Sudha Thiagu : கவிஞர் தாமரை அவர்களுக்கு, (2)
இனி உங்கள் பதிவிற்குள் நான் வருகிறேன்.
என் அப்பா மீது விசாரணை நடத்த ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்ததைச் சொல்கிறீர்கள், ஓரளவு விசாரணையை முடித்ததாகவும் சொல்கிறீர்கள், அந்தக் கோப்புகள் வீர சந்தனம் ஐயா மறைந்துவிட்டதால் காணாமல் போனது என்கிறீர்கள். அந்த கோப்புகளில் ஒரு படி உங்களிடம் இருந்திருக்க வேண்டும் அல்லது அந்தக் குழுவின் ஏனைய நான்கு பேரில் ஒருவரிடமாவது இருந்திருக்க வேண்டும். சரி அது இருக்கட்டும். இப்போது அந்த விசாரணையை விரைவாகத் தொடங்குங்கள். அன்றே விசாரணைக் குழு அமைக்கும் முடிவு தெரிந்த உடனேயே அப்பா அதற்கு ஒப்புக் கொண்டார். வெளிப்படையாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தும் விட்டார். அந்தக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பை அவர் தந்திருக்கிறார். அவர் ஒப்புக் கொள்ளாமல் இந்த விசாரணைக் குழு அமைந்துவிட வில்லை. இப்போதும் அந்த விசாரணையை எதிர்கொள்ள அவர் தயாராகவே இருக்கிறார் (அப்பாவிடம் அதை உறுதிப்படுத்தி விட்டே சொல்கிறேன்). உங்களிடம் இப்போது உள்ள ஆதாரங்கள் ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணைக் குழுவின் பணியைத் தொடங்கச் செய்யுங்கள். அந்தக் குழுவில் உள்ள ஏனைய நான்கு பேரைக் கொண்டு விசாரணையைத் தொடங்கச் செய்வதில் உங்களுடைய நகர்வுகள் என்ன? நீங்கள் அதில் எந்தக் கட்டத்தில் உள்ளீர்கள்? எப்போது நீங்கள் விசாரணையை தொடங்கச் செய்யப் போகிறீர்கள். எந்த விசாரணைக்கும் முழுமையாக உட்பட அப்பாவிற்கு தயக்கம் இல்லை. விரைவில் அப்பணிகளைத் தொடங்க வேண்டுகிறேன்.
நீங்கள் தூசி தட்ட இருக்கிற ஆவணங்கள் ஆதாரங்களில் அடிப்படையானதாக சிலவற்றை நீங்கள் முன்வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்:
1. நீங்கள் வைக்கிற ஆவணங்கள் அல்லது ஆதாரங்களில் நீங்கள் குறிப்பிடுகிற இந்தப் பெண்ணானாலும் அந்தப் பெண்ணானாலும் அவர்கள் "இன்றும்" அவர்களின் குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டும்.
2. அவர்களில் ஒருவரேனும் தியாகு இப்படி நடந்து கொண்டார் என்றோ என்னை அழைத்துக் கொண்டு ஓடிப் போனார் என்றோ இன்று கூட அல்ல, அன்றாவது சொல்லி இருக்க வேண்டும்.
3. அப்பா மீது அவர்கள் வைக்கும் அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த இரண்டு பெண்களில் ஒருவரேனும் அவர்கள் அறிந்து அவர்களுக்குத் தெரிந்து முன்வைத்திருக்க வேண்டும்.
இந்த அடிப்படைகளில் இருந்தும் உங்கள் ஆவணங்கள் ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எனக்குத் தெரியும் இன்றும் அந்தப் பெண்கள் என் அப்பாவை தந்தையாகவே மதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. அவர்கள் இன்றைக்கும் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள், என்பதனால் என்னால் அதை உறுதியாகச் சொல்ல முடியும். அது போகட்டும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்
.
2012 இல் அந்தப் பெண்ணுடன் ஓடிப் போனதாகச் சொல்கிறீர்கள். அப்போதும் நான் மலர் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நேராக என்னைச் சந்திக்க மலர் மருத்துவமனை வந்தார். தங்கும் இடம் குறித்துப் பேசினோம். இளந்தமிழகம் தோழர்கள் செந்தில் ஸ்ரீராம் ஆகியோர் உதவியுடன் அவர்கள் அலுவலகத்தில்தான் அப்பா தங்கி இருந்தார். இன்றும் அதை அந்த தோழர்கள் உறுதி செய்வார்கள்.
2014 இல் ஒரு பெண்ணுடன் ஓடிப் போனதாகச் சொல்கிறீர்கள். அப்போது எனக்கும் பாரதிக்கும் திருமணம் ஆகி இருந்தது. உங்கள் வீட்டிலிருந்து வெளியேறி வந்த நாளிலிருந்து இந்த 7 ஆண்டுகளாக எங்களோடுதான் அப்பா இருக்கிறார். எங்கள் வீட்டில் இருந்ததால்தான் நாங்கள் இருந்த வேளச்சேரி வீட்டு வாசலில் போராட்டம் என நீங்கள் அமர்ந்தீர்கள். அப்போது நான் கருவுற்றிருந்தேன். எங்களோடு வந்து வாழ்கிறார் என்பதால்தானே எங்கள் வீட்டு முன் வந்து போராட்டம் என அமர்ந்தீர்கள். உண்மை இவையாக இருக்க ஓடி போனார் என்கிறீர்களே! இப்படி வேண்டுமானால் சொல்லுங்கள், நீங்கள் சொல்கிற இருமுறையுமே தியாகு அவர் மூத்த மகளிடம் ஓடிப் போனார் என்று.
அந்தப் பெண் சுமத்திய குற்றசாட்டுகளிலிருந்து திசை திருப்பவே என்று குறிப்பிடுகிறீர்கள். எந்தப் பெண் எப்போது குற்றம் சாட்டினார். என்ன குற்றம் சாட்டினார். ஒரு பொதுவெளியில் தான் அறிந்து தனக்குத் தெரிந்து ஒருவராவது குற்றச்சாட்டு வைத்திருப்பதை உங்களால் காட்ட முடியாது. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
என் அப்பா பற்றி சில செய்திகளைப் பகிர வேண்டும். எனக்கு இன்று வரைக்கும் என் இன்ப துன்பங்களில் பங்கேற்கும் எங்கள் குடும்பமே உயர்வாக மதிக்கும் மாமா அத்தை இருக்கிறார்கள். அதில் அந்த அத்தையை என் அப்பா இன்றும் கமலா என்றுதான் அழைப்பார். அத்தையும் என் அப்பாவை தோழர் என்றுதான் அழைப்பார். நான் பிறக்கும் போது சிறையிலிருந்து விடுப்பில் வந்து என் அம்மாவோடு இருந்தவர் உடனே சிறைக்குத் திரும்பிவிடுகிறார். திரும்பிய ஓரிரு மாதங்களில் வெளியே வருகிறார். எதற்கென்றால், எங்கள் அத்தை முழுநேர அரசியலுக்கென்று வீட்டைவிட்டு வந்து விடுகிறார். சிறையிலிருந்தபடியே ஓரிரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் நான் விடுப்பில் வந்துவிடுகிறேன் என்று உறுதி தருகிறார். சொன்னபடியே சிறையிலிருந்து விடுப்பில் வந்து, பிறந்த குழந்தையான என்னைப் பார்க்க வராமல் நேரே அத்தையை பார்த்து அவர் அரசியல் வாழ்வு தொடர எல்லாவற்றையும் செய்துவிட்டுத் திரும்புகிறார். அப்பா ஒருவர் தன்னை அரசியலுக்கு ஒப்புக் கொடுக்க வருகிறார் என்றாலோ, ஒருவரை அரசியலாற்றலாய் உருவாக்க முடியும் என்று நம்பினாலோ, அவர்களுக்காக அரசியலை முன்னிட்டு எவ்வளவு பெரிய சுமையை சுமப்பதற்கும் தயாராகவே இருப்பார்.
செய்தியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்டிருந்த இளைஞர் பாரதி சுப்ரமணியை அப்பா என் மகன் என்று கொண்டாடியதுண்டு, என்னிடமே அப்படித்தான் ஒரு முறை அறிமுகப்படுத்தினார். இளந்தமிழகம் செந்தில் குறித்து ஒரு மேடையில் பேசும் போது, ஒரு தந்தையாக அவரின் வளர்ச்சியை நெகிழ்வோடும், பெருமிதத்தோடும் பார்க்கிறேன் எனத் நா தழுதழுக்கச் சொன்னார். தோழர் மதியவன் இரும்பொறையை அப்பா மகனாகவே கருதுவார். அவரும் அப்பாவை தந்தை இடத்தில் வைத்திருக்கிறார். இவை எல்லாமே அரசியலை முன்னிட்டுத்தான். அரசியல் உறவுதான் அல்லது அரசியல் உறவின் பொருட்டுத்தான் இந்த உறவுகள் தந்தை மகன் உறவாக மலர்ந்து நின்றன. இன்றும் தோழர் மதியவனும், செந்திலும் அப்பாவின் கைபிடித்து அரசியலில் வளர்ந்து வருகிறவர்கள். இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு அல்லது புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு இந்த உறவுகளின் உயர்வும் அழகும் புரியாது.
பெண் விடுதலைக்கு அடிகோலிய பெரியாரியத்தையும் உங்கள் பதிவில் இழிவுபடுத்துகிறீர்கள். பெண்ணியத்தை ஒரு வாழ்நெறியாகவே அப்பா கொண்டிருந்தார் என்பதை உங்களை வைத்தே என்னால் நிறுவ முடியும். உங்களுடைய உரிமைகளில் எது ஒன்றிலாவது அவர் தலையிட்டிருப்பாரா மனம் தொட்டுச் சொல்லுங்கள். உங்களை ஒரே ஒரு முறையாவது ஒரு கடுஞ்சொல்லாவது பேசியிருப்பாரா சொல்லுங்கள். இன்னும் சொல்லப் போனால் தனது உரிமைக்காக என்று கூட உறுதியாக நில்லாமல், உங்கள் மனநிலைக்காக உங்கள் உடல் நிலைக்காக உங்களுக்காகவே உங்களுக்கு இணங்கிப் போவதையே வழக்கமாக்கி இருந்தார் என்பது எனக்கே தெரியும். அதை என்னால் நிறுவவும் முடியும். என் அம்மாவுடன் அப்பா வாழ்ந்த பதினைந்து ஆண்டுகளில் பெண்ணியம் தெரியாத என் அம்மாவிடமும் அவர் ஒரு கடுஞ்சொல் பேசியதில்லை. அம்மா உரிமையில் தலையிட்டதும் இல்லை. பிள்ளைகளான எங்களிடமும் அவர் அப்படித்தான் இருந்தார், இன்று வரை இருக்கிறார்.
சூளைமேடு அலுவலகத்தில் ஒரு முறை அரசியல் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது, ஐம்பது தோழர்கள் வகுப்பைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். வகுப்பு நடைபெற்று ஒரு மணிநேரம் ஆன நிலையில் உங்கள் அழைப்பு வருகிறது, எனக்குப் பழங்களை வாங்கித் தந்து விட்டுப் போகுமாறு கேட்கிறீர்கள். வகுப்பு நட்த்திக் கொண்டிருக்கிறேன் இதோ கொஞ்ச நேரத்தில் வாங்கி வருகிறேன் என்று சொல்வதை நாங்கள் கேட்கிறோம். மீண்டும் மீண்டும் எங்களிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் உங்களுக்கு அப்படியே விடை தருகிறார். ஒரு கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிற வகுப்பை அப்படியே நிறுத்தி விட்டு கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன் என்று குறிப்பேடுகளை வைத்துக் கொண்டு வகுப்பைக் கவனித்துக் கொண்டிருந்த தோழர்களிடம் சொல்லிச் செல்கிறார். அவசர அவசரமாக திரும்பி வந்தார். வகுப்பைத் தொடர்ந்தார். இது போன்ற நிறைய நிகழ்ச்சிகளை வெளியிலும், உங்கள் வீட்டிற்கு வந்திருந்த போதும் கண்ட தோழர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஒரு முறை நீங்களே அப்பாவிடம் சொன்னதை நான் அறிவேன். நீங்கள் என் அடிமை. உங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையெல்லாம் கிடையாது என்று. இந்தப் பெண்ணியத்திற்கு பெரியாரியம் உறுதியாக அடிகோலவில்லை.
பெரியாரின் பெண் விடுதலை என்பது ஆண் பெண் சமத்துவம் என்றுதான் நான் புரிந்து வைத்திருக்கிறேன். ஆண் ஆதிக்கமும் இல்லை பெண் ஆதிக்கமும் இல்லை. உங்கள் முன்னால் கணவரோடு நீங்கள் மனமுறிவு பெற்றதும் நீங்கள் மறுமணம் புரிந்ததும் உங்களின் உரிமை. அதேபோல் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணோடு முற்றிய முரண்பாடுகளின் காரணமாகவும் அதைச் சரி செய்ய முடியாத போதும் மணமுறிவுக்கு முடிவு செய்வதையும், அதன் அடிப்படையில் அவர் அந்த உறவை முறித்துக் கொள்வதையும் ஏற்றுக் கொள்வதுதான் பெண்ணியத்தை முழுமைப்படுத்தும். என்னது மட்டும்தான் உரிமை ஒரு ஆணுக்கு அந்த உரிமை இல்லை என்பது பெண்ணியம் ஆகாது. என் அப்பாவைப் பொறுத்தவரை என் அம்மாவை விட்டு அவர் பிரிந்து வந்து உங்களை மணம் முடிக்க உரிமையுண்டு, அதில் பிழையேதும் இல்லை என்று கருதிய நீங்கள், உங்களிடமிருந்து மணமுறிவு பெற்று அவரின் மூத்த மகளிடம் வந்து சேர்வதற்கு மட்டும் உரிமை இல்லை எனக் கருதுவதில் என்ன நியாயம் இருக்கிறது. நான் என்ன செய்திருந்தாலும் எப்படி நடந்து கொண்டாலும் எவ்வளவு முரண்பாடுகள் முற்றினாலும் வாழ்வு குறித்த மதிப்பீடுகளில் வேற்றுமை எவ்வளவு கூர்மையடைந்தாலும் என்னோடுதான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கருதுவது பெண்ணியமல்ல. அப்படிக் கருதுவது சர்வாதிகாரம் ஆகுமே தவிர பெண்ணியமாகாது. பெண்ணியம் பற்றி நான் உங்களுக்கு எடுத்துரைப்பது காலம் நிகழ்த்துகிற விந்தைதான்.
2012 வாக்கில் அப்பாவோடு நான் நீண்ட நாட்களாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்கு நடந்து கொண்டிருக்கிற பிரச்சனை தெரியும் என்பதால் அப்பாவைப் பார்த்தாக வேண்டும் என்ற வேகம் பெற்றேன். தயங்காமல் உங்கள் வீட்டுப் படியில் அப்போது ஏறினேன். உங்கள் அம்மா இருந்தார். நான் யார் எனத் தெரியாததால் நீ யார் என மிரட்சியோடு கேட்டார். நான் அப்பா அப்பா எனக் குரல் உயர்த்திச் சொல்ல அப்பா ஓடி வந்தார். என்னை வெளியே அழைத்து வந்து அலைபேசி தாமரையிடம் உள்ளது, இப்போது என்னால் அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளேன். விரைவில் எல்லாவற்றையும் சரி செய்வேன். நீ தைரியமாகப் போ எனச் சொல்லி அனுப்பி வைத்தார்.
அதே காலகட்ட்த்தில் ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ஒருவரை தோழர் ஸ்ரீராம் அப்பாவைப் பார்க்க உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்லாமலேயே அழைத்து வந்தார். அப்படி வந்த தோழர் ஸ்ரீராம் ஒரு தாளில் ஐயா உங்களுக்கு என்ன உதவி தேவை என்றாலும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று எழுதி அப்பாவுக்கு கொடுத்த புத்தகத்திற்குள் மறைத்து வைத்துக் கொடுத்துப் போனார். தோழர் அப்படிச் செய்ததற்குக் காரணம்: தொடர்ந்து அப்பா எந்த நிகழ்வுகளுக்கும் வெளியில் வருவதில்லை, அவரிடம் தொடர்பு கொண்டு பேச முடிவதில்லை அப்படி அப்பாவின் அலைபேசி கிடைத்தாலும் நீங்களே அதனை எடுக்கிறீர்கள் நீங்களே பதில் சொல்லி வைத்து விடுகிறீர்கள். தொடர்ந்து இப்படியே நடந்து வந்ததால் தோழர் சூழலைப் புரிந்து கொண்டு அப்படிச் செய்து போனார்.
2012 இல் அப்பா அந்தப் பெண்ணுடன் ஓடிப் போனதாக சொல்கிறீர்கள். அப்பாவுடைய அலைபேசியை கூட நீங்கள் உங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்கிறீர்கள், அவருக்கு வருகிற அழைப்பை, அவரை எடுக்க விடாமல் வைத்துக் கொள்கிறீர்கள் எடுத்தாலும் நீங்களே ஒரு பதிலைச் சொல்லி துண்டித்துவிடுகிறீர்கள், அவரை நீங்கள் வெளியே விடாமலும் வைத்துக் கொண்டிருந்தீர்கள், இன்னும் இன்னும் அந்த வீட்டுச் சிறையில் என்னென்ன நடந்தது என்பதை விசாரணை என்று வந்தால் கேள்விகளைப் பொறுத்து அப்பா சொல்லுவார் எனக் கருதுகிறேன். இதற்குப் பிறகு 2013 இல் காமன்வெல்த் உண்ணாநிலை போராட்டம் நடக்கிறது. அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தினீர்கள். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அவதூறுகளையும் பரப்பினீர்கள். 2012 இல் இருந்து கருத்து வேறுபாடு முற்றி அவர் மீது நீங்கள் ஒரு பழி சுமத்தி அதன் தொடர்ச்சியாக அவரது அரசியல் செயல்பாடுகளை மேற்சொன்ன வகைகளிலெல்லாம் முடக்கி காமன்வெல்த் போராட்ட்த்தில் அவரது நேர்மையையும் இழிவு செய்து அதன் பின்னும் அவர் உங்களோடுதான் வாழ வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பீர்கள். இத்தனை முரண்பாடுகள் இருக்கிற போது அது முற்றுகிற போது அவர் அந்த வாழ்க்கையை விட்டு வெளியேறுகிறார். இதில் என்ன தவறிருக்க முடியும். அதையும் மீறி அவர் உங்களுடனே இருந்திருந்தால் அது அவருக்கு என்ன வாழ்வாக இருந்திருக்கும். அலைபேசியை உங்களிடம் கொடுத்துவிட்டு, யாரோடும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல், பொதுக் கூட்டங்களில் உரையாற்றாமல், போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதென்றால் மாணவப் பருவத்திலிருந்தே அரசியலே வாழ்வென வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவை பொறுத்தவரை அது தற்கொலைக்குச் சமமில்லையா? இந்த நிலையில் இதோடு கூடுதலாக நீங்கள் அவரை ஏமாற்றி ஒரு துரோகம் இழைத்தீர்கள். அது குறித்து தேவைப்படும் போது பேசலாம். அதற்கு அப்பா உரிய விளக்கம் கேட்டும் நீங்கள் எந்த நேர்மையும் இல்லாமல் தொடர்ச்சியாகத் தவிர்த்தீர்கள். எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் 2014 இல் அவர் வெளியேறினார், என் வீடு வந்து சேர்ந்தார்.
இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு பற்றி பேசுகிறீர்கள்.
தொடரும்...
சுதா காந்தி தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக