tamil.oneindia.com : சென்னை: கிழக்கு கடற்கரை சாலைக்கு தமிழ் சோழ பேரரசர் ராஜராஜ சோழன் பெயரை சூட்டும்படி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை(East Coast Road) அமைந்துள்ளது.
சுமார் 777 கி.மீ நீளமுள்ள இந்த சாலையில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள், ஆன்மிக தலங்கள் குவிந்து கிடக்கின்றன.
இந்த சாலையில் அமைந்துள்ள பல்லவர் கால சிற்பங்கள் நிறைந்த மாமல்லபுரம் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலம் என்பது நமது அனைவருக்கும் தெரியும்.
இதனை தொடர்ந்து வெளிநாட்டினர் வந்து குவியும் மலிவு விலை மதுக்கூடங்கள் நிறைந்த பாண்டிச்சேரியும் கிழக்கு கடற்கரை சாலையில்தான் உள்ளது.
பெருமை வாய்ந்த கிழக்கு கடற்கரை சாலை இதை விட்டால் தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவில், வேளாங்கன்னி மாதா கோவில், நாகூர் தர்கா, குலசை முத்தாரம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், புகழ்பெற்ற கடற்கரைகள் என்று கிழக்கு கடற்கரை சாலை செல்லும் இடமெல்லாம் சிறப்பு வாய்ந்த இடங்கள், கோவில்கள், தேவாலயங்கள் அமைந்துள்ளன.
இராசராச சோழன் பெயர் இத்தகைய சிறப்பு வாய்ந்த கிழக்கு கடற்கரை சாலைக்கு தமிழ் சோழ பேரரசர் இராசராச சோழன் பெயரை சூட்டும்படி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது தமிழ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு வர்த்தக சங்கம். கப்பல் கொள்ளையர்களிடமிருந்து கடல் வணிகர்களை காப்பாற்ற, இந்திய வரலாற்றில் முதன் முதலாக கப்பல் படையை நிறுவி கடல் வாணிகத்தை பெருமளவு அதிகரிக்கச் செய்தவர் இராசராச சோழன் என்று பெருமையாக குறிப்பிடுகிறார் தமிழ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவரும், இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினருமான சோழநாச்சியார் ராஜசேகர்.
கோரிக்கை வைத்தனர் 'இது மட்டுமின்றி தமிழர்களின் பண்பாட்டை அயல் நாடுகளில் நிலை நிறுத்தியவர் பேரரசன் ராஜராஜ சோழன். தென் கிழக்கு ஆசியாவில் பல நாடுகளை வென்று அரசாட்சியையும் செய்தவர். அவரின் கடல் வணிக பங்களிப்பையும் வெற்றியையும் அங்கீகரிக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலைக்கு பேரரசன் ராஜராஜ சோழன் பெயரை சூட்ட வேண்டும்' என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கையை அழுத்தமாக பதித்துள்ளார் சோழநாச்சியார் ராஜசேகர்.
ஏற்கனவே பழைய மாமல்லபுரம் சாலைக்கு(OMR) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரை சூட்டி பெருமைபடுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தந்தையின் வழியில் மகன் ஸ்டாலினும், கிழக்கு கடற்கரை சாலைக்கு பேரரசன் ராஜராஜ சோழன் பெயரை சூட்டினால் தமிழ் உலகம் ஸ்டாலினை என்றும் நினைவு கூறும் என்று உறுதியாக கூறுகின்றனர் தமிழ் வர்த்தக சங்கத்தினர். முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கையை ஏற்பாரா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக