வெள்ளி, 9 ஜூலை, 2021

பிரான்சில் இந்திய அரசின் ரூ.176 கோடி சொத்துக்களை முடக்கியதா தனியார் நிறுவனம்?

img


theekkathir.in : பாரீஸ்:
வரி பிரச்சனையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள 176 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியாவுக்குச் சொந்தமான 20 சொத்துகளை முடக்க அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இந்திய சொத்துகளை முடக்கியது குறித்து அரசுக்கு எந்தஅறிவிப்பும் கிடைக்கவில்லை என்று ஒன்றிய பாஜக அரசு கூறுகிறது. 

2006 மற்றும் 2007 ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனெர்ஜி தனது பங்குகளை இந்தியாவில் உள்ள கெய்ர்ன் நிறுவனத்திற்கு மாற்றியது. ஆனால் இந்த பங்குகளை மாற்றியதால் முதலீட்டு ஆதாயத்தை கெய்ர்ன் இந்தியா நிறுவனம் அடைந்துள்ளதாக கூறி அந்த நிறுவனத்திற்கு ரூ.10,247 கோடி வரி விதித்து இந்திய வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில் கெய்ர்ன் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியும் அந்நிறுவன பங்குகளை விற்றும் வரி வசூலில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசுவிதித்த வரி விதிப்பிற்கு எதிராக கெய்ர்ன் நிறுவனம் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சில ஆண்டுகளாக நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு இந்த விவகாரம் வரி பிரச்சனை அல்ல என்றும்  முதலீடுதொடர்பானது என்றும் ரூ.10,247 கோடி வரி விதித்தது நியாயமில்லை என்றும் கடந்தஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித் தது. கெய்ர்ன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ரூ.12,700 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இப்பிரச்சனையில் உரிய தீர்வு கிடைக்காமல் போனதால் இந்திய அரசின்சொத்துக்களை முடக்கி இழப்பை ஈடு செய்ய கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ரூ.176 கோடி மதிப்பிலான இந்திய அரசின் 20 சொத்துக்களை முடக்க பிரான்ஸ்  நீதிமன்றத்தின் உத்தரவை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பிளாட்கள் எனவும், இவற்றின் மதிப்பு 20 மில்லியன் யூரோக்கள் எனவும் தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவால் அந்த சொத்துக்களை இந்திய அரசால் விற்க முடியாது என கூறப்படுகிறது.ஆனால் சொத்து முடக்கம் தொடர்பாக இதுவரை எவ்வித நோட்டீஸோ நீதிமன்ற உத்தரவோ தங்களுக்கு வரவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. 

சீத்தாராம் யெச்சூரி விமர்சனம் 
இப்பிரச்சனை தொடர்பாக மோடி அரசுக்கு சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் பொதுச் சொத்துக்களை சூறையாடுவது மட்டுமல்ல, வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் சொத்துக்களை பாதுகாக்கவும் மோடி அரசால் முடியவில்லை; தேசிய பாதுகாப்புக்கே இந்த ஆட்சி ஓர் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது என்று அவர் சாடியுள்ளார்

கருத்துகள் இல்லை: