Vincent Raj ஆதிக்கசாதி இளைஞர்களால் தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தல்
மனமுடைந்த எம்.ஏ. ஆங்கிலம் படித்த தலித் பெண் தற்கொலை
இறந்து போன பெண்ணின் மீது அவதூறு பரப்பிய பிரபல தமிழ் நாளிதழ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
தஞ்சாவூர், பேராவூரணி தாலுகா, திருச்சிற்றம்பலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆவணம் கிராமத்தில் வசித்து வந்த 26 வயது தலித் பெண்,
கடந்த 03.07.2021 அன்று இரவு சுமார் 7.00 மணியளவில் தூக்கிட்டு இறந்து போயுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் இறந்து போன பெண்ணுக்கு 3 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக தமிழகத்தின் முக்கிய தமிழ் நாளிதழ் ஒன்று புகைப்படத்துடன் மாநில அளவில் செய்தி வெளியிட்டிருந்தது. பத்திரிகைகளின் பொய்ச்செய்தி
அந்த நாளிதழில் இறந்து போன பெண் தன்னுடன் 3 இளைஞர்கள் கள்ளத்தொடர்பில் இருந்ததாக எழுதி வைத்துவிட்டு இறந்ததாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்கிற ரீதியிலும் அந்த செய்தி இருந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த செய்தி ஆபாசத்தின் உச்சகட்டமாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஒரு தலித் பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இறந்து போன செய்தியை முறையாக பதிவு செய்யாமல் பொய்யான செய்தியை தமிழகம் முழுவதும் பரப்பியதால் அந்த பெண்ணின் குடும்பத்தினரும் உறவினர்களும் குறிப்பாக அப்பகுதியைச் சேர்ந்த தலித் மக்களும் கடுமையான அவமானத்திற்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் 09.07.2021 அன்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வில் ஈடுபட்டது. களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.
ஆவணம் கிராமத்தில் வசித்து வருகிற 65 வயது பெரியவர் ஆறுமுகம். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூன்று பேரும் நன்கு படித்து வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளனர். இளையமகனுக்கும் பட்டுக்கோட்டை அருகில் உள்ள திட்டக்குடியைச் சேர்ந்த துரை என்பவரின் மகளுக்கும் கடந்த 3 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அந்த பெண்ணின் கணவரான ஆறுமுகத்தின் இளைய மகன் சிங்கப்பூரில் பணி செய்து வருகிறார். இந்த பெண்ணும் தன்னுடைய மாமனார், மாமியரான ஆறுமுகம், அமிர்தம்மாள் ஆகியோருடன் ஆவணம் கிராமத்தில் வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 03.07.2021 அன்று இரவு 7.00 மணியளவில் தான் குடியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் அணிந்திருந்த மேலாடையில் ஒரு ஊக்கில் தற்கொலை குறிப்பு கடிதம் ஒன்று இருந்தது. அதில் தனது மரணத்திற்கு மணிகண்டன் (28), ஆகாஷ் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது.
இந்த மூன்று பேரும் அந்த பெண்ணிற்கு கடுமையான பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் ஆபாசமாக பேசியதாகவும் அந்த பகுதி மக்கள் எமது குழுவினரிடம் கூறினார்கள். அந்த மூன்று இளைஞர்கள் தன்னை சாதி ரீதியாகவும் ஆபாசமாகவும் இழிவாகவும் பேசி வருகிறார்கள் என்று தனது மாமனார், மாமியாரிடம் மட்டுமல்லாமல் தனது கணவரின் அண்ணனிடமும் அண்ணியிடமும் கூறியிருக்கிறார். தன் கணவரின் அண்ணன் சம்பந்தபட்ட இளைஞர்களின் பெற்றோர்களிடம் சென்று உங்கள் மகன்களை ஓழுங்காக இருக்க சொல்லுங்கள். தேவையில்லாமல் எங்கள் வீட்டு பெண்ணிடம் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்வோம் என்று கூறிவிட்டும் வந்துள்ளார். இந்த நிலையில் தான் தலித் பெண் தூக்கிட்டு இறந்து போயுள்ளார்.
இறந்துபோன தலித் பெண் எம்.ஏ. ஆங்கிலம் படித்தவர். ஒரு நிறுவனத்தில் தற்காலிகமாக வேலையும் பார்த்து வந்தவர். தன் கணவரின் பணத்தைக் கொண்டு வீட்டினையும் கட்டி வருபவர். இந்த நிலையில் ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தி சித்திரவதை செய்தது ஒரு கொடுமை என்றால், அந்த பெண்ணிற்கு 3 இளைஞர்களோடு தொடர்பு இருந்தது என்றும் தற்கொலை கடிதம் உள்ளாடையில் இருந்தது என்றும் ஒரு தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களை இப்படி அவதூறு பரப்புவது வன்கொடுமையாகும். எழுதப்படும் வார்த்தைகள் அல்லது பேசப்படும் வார்த்தைகள் அல்லது செய்கைகள் அல்லது கண்கூடான செயல்கள் அல்லது வேறு வகைகளில் பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு எதிராக பகை உணர்வுகள் வெறுப்பு அல்லது தீய எண்ணத்தை வளர்த்தல் அல்லது வளர்க்க முயலுதல் ஆகிய நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் பிரிவு 3(1)(u) கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். ஆகவே சம்பந்தப்பட்ட நாளிதழில் ஆசிரியர் மற்றும் நிருபர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த பகுதியில் சில சாதி வெறிபிடித்த இளைஞர்கள், பல பெண்களை புகைப்படும் எடுப்பது அதை வைத்து மிரட்டுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆகவே இப்பகுதியில் ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தலித் பெண்ணின் தற்கொலைக்கு கரணமான 3 குற்றவாளிகள் மீது 306 இ.த.ச. மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் 3(2)(v) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பரிந்துரைகள்
• தலித் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் மீதும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவு 3(1)(w)(1) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
• மூன்று குற்றவாளிகளுக்கும் பிணை கொடுக்கக்கூடாது.
• இந்த வழக்கினை தமிழக முதலமைச்சர் சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டு ஒரு எஸ்பி அந்தஸ்த்தில் உள்ள தலைமையில் 3 பேர் கொண்ட புலன் விசாரணை குழுவிவை நியமித்து அதேபோன்ற 3 பேர் கொண்ட மூத்த குற்றவழக்கறிஞர் குழுவை நியமித்து புலன் விசாரணையும் நீதி விசாரணையும் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• வேண்டுமென்றே ஒரு தலித் பெண்ணை அவமாமனப்படுத்தும் நோக்கோடு இழிவுபடுத்தி எழுதிய அந்த பிரபல தமிழ் நாளிதழ் மீது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் பிரிவு 3(1)(u) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
• பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது கணவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்.
• தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் இணைந்து இப்பகுதிக்கு நேரடியாக வந்து விசாரணையில் ஈடுபட வேண்டும். இந்த வழக்கின் அவசர நிலையை கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய நீதி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து திறன்பட விசாரணை நடத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(A.கதிர்)
செயல் இயக்குனர், எவிடன்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக