செவ்வாய், 13 ஜூலை, 2021

இந்தியாவை நூறு யூனியன் பிரதேசங்காளாக்குவதே ஆர்.எஸ்.எஸ் நோக்கம்! – பசுபதி தனராஜ்

aramonline.in : இந்தியாவை 100 பகுதிகளாகப் பிரித்து, அவையாவும் டில்லியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் கோல்வால்கர் வலியுறுத்தி வந்தார்! மாநில அரசுகளே இருக்கக்கூடாது என சொல்லி வந்தார். ஆர் எஸ் எஸ்ஸும், அதன் அரசியல் முகமான பாஜகவும் கூட்டாட்சி முறைக்கும், மொழிவழி மாநிலங்களுக்கும் எதிரானவை !மாநில கலாச்சார ,மொழி அடையாளங்களை, அவற்றின் தனித்தன்மைகளை அழித்து ” ஒரே நாடு, ஒரே மக்கள்” என கோஷமிட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க வேண்டும் என்பது தான் அவர்கள் நோக்கம் !

தமிழ்நாட்டை  இரண்டாக  அல்லது மூன்றாக பிரிக்க வேண்டும் !  அதில் முதல் கட்டமாக கொங்கு நாடு பகுதியை யூனியன் பிரதேசமாக ஆக்க வேண்டும் என பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்களின் ஒரு குரலை தினமலர் நாளிதழ் மூலமாக ஒலிக்க  வைத்திருக்கிறார்கள்  !

அமையப் போகும் கொங்குநாடு ஒன்றியப் பகுதியில் 9 மாவட்டங்களும்,10 நாடாளுமன்ற தொகுதிகளும் இருக்குமாம் !

யாரும் இதுவரை கேட்காத ஒரு கோரிக்கையை , அதுவும் உரிமைகள் இல்லாததொரு யூனியன் பிரதேசத்தை, தமிழகத்தை பிரித்து உருவாக்க பாஜக  தலைமை சதித்திட்டம் போடுகிறது !- ஆர்.எஸ்.எஸ் திட்டப்படி!

தமிழ்நாட்டு அரசை மறைமுகமாக மிரட்டிப் பார்க்கும் நாலாந்தர இழிநிலை போக்கு இது !

மற்றைய மாநிலங்களை எல்லாம் விட ஒன்றிய அரசின் அதிகாரச்  சுரண்டலுக்கு எதிராக, தமிழ் மண்ணிலிருந்து எதிர்குரல் எழும்பி வருவது பாஜக தலைமைக்கு எரிச்சலை ஊட்டுகிறது !

ஜி எஸ் டி வரி வசூலில் பல மாநிலங்களை வஞ்சிப்பது, ஹைட்ரோகார்பன்,பெட்ரோல் கிணறுகளை அமைப்பதை எதிர்ப்பது, அணு ஆலைகளுக்கு எதிர்ப்பு, இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பது, “நீட்” தேர்வை எதிர்ப்பது, மாநில உரிமைகளை அத்துமீறி அபகரிப்பது போன்றவைக்கு எதிராக தமிழ்நாடு அரசும், மக்களும் எதிர்ப்பதற்காக வஞ்சம் தீர்க்க,  வஞ்சகமாக போடும் திட்டமே ” கொங்கு நாடு பிரிவினை மிரட்டல் !

இந்தியாவில் மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப் பட வேண்டும் ! அப்போது தான் பாமரனின் மொழி அம் மாநிலத்தின் ஆட்சி மொழியாகும் என கனவு கண்டார் காந்திஜி ! அதை செயலாக்க 1954 ல் பஸல் அலி, ஹச்.என்.குன்ஸ்ரூ, கே.எம்.பணிக்கர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது !

அதன் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் எல்லைக்கோடுகள் புதிதாகப் போடப்பட்டன.

அப்போது மார்ஷல் நேசமணி அவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த நாஞ்சில் நாட்டைப் பிரித்து தமிழ்நாட்டோடு சேர்க்க வீரப்போர் நிகழ்த்தினார் ( அன்று ராமசுப்பு அய்யரின் தினமலர் நாளிதழ் நற்பணியாற்றியது! ஆனால் அது தரம் கெட்டு, தறிகெட்டு கீழான நிலைக்கு தாழ்ந்த நிலைக்கு சென்று விட்டது)

கூட்டாட்சி  வேண்டாத ஒற்றையாட்சி!

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம் ! உத்ராகண்ட் பிரிந்தும் கூட உ.பி.யில் உள்ள  மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 80.

அங்கிருந்து தான் நேருஜி, இந்திரா காந்தி,   சாஸ்திரி, ராஜீவ்காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், வாஜ்பாயி மற்றும் இன்றைய பிரதமர் மோடி உட்பட 8 பிரதம மந்திரிகள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் .

அந்த மாநிலம் 6 பிரதான பகுதிகளைக் கொண்டது ! 20 கோடி மக்கள் தொகையைக் கொண்டது !.

(பிரிட்டன்,பிரான்ஸ்,ஜெர்மனி — ஆகிய மூன்று நாடுகளின் மக்கள் தொகைக்கு சமமானது)

உ.பி.மிகப்பெரிய மாநிலமாக இருப்பதால் முன்னேற்றமின்றி, வறியவர்கள் அதிகம் வாழும் பின் தங்கிய மாநிலமாகவே நீடிக்கிறது! அது பல பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பது  பல்லாண்டுகளாக இருந்து வரும் கோரிக்கை!

மாயாவதி உ.பி.யின் முதலமைச்சராக இருந்த போது 2000- ஆம் ஆண்டு உ.பி.யின் விதான் சபா (சட்டமன்றம்) பாஹல்கண்ட்,ரோஹில்கண்ட்,புந்தல்கண்ட்,பூர்வாஞ்சல் என நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அனைத்து அரசுகளும் கிடப்பில் போட்டுவிட்டன !

 

பஸ்சிம் பிரதேஷ் வேண்டும் ! 22 மாவட்டங்களை கொண்டது. 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் உ.பி.யில் எழுந்த கோரிக்கை அப்படியே இருக்கிறது!

அவத் பிரதேஷ் வேண்டும் ! 14 மாவட்டங்கள் உள்ளன. 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டது. 7 கோடி மக்கள் உள்ளனர் !

பூர்வாஞ்சல் 32 மாவட்டங்களை கொண்டுள்ளது. 30 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்டது. கோராக்பூரை தலை நகராக்கி தனி மாநிலம் வேண்டும் என்கிறார்கள்.

புந்தல்கண்டில் ஏழு மாவட்டங்கள் உள்ளன! இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களை கொண்டுள்ளது. அது தனிமாநிலமாக வேண்டும் என்கிறார்கள்!

இது போன்ற அங்குள்ள மக்களின் சுமார் 60 ஆண்டுகால கோரிக்கை மதிக்கப்படவே இல்லை ஆனால், எப்போதும், எவராலும்  எழுப்பப்படாத  கொங்கு மண்டலம் தனி ஆட்சிப் பகுதியாக ஆக வேண்டும் என்பது எத்தகைய கீழ்த்தரமான வாதம்!

80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் உத்தரபிரதேசத்தை நான்காகப் பிரிக்காது, 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் கொங்கு  நாடு தனி ஆட்சிப் பகுதியாக்கப்பட வேண்டும் என்பது கடைந்தெடுத்த அரசியல் கயமை !

கட்டுரையாளர்;  பசுபதி தனராஜ் 

எழுத்தாளர்,

வழக்கறிஞர்,

முது பெரும் காங்கிரஸ்காரர்.

முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்.

கருத்துகள் இல்லை: