தினகரன் : தமிழகத்தில் அகதிகள் முகாம் நரகம் போல உள்ளது இலங்கை தோட்ட தொழிலாளர் வாரிசுகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: தமிழகத்தில் அகதிகள் முகாம்கள் நரகம் போல உள்ளது.
எனவே இலங்கை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் தனி முகாமில் உள்ள ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 65 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
நாங்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் எங்களின் மூதாதையர்கள் பிழைப்புக்காக இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களுக்கு கூலி தொழிலாளர்களாக சென்றனர். அதன்பிறகு, அவர்களது வாரிசுகள் அங்கேயே இருந்தோம்.
கடந்த 1983ல் இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டது. இதனால் உயிருக்கு பயந்து தமிழகம் வந்தோம். உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக படகுகளில் வந்ததால் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டோம். இந்திய குடியுரிமை கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். இருப்பினும் எங்களுக்கு இந்திய குடியுரிமை சான்று வழங்கவில்லை. எங்களை அகதிகளாக கருதாமல், தாயகம் திரும்பியவர்களாக கருதி இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். தமிழக அரசு தரப்பில், ‘‘மனுதாரர்கள் 1983-85 இடையிலான காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்தனர். இவர்கள், திருச்சி கொட்டப்பட்டு, மதுரை, பெரம்பலூர், கரூர், மண்டபம் உள்ளிட்ட அகதிகள் முகாமில் உள்ளனர். இவர்களை அகதிகளாகவே கருதுகிறோம். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற தகுதியானவர்கள் அல்ல’’ என கூறப்பட்டது. மத்திய அரசு தரப்பில், ‘‘இலங்கையில் இருந்து கடந்த 1983க்கு பிறகு சட்டப்பூர்வ பயண ஆவணங்களுடன் இந்தியாவிற்கு வந்தவர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
எந்தவித ஆவணங்களுமின்றி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர்கள்இந்திய குடியுரிமை பெற தகுதியற்றவர்கள்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு : அரசியல் அமைப்பு சட்டப்படி அகதிகளாக இருந்தாலும், தஞ்சம் அடைந்தவர்களாக இருந்தாலும் அவர்களது உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். மனுதாரர்களின் நிலை திரிசங்கு சொர்க்கமாக உள்ளது. இவர்கள் நிலையை பார்க்கும்போது என் இதயத்தில் ரத்தம் கசிகிறது. இருப்பினும் நீதித்துறையின் லட்சுமண ரேகையான எல்லையை தாண்ட முடியாது. எனவே, குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
தமிழகத்திலுள்ள பல அகதிகள் முகாம் நரகத்தைப் போல உள்ளன. ஐபிஎஸ் அதிகாரிகள் அகதிகள் முகாமுக்கு மாற்றப்படுவதை தண்டனையாக கருதுகிறார்கள். 35 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும், இன்றும் கண்காணிப்பில் தான் உள்ளனர். மனுதாரர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கேட்டு, புதிதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டர்கள் இந்த விண்ணப்பங்களை தாமதமின்றி மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசு அந்த விண்ணப்பங்கள் மீது 16 வாரத்தில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.மனுதாரர்களின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது மனுதாரர்கள் உயிருக்கு பயந்து இந்தியா வந்தவர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
தொழில்நுட்ப காரணங்களைக் கூறி நிராகரிக்க நினைக்க கூடாது. ஏனெனில், இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் விசாவுக்காக காத்திருக்க முடியாது. இவற்றை கருத்தில் கொண்டு மனுதாரர்களின் விண்ணப்பத்தை ஏற்கும் வகையில், மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். மனுதாரர்களின் நிலை திரிசங்கு சொர்க்கமாக உள்ளது. இவர்கள் நிலையை பார்க்கும்போது என் இதயத்தில் ரத்தம் கசிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக