செவ்வாய், 13 ஜூலை, 2021

நடன பெண்களை வேட்டையாடும்.. - பிகார், உ.பி-யில் நடக்கும் கொடுமை

திருமணம் நடனம்

சிங்கி சின்ஹா - பி பி சி நிருபர் : அது ஒரு சிறிய ஒலிப்பதிவு அறை. சில பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கதைகளை பதிவு செய்ய வேண்டும். இது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர்களிடம் கூறப்பட்டது. அவர்களின் கதைகளைப் படிப்பவர்கள், கேட்பவர்களில் யாராவது அவர்களைக் காப்பாற்ற முன்வரலாம். அவர்களுக்கு இது ஒரு நம்பிக்கைக் கீற்றாகத் தோன்றியது.முப்பதுகளின் பிற்பகுதியில் இருக்கும் ஒரு பெண் இந்தச் சிறுமிகளை அறிமுகப்படுத்துகிறார். இந்த பெண்கள் பீகாரின் சில பகுதிகளின் திருமணங்கள் அல்லது விருந்துகளில் சிறப்பு வகையான ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுக்களில் நடனமாடுகிறார்கள், பாடுகிறார்கள். ஆனால் அவர்களது கலை அரங்கேறும் நேரம், பெரும்பாலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தப்படுகிறார்கள்.

அவர்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள். தகாத சீண்டல்கள் சில சமயங்களில் வன்புணர்வு வரை செல்கிறது.<span>

திருமணங்களில் விளையாட்டாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது இயல்பு. இதுபோன்ற துப்பாக்கிச் சூட்டில் இந்த சிறுமிகள் கொல்லப்பட்டதாகப் செய்திகள் வந்துள்ளன. ஜூன் 24 அன்று, நாலந்தாவில் இதுபோன்ற ஒரு திருமண விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுவாதி என்ற பெண் இறந்தார். புல்லட் அவரது தலையைத் தாக்கியது. ஒரு ஆண் நடனக் கலைஞரும் சுடப்பட்டார்.

கொரொனாவால் இந்த நாட்டியக்காரிகளின் நிலை பரிதாபகரமானது.

கொரோனா தொற்றுநோய் அவர்களின் வாழ்க்கை புரட்டிப்போடப்பட்டதாகவும் தெரிகிறது. பொது முடக்கத்தால் இவர்களுக்கான வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டது. வாடகை கொடுப்பது, குடும்பத்தை நடத்துவது எவ்வாறு? சிலர் பாலியல் தொழிலிலும் ஈடுபட வேண்டியிருந்தது என்று ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவில் பாடும் ரேகா வர்மா கூறுகிறார்.

ரேகா, தேசியக் கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். இசைக்குழுவில் பணிபுரியும் அத்தகைய ஆண் மற்றும் பெண் கலைஞர்களின் உரிமைகளுக்காக போராடுவதற்காக அவர் 2018இல் இந்த அமைப்பை உருவாக்கினார்.

இந்தப் பெண்களில் ஒருவர் தனது கொடுமையான கதையைச் சோகத்துடன் தெரிவிக்கிறார். அவரின் அலங்காரமெல்லாம் அவரின் கண்ணீரில் கரைந்தது. தனது பெயர் திவ்யா என்று கூறினார். ஆனால் அது உண்மையான பெயர் இல்லை. மறைந்த நடிகை திவ்ய பாரதியைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதனால் தன்னை ‘திவ்யா’ என்றும் பெயரிட்டுக் கொண்டாள் என்றும் கூறினார். ஆனால் அவரது வாழ்க்கை எளிதானது அல்ல.

மேடையில் திவ்யா நடனமாடுகிறார். குடிபோதையில் உள்ள பல ஆண்கள் அங்கு கூடியுள்ளனர். இந்தப் பெண்களுடன் தகாத முறையில் அவர்கள் நடக்கிறார்கள். இவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடும் நடத்துகிறார்கள். ‘ஆர்க்கெஸ்டிரா’ என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டத்தில் திவ்யாவும் ஒருவர்.


பிகார் மாநிலம் பூர்ணியாவில் பிறந்தவர் திவ்யா. தனது குழந்தைப் பருவத்திலேயே இவரது குடும்பம் வேலை தேடி பஞ்சாப் சென்று விட்டது. 13 வயதில் திருமணம் முடித்துக் கணவனுடன் வாழ வந்தாள்.

கணவர் ஒரு ஓட்டுநராக இருந்தார், அவர் அடிக்கடி அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். ஒரு நாள் கணவராக் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போது, தனது மகள்களுடன் பாட்னாவுக்கு வந்தார். ஆன்லைன் நண்பர் ஒருவர், ஷூட்டிங்க் வேலை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

அவர் திவ்யாவை தனது காதலியுடன் மிதாபூரில் உள்ள ஒரு பிளாட்டில் தங்கவைத்தார். மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறினார். “17 ஆண்டுகள் கணவரால் துன்புறுத்தப்பட்டேன்” என்று திவ்யா கூறுகிறார்.

இறுதியாக, திவ்யா இந்த ஆண்டு பிப்ரவரியில் நடன வேலையில் சேர்ந்தார். அவளுக்கு 28 வயது. தான் அடைய விரும்பிய உயரம் இதுவல்ல என்பதை அவர் அறிவார். ஆனால் தொற்றுநோயும் அவற்றின் சொந்தச் சூழ்நிலைகளும் அவரைக் கட்டாயப்படுத்தின.

பிகார் மற்றும் உ.பி.யில், பெண்கள் நடனக் கலைஞர்கள் திருமண விழாக்களிலும், பிறந்தநாள் விழாக்களிலும் அரை குறை ஆடைகளை அணிந்து நடனமாடுவது இயல்பானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், மேடையில் ஆடும் இந்தப் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன. நடனத்தைக் காண வந்தவர்கள் அவர்களை நடன மேடையில் வலுக்கட்டாயமாகக் கீழே தள்ளி, சமயத்தில், பாலியல் பலாத்காரம் வரை கூடச் செய்யத் துணிகிறார்கள்.

இந்தக் கொடுமைகளை விவரிக்கும் திவ்யா அழுகிறர். “எங்களுக்கு மரியாதை இல்லை. நான் என்னவெல்லாமோ கனவு கண்டேன். ஆனால் இங்கே வந்து சிக்கிக்கொண்டேன்.”

அவள் சொல்கிறாள், “நான் மிகவும் வெறுக்கும் விஷயம் ஒரு கூண்டில் நடனமாட வேண்டும் என்பது தான். இது கிராமம் முழுவதும் ஊர்வலம் வடிவில் நடத்தப்படுகிறது. மக்கள் எங்களை வீடியோ எடுக்கிறார்கள். எங்களை கேவலப்படுத்துகிறார்கள், எங்களைத் தகாத வார்த்தை கூறுகிறார்கள்.” என்று அவர் வேதனை தெரிவிக்கிறார்.

இந்தப் பெண்கள் ஆண்களால் சீண்டப்படுவதைத் தவிர்ப்பதற்காக இவர்களை சக்கரம் வைத்த கூண்டுக்குள் அடைத்து நடனமாடச் செய்வதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். அதாவது இது பெண்களுக்கான பாதுகாப்பு என்பது அவர்களின் வாதம். ஆனால் சிறைக்குள் அடைபட்டுக் கிடப்பதை இந்தப் பெண்கள் விரும்பவில்லை.

ஜூன் மாதத்தில் ஒரு இரவு, பளபளப்பான ஆடைகளை அணிந்த மூன்று சிறுமிகள் இது போன்ற கூண்டில் நடனமாடினர். சில ஆண்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு தங்கள் செல்பேசியில் காணொளிகளைப் பதிவு செய்யத் தொடங்கினர். ஒரு திருமண விழாவிற்குச் சென்று கொண்டிருந்தது அந்தச் சக்கரக் கூண்டு.

அங்கு சென்றடைவதற்குள், இவர்களது வண்டி பல முறை வழியில் மறிக்கப்பட்டது. ஒரு போஜ்புரி பாடல் ஒலிபெருக்கியில் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கூண்டில் வைக்கப்பட்ட பெண்கள் வெள்ளி இறக்கைகள் கொண்ட பறவைகள் போல தோற்றமளித்தனர். இவர்கள் ஆபாச நடனமாடிக் கொண்டிருந்தனர்.

முன்னாள் புகைப்பட செய்தியாளர் நீரஜ் பிரியதர்ஷி கொய்ல்வாரில் (பீகார்) உள்ள தனது வீட்டிலிருந்து ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியை வீடியோவாக அவர் தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்தார். விரைவில் அந்த வீடியோ வைரலாகியது. இந்தக் காட்சியைப் பார்த்த பலர், திருமணங்களிலும் விருந்துகளிலும் நடனமாடும் நடனக் கலைஞர்களின் கௌரவத்திற்கு எதிரான தாக்குதல் இது என்று கூறினர். .

“விலங்குகளை விட மோசமாக இவர்கள் நடத்தப்படுகிறார்கள். இதுபோன்ற காட்சியை நான் பார்த்ததேயில்லை” என்று நீரஜ் கூறுகிறார்.

பெண்களின் கௌரவத்தைக் காப்பாற்ற என்ற பெயரில் இப்படி கூண்டில் அடைக்கப்படுவது நாம் வாழும் சமூகத்தின் தரத்தைத் தான் பிரதிபலிக்கிறது.

தற்சமயம், தொற்றுநோய், ஊரடங்கு என்று திருமணங்களின் ஆடம்பரங்கள் குறைக்கப்பட்டிருப்பதால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் இந்தப் பெண்கள், பாலியல் தொழில் உட்படப் பல தொழில்களில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். வேட்டையாடப்படும் விலங்குகளுக்கும் எங்களுக்கும் இப்போது வித்தியாசமே இல்லை என்று இந்தக் கூண்டுக்கிளிகள் கதறுகின்றன.

ஆகான்ஷாவின் சகோதரி ஒரு இரவு இதுபோன்ற ஒரு நடன நிகழ்ச்சியில் சுடப்பட்டார். புல்லட் அவள் தலையில் தாக்கியது. ஆனால் அவள் உயிர் பிழைத்தாள். ஆனால் இந்தச் சம்பவம் அகன்ஷாவை உலுக்கியுள்ளது. அவர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முயன்றார், ஆனால் போலீசார் வழக்கைப் பதிவு செய்யவில்லை என்கிறார் ஆர்கெஸ்ட்ரா உரிமையாளர் மணீஷ்.

இந்தப் பெண்களைத் தனது வீட்டில் நடனமாட ஒப்பந்தம் செய்த ராகுல் சிங், “இந்தக் கலைஞர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னை,” என்று கூறினார்.

“யாரும் அவர்களுக்குச் செவிசாய்ப்பதில்லை என்றும் அவர்கள் முற்றிலும் நிராகரிக்கப்படுகின்றனர். நடனம் நடைபெறும் இடத்தில் தான் இல்லை. அங்கு துப்பாக்கிச் சூடு எதுவும் நடைபெறவில்லை,” என்றும் இவர் கூறினார்.

ஆகான்ஷாவும் அவரது சகோதரியும் பீகாரில் ‘ஆர்கெஸ்ட்ரா பேண்ட்’ என்ற குழுவுடன் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்பில் உள்ளனர். இதுபோன்ற நடன நிகழ்ச்சிகளில் பெண்கள் சுடப்பட்டதாக அவர் கேள்விப்பட்டிருந்தார்.”

மது போதையில் நடனத்தைக் காண வரும் மக்கள் மேடையில் சென்று அவர்களைத் தகாத முறையில் நடத்துகிறார்கள் என்றும் சில சமயங்களில் அவர்கள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவார்கள் என்றும் நாங்கள் கேள்விப்பட்டோம்,” என்கிறார் ஆகான்ஷா.

ஆனால் இந்தச் சகோதரிகளுக்கு வேறு வழியில்லை. அவரது தந்தை இறந்தபோது இவர்களது வாழ்க்கை போனது. இரண்டு சகோதரிகளும் குவாலியரைச் சேர்ந்தவர்கள்.அவர்களின் தாயார் வீட்டு வேலை செய்கிறார். குடும்பத்திற்கு வேறு வருமான ஆதாரங்கள் இல்லை,இதில் கல்வி என்பது எட்டாக்கனி.

ஆகான்ஷா பக்கத்து நடனப் பள்ளியில் நடனம் கற்பிக்கத் தொடங்கினார். சில நேரங்களில், அவர் சில நிகழ்ச்சிகளில் நடனமாடுவதற்கு பணம் பெறுவார். இங்கிருந்து பீகார் செல்ல முடிவானது. நடனப் பள்ளியை நடத்துபவர் அவரை கோமல் என்ற பெண்ணுக்கு அறிமுகப்படுத்தினார்.

தொலைக்காட்சி வாய்ப்பு, பெயர், பணம், புகழ் என்று ஆசைகாட்டியதால் தாயாரின் பேச்சையும் மீறிச் சகோதரிகள் இருவரும் ஆர்வம் காட்டினர். தாயாருக்கு ஒரு பெரிய வீடு கட்ட்க் கொடுக்க வேண்டும் என்ற தன் கனவு நனவாகுமென நம்பிய ஆகான்ஷா, இதற்குச் சம்மதித்து, இரு சகோதரிகளும் பிகார் சென்றனர். ஆனால் அங்கு கோமல் இவர்களை, ஓர் அறையில் அடைத்து வைத்து, நடனமாடிப் பணம் சம்பாதித்துத் தனக்குத் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். தேவைக்கு மட்டுமே அறைக்கதவு திறக்கப்பட்டது.

தங்கள் முடிவு தவறு என்று இந்தப் பெண்கள் நினைத்தனர். தொடர்ந்து நடனமாடினாலும் ஒரு நாளைக்கு 1700 ரூபாய் தான் கிடைத்தது. அவர்கள் ஜாக்ரனில் இதைப் பகலில் மட்டுமே செய்திருந்தால் கூட, அதிகம் சம்பாதித்திருக்கலாம். இரவு வீடு திரும்பியும் இருக்கலாம் என்று உணர்ந்தார்கள்.

இப்படியே நடனமாடினால், இறுதியில் படிப்படியாக முன்னேறலாம் என்று நினைத்தார்கள். ஆனால் இதற்கிடையில் ஆகான்ஷாவின் சகோதரி சுவாதி சுடப்பட்டார்.

ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவில், மக்கள் மது போதையில் நடனத்தைக் காண வருகிறார்கள். மது அருந்திய பின் வந்தவர்கள் காற்றில் சுட ஆரம்பித்தனர். இதற்குப் பிறகு அவர்கள் சிறுமிகளுடன் நடனமாடத் தொடங்கினர், அவர்களைப் பிடித்து கிண்டல் செய்யத் தொடங்கினர். சகோதரிகள் இருவரும் தாக்குப் பிடிக்கலாம் என்று நினைப்பதற்குள், துப்பாக்கிச் சூடுதொடங்கியது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஆகான்ஷாவின் சகோதரி சுடப்பட்டார். பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியில்லை. சுவாதி வெளியேற்றப்பட்டார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முன்னா குமார் பாண்டே “முதலாளித்துவ சூழலில் புதிய தொழில்நுட்பம் வருவதாலும், கொரோனாவின் தாக்கம் காரணமாகவும் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுக்களில் பணிபுரியும் பெண்களின் நிலை பரிதாபமாகிவிட்டது,” என்று கூறுகிறார்.

“முன்னரும் இது போன்ற கொடுமைகள் இருந்தன. ஆனால் பெண்கள் முன்னேறி அதிகாரம் பெற்றால் நிலைமை மாறும் என்று நம்பப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்தப் பெண்கள் சமரசம் செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். இது ஒரு பயங்கரமான விஷயம்,” என்கிறார் அவர்.

விருந்துகளிலும் திருமணங்களிலும் நடனமாடும் ரேகா வர்மா, “இந்தப் பெண்கள் பலவீனமான பின்னணியில் இருந்து வந்தவர்கள், ஏற்கனவே கண்ணியமில்லாத ஒரு வாழ்க்கையை நடத்தி வந்தனர்,” என்கிறார்.

இப்போது அவர் இந்தப் பெண் கலைஞர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்தப் பெண் கலைஞர்களுக்கு அரசாங்கம் எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை. எனவே, அவை அதன் நலத்திட்டங்களில் ஒரு பகுதியாக கூட இல்லை.

“நான் அவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறேன், நாங்கள் கலைஞர்களாக கூட அங்கீகரிக்கப்படவில்லை,” என்று ரேகா கூறுகிறார்.

தனது கதையைச் சொல்லும்போது, ரேகா வர்மாவின் குரல் உடைக்கத் தொடங்குகிறது. அவர் தனது வாழ்க்கையில் தாங்கிக் கொண்ட அவமானம் மற்றும் சித்திரவதைகளைப் பற்றி பேசும்போது அவரது நாக்கு தடுமாறுகிறது. சிறு வயதிலேயே, அவர் ஒரு போலீஸ் பதவிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக இறுதித் தேர்வு வரை செல்ல முடியவில்லை.

குடும்பத்தின் வறுமை காரணமாக அவர் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவில் சேர வேண்டியிருந்தது. முதலில் ஜாக்ரான் மற்றும் திருமண விழாக்களில் பாடத் தொடங்கினார். ஒரு பாடகரிடமிருந்து நன்றாகப் பாடவும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். ஆனால் பணப் பற்றாக்குறை காரணமாக இது முழுமையடையாமல் இருந்தது.

“நாங்கள் பாடிப் பாடிப் பாடகர்களைப் பிரபலப்படுத்துகிறோம். ஆனால் நாங்கள் எப்போதும் திரைக்குப் பின்னாலேயே இருக்கிறோம்.” என்று கூறுகிறார்.

ஆட்கடத்தலுக்கு உள்ளாகும் பெண்கள்

இந்த இசைக்குழுக்களில் பணிபுரியும் பெரும்பாலான பெண்கள், ஆள் கடத்தலுக்கும் உள்ளாகிறார்கள். இவர்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பிகாரை அடுத்த நேபாளத்திலிருந்தும் கொண்டு வரப்படுகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி, ரக்ஸாலில் ஆர்கெஸ்ட்ராவில் பணிபுரிந்த அத்தகைய ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செப்டம்பர் 23, 2020 அன்று, சமஸ்திபூரில் ஒரு இளைஞன் ஒரு நடனக் கலைஞரை சுட்டுக் கொன்றான். இந்தச் சம்பவங்களில் பெரும்பாலானவை தலைப்புச் செய்திகளாகக் கூட வருவதில்லை. இதுபோன்ற வழக்கில் எந்தவொரு ஆதாரமும் சாட்சிகளும் விரைவில் கிடைக்காததால் காவல்துறை எப்போதாவது தான் ஒரு வழக்கை பதிவு செய்கிறது.

இரண்டாவதாக, இந்தப் பெண்கள் களங்கப்படுத்தப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள், சமூகத்தில் அவர்களைப் பற்றி மிகவும் மோசமான கருத்துக்கள் உள்ளன. இந்தப் பெண்கள் ரகசியமாக வாழ்கின்றனர். இந்தப் பெண்கள் சமுதாயத்தின் ஆதரவைப் பெறுவதில்லை, எனவே அவர்கள் எல்லா அமைப்புகளின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.

தேசியக் கலைஞர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் அக்லாக் கான் கூறுகையில், “பிரச்சினை கண்ணியம் பற்றியது தான். ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுக்கள் பீகாரில் சட்டவிரோத வேலைகளைச் செய்வதால் அவை செழித்து வருகின்றன. இந்த இசைக்குழுக்கள் தங்களைப் பதிவு கூடச் செய்து கொள்வதில்லை. இது வெறும் பொழுதுபோக்கு அல்ல. வேறு ஏதோ இதன் பின்னணியில் உள்ளது. ” என்கிறார்.

“சமுதாயத்தில் இவர்களைப் பற்றி நிலவும் கருத்து மற்றும் அணுகுமுறை காரணமாக அவர்களுக்காகப் போராட யாரும் முன்வருவதில்லை. இசைக்குழு உரிமையாளர்கள் ஒன்றும் செய்வதில்லை. அவர்கள் அவர்களை உறிஞ்சி விட்டுவிடுகிறார்கள். பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான இசைக்குழுக்கள் உள்ளன. பொழுதுபோக்கு என்ற போர்வையில் அவர்கள் பெண்களைச் சுரண்டுவதற்கான மையங்களாக மாறிவிட்டனர்,” என்கிறார்.

பேராசிரியர் முன்னா குமார் பாண்டே கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, திருமணம் அல்லது விழாக்களில் நடனமாட சிறுமிகளை அழைப்பது ஒரு சமூகத் தகுதியாகவே மாறியுள்ளது. அத்தகைய கூட்டங்களில் சண்டைகள் நடக்கின்றன. பின்னர் தோட்டாக்கள் சுடப்படுகின்றன. பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால் திருமணங்களிலும் விருந்துகளிலும் எளிதாகக் கிடைக்கும்.

பாலியல் உணர்வுகளைத் தூண்டும் காட்சிகள் திரையில் காண்பிக்கப்படும் போது, இது பார்வையாளர்களின் ஆர்வத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற காட்சிகளைப் பார்த்த பிறகு, ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவின் நிகழ்ச்சியிலும் இதேபோன்ற நேரடி நிகழ்ச்சிகளை மக்கள் கோரத் தொடங்குகிறார்கள்.

பெரும்பாலான பெண்கள் வயதுக்கு வராத சிறுமிகளே. அவர்களுக்குப் பணமும் தேவை. சிறுமிகள் குறைவான ஆடைகளை அணிந்து நடனமாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திவ்யாவுக்கு இது விருப்பமில்லை. அமைப்பாளர் தான் அவர்களின் பணத்தை வைத்திருக்கிறார். அவர்கள் வாடகை செலுத்த வேண்டும். குழந்தையின் பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும்.

“மக்கள் கழுகுகளைப் போல எங்களிடம் வருகிறார்கள், அவர்கள் எங்கள் ஆடைகளைக் கூட கிழிக்கிறார்கள்,” என்று வேதனையுடன் கூறுகிறார் திவ்யா.

மேடையில் இருந்து கூண்டுகள் வரை, அவர்கள் எப்போதும் வேட்டையாடப்படுகின்றனர். இது அவர்களின் வாழ்க்கை. கூண்டுப் பறவையின் வாழ்க்கை.

திவ்யா இன்னும் கனவு காண்கிறாள். அவள் திரைப்படங்களை எவ்வளவு நேசித்தாள் என்று சொல்கிறாள்.

சில இரவுகளில் நடன நிகழ்ச்சியில் ‘கழுகுகள்’ தன்னைச் சுற்றி வரத் தொடங்கும் போதெல்லாம், அவர் தன்னைத் திவ்யா என்று பெயரிட்டுக் கொண்ட அந்த அழகான நடிகையின் முகத்தை நினைவில் கொள்கிறார்.

கருத்துகள் இல்லை: