Sundar P : காவிரி ஆற்றுக்கு “கரிகால் சோழப் பேராறு” என்றும் பெயர் இருந்திருக்கிறது.
இதனை கி.பி.1890-லேயே கல்வெட்டுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனைக் குறிக்கும் கல்வெட்டை தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி நான்கில் 394-ம் கல்வெட்டாக அரசு பதிவு செய்துள்ளது.
வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தக் கல்வெட்டு இருக்குமிடத்தை தேடி கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய குடவாயில் பாலசுப்ர மணியன்....
“குலோத்துங்க சோழன் காலத்திலிருந்தே கரிகால சோழ கரையை பலப்படுத்த ‘விநியோகம்’ என்ற பெயரில் வரிவசூல் முறை இருந்தது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
இது, காவிரிக்கு கரிகால சோழ பேராறு என்று இன்னொரு பெயர் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.
மூன்றாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறிய நான்காம் ஆண்டில் (கி.பி.1220) முசுறி (முசிறி) என்ற மும்முடிச் சோழன் பேட்டையில் காவிரியிலிருந்து பிரியும் வாய்க்காலில் ஒரு மதகுப் பாலம் கட்டப்பட்டது.
குறுநில மன்னரான வாணகோவரையரின் படைத் தளபதி ராமன் சோழகோன் என்ற நிலவாளை வெட்டுவார் நாயன் என்பவர்தான் இந்த மதகு பாலத்தைக் கட்டி இருக்கிறார்.
இதற்கு ஆதாரமான கல்வெட்டு அந்த பாலத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 800 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த கல்வெட்டு அழியாமல் இருக்கிறது.
இந்த கல்வெட்டை ஆதாரமாக வைத்துத்தான் காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்று பெயர் இருந்ததை இந்திய கல்வெட்டுத் துறை உறுதி செய்தது.
இந்திய கல்வெட்டுத் துறையின் ஆண்டறிக்கை குறிப்பு மற்றும் கல்வெட்டுச் சாசன நகலை வைத்து இதை உறுதி செய்துள்ளோம்.
ஆனால், அதன் முக்கியத்துவம் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
அதனால் தான் அதை ராணி மங்கம்மாள் மதகு என்று அந்தப் பகுதி மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.
தொடர்ந்தும் அவர் கூறும் போது,
“தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சின்னம்” என்று மட்டும் கல்வெட்டு மதகு இருக்கும் இடத்தில் ஒரு அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள்.
அதில் வேறு எந்த விபரமும் இல்லை. சோழர் காலத்தில் இந்த மதகு திறப்பான்கள் மரப்பலகைகளில் இருந்திருக்கின்றன..
பொதுப் பணித் துறையினர் அதை ரோலிங் ஷட்டர்களாக மாற்றிய போது, மதகுப் பாலத்தின் அடியில் உள்ள கல்வெட்டில் பாதியை அதன் முக்கியத்துவத்தை உணராமல் சுவர் வைத்து மறைத்து விட்டார்கள்.
இப்போது, திருச்சி-நாமக்கல் புறவழிச் சாலைக்கு இந்தப் பகுதியை ஒட்டியே பணிகளை மேற்கொண்டிருக் கிறார்கள். இந்தப் பகுதியில் சாலை அமைத்து கனரக வாகனப் போக்குவரத்துத் தொடங்கினால் வரலாற்றுச் சின்னமான இந்த கல்வெட்டுக்கு ஆபத்து வந்துவிடும் என நாங்கள் அஞ்சுகிறோம்.
எனவே, கல்வெட்டை மறைத்திருக்கும் செங்கற்சுவரை அகற்றி இந்த மதகுப் பாலத்தின் மீது எந்த வாகனங்களும் செல்லாத வண்ணம் தடுப்பு ஏற்படுத்த வேண்டும்.
இம்மதகு குறித்த தகவல்களை ஒரு கல்வெட்டிலோ அல்லது பலகையிலோ எழுதி வைத்து மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும்படி செய்யவேண்டும்”
என்றும் வலியுறுத்தினார்.
தி இந்து
July 7, 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக