஸ்டி மூலமாக பறித்துவிட்டது. அதனால் வரி வசூலை நம்ப முடியாது.

நமது வளங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்திக் கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம். அதற்கென உள்ள வழிமுறைகளை தமிழ்நாட்டு அரசுக்கு காட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இயற்கை வளம் உள்ளது. இங்கு சீரான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. மனித வளம் உள்ளது. சமூகப் பொறுப்புணர்வு உள்ளது. உலகம் அறிந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் உலகில் நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழ்கிறார்கள். இந்த அடித்தளத்தை கொண்டு வளர நினைக்கிறோம். அதற்கு நீங்கள் வழிகாட்டுங்கள்!

சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திமுக. நமது வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.

வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும்.

அதுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் கருணாநிதியும் காணவிரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!

நமது அரசு, தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே தொழில் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக மாற்ற வேண்டும். உலகத்துக்கு மனிதவளத்தை தரும் மாநிலமாக மாற வேண்டும். ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு வளருவதற்கு திட்டமிடும் சூழலை உருவாக்க வேண்டும். இதற்குத் தேவையான ஆலோசனைகளை நீங்கள் வழங்க வேண்டும்.

என்னுடைய இந்தக் கனவுகள் சாதாரண சீர்திருத்தங்கள் மூலமாக மட்டும் சாத்தியமாகிவிடாது. முழுமையான மாற்றம் - அதிரடியான மாற்றம் மூலமாகத்தான் சாத்தியம் என்பதை நான் அறிவேன். எத்தகைய மாற்றத்துக்கும் தயாராக தமிழ்நாடு அரசு இருக்கிறது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகப்புகழ் பெற்ற பொருளாதாரப் பேரறிஞர் அமர்த்தியா சென் எழுதிய 'home in the world' என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூல் நேற்று வெளியாகி உள்ளது. 'ஒரு சமூகம் சிறப்பாகச் செயல்படுவது என்பதை எப்படி அளவிடுவது? அந்தச் சமுதாயத்தை உருவாக்கும் தனிநபர்களின் நலனைக் கொண்டு அளவிட வேண்டும்' என்று அதில் சொல்லி இருக்கிறார்.

இந்த அரசும் அதைத்தான் விரும்புகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதரும் மகிழும் வகையில், இது எமது அரசு என்று சொல்லி அனைவரும் பெருமைப்படும் வகையில் இந்த அரசு இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

அந்த ஆசையை - கனவை நிறைவேற்றும் கருவிகளில் நீங்களும் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாம் தொடர்ந்து சந்திப்போம். சிந்திப்போம். வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: