Villavan Ramadoss : தற்கொலைப் பாதையில் சில்லறை வணிகம்...
கொரோனா இரண்டாவது அலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் அத்தியாவசிய பொருட்களின் விலையில் நிகழ்ந்திருக்கிறது.
கொள்முதல் விலை படுமோசமாக சரிந்திருக்கிறது. தக்காளி, பூசணிக்காய், மா, கொய்யா என பல அழுகும் பொருட்கள் வண்டிக் கூலிக்குகூட காணாததால் அழுகி வீணாகிப்போன செய்திகள் பரவலாக வந்தன.
ஆனால் சில்லறை விலையில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. ஓசூரில் காய்கறிகளில் பெரும்பாலானவை கிலோ 20 ரூபாய்க்குள் கிடைக்கும். இப்போது சராசரியாக 40 ரூபாய்க்கு வந்துவிட்டது.
விவசாயிகளிடம் மாம்பழத்தை வாங்க ஆளில்லாமல் இருந்தபோது இங்கே 50 ரூபாய்க்கு குறையாமல் விற்றது.
போன ஆண்டு புளியின் கொள்முதல் விலை 45 ரூபாய். வழக்கமாக ஒரு ஆண்டு வரை ஸ்டாக் வைக்கலாம்.போன வருடம் வாங்கிய புளி இன்றும் இருப்பில் இருக்கிறது, அடுத்த ஆண்டுவரை அதுவே தாங்கும் என்பதாக நிலை இருக்கிறது. கொள்முதல் விலை இப்போது 35 ரூபாய். இருப்பு வைத்த வியாபாரிகளுக்கு இன்றைய நட்டமே கிலோவுக்கு 10 ரூபாய். அதனால் புதிய புளியை யாருமே வாங்குவதில்லை. இது விவசாயிகளுக்கு நட்டம். ஆனால் சந்தையில் புளி விலை அப்படியேதான் இருக்கிறது.
25000 முதல் போட்டு வளர்த்த பீன்ஸ் மூலம் 4000தான் வந்தது என்று ராயக்கோட்டை விவசாயி ஒருவர் சொல்கிறார்.
பொது முடக்கத்தின்போது இருந்ததைவிட இப்போது கறிக்கோழி, முட்டை விலை 25% கூடி இருக்கிறது.
இதனால் வியாபாரிகள் லாபம் பார்க்கிறார்களா என்றால், இல்லை என்பதே கள நிலவரம்.
காய்கறிகள் விற்பனை மற்றும் கறிக்கோழி விற்பனை கிட்டத்தட்ட 50% குறைந்துவிட்டது என்றே அருகமை கடைகளில் சொல்கிறார்கள். காய்கறி பழம் வீணாவது அதிகமாக இருக்கிறது என்றும் தெரிகிறது.
மக்கள் தங்களது உணவுத் தேவையை குறைப்பது என்பது பல கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும் சில்லறை வணிகத்தை நிலைகுலைய வைத்துவிடும்.
இந்த நிலைக்கு என்ன காரணம், உண்மையில் விலை உயர்வின் பலன் யாருக்குப் போகிறது என்பதை அந்த துறை ஆட்கள் கண்டுபிடிப்பது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக