வெள்ளி, 16 ஜூலை, 2021

வாழ் - Tomorrow is Tomorrow! அருவி இயக்குனரின் அடுத்த படம்

Vaazhl the Film Sivakarthikeyan Arun Prabu Purushothaman- Dinamani

கார்த்திக் புகழேந்தி  :  வாழ் - Tomorrow is Tomorrow!
அருவி திரைப்படம் வெளியானபோது, நீண்ட நாட்களாக மனதில் இருந்து அகலாமல் இருந்த சொல் “உச்சம் தொடும் அன்பின் கொடி.”
எதிர்பாரா விதமாக நோய்மையினால் தாக்குண்டு, குடும்பச் சூழலைவிட்டு வெளியேற்றப்படும் அருவி, அவளினும் நோய்மைகளும் கீழ்மைகளும் கொண்ட இந்தச் சமூகத்தை எப்படி எதிர்கொண்டு அன்பால் சாத்துகிறாள் என்பதை அருவியில் பேசியிருந்தார்
இயக்குநர் அருண் பிரபு. “கடைசியாக எப்போ அழுதீங்க?” என்று அருவி கேட்கிற காட்சியில், அதற்கான காரணத்தை விவரிப்பவரின், ‘பணியாரக் கிழவியின் கதை’ இன்றும்கூட நினைவில் வந்துபோகிறது.


இதெல்லாம் ஒருபுறம்.
அருவி இயக்குநரின் அடுத்த திரைப்படமான ‘வாழ்’ பற்றின நல்ல சொற்கள் சில காதில் விழுந்தவண்ணம் இருக்க, நேற்று மாலை முன்னோட்டக் காட்சியாக நண்பர்கள் யாருமின்றி தனியாகச் சென்று பார்த்து வந்தேன். எதிர்பாராததைவிட நல்ல அனுபவம்.
OTT தளங்களின் இக்காலத்து நுகர்வோர் யார்? அவர்களுக்கு என்ன கொடுத்தால், எப்படிக் கொடுத்தால் பிடிக்கும்! என்பதையெல்லாம் தீர்க்கமாகச் சிந்தித்து எழுதப்பட்ட கதைபோலத் தோன்றியது. கூடுதலாக ஒரு நீண்ட முடக்கத்தில் (கோவிட்-19) சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் மனித மனத்துக்கு இப்போதைக்குத் தேவை ஒரு விடுபடல் அனுபவம்.
அதை ரசனையுடன் உள்ளங்கையில் தருவதுபோல ஒரு படம் வாழ்!
முக்கியமாக நான்கு உளவியல் தாகங்களை இந்தத் திரைப்படத்தில் இருந்து நான் நுகர்ந்துகொண்டேன். முதலாவது பத்துவயது சிறுவன் யாத்ராவினுடையது. அடுத்தது அவன் அம்மா (யாத்ராம்மா!). எதிர்பாராத துக்க நிகழ்வில் இவர்களைச் சந்திக்கும் பிரகாஷ் (பிரதீப்)  நான்காவது பொலிவிய நாட்டைச் சேர்ந்த ஈகுவேரா எனும் பெண்ணினுடையது.
‘நாம் சந்திக்கும் மனிதர்கள் நம் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவர்கள்’ என்பது #வாழ் முன்வைக்கும் மிகமுக்கிய கருத்தியல் என்றுதான் நான் முதலில் நம்பினேன். ஆனால், சர்வ சாதாரணமாக, “அதான்ங்க பயமா இருக்கு” என்று அடுத்த காட்சியில் கதைமாந்தன் பிரகாஷ் சொல்லும்போது உண்மையிலுமே சிரித்துவிட்டேன்.
வேலையின் அழுத்தங்களோடும் குடும்பக் குழப்பங்களோடும் காதலிப்பதாகச் சொல்லும் பெண்ணின் அசட்டையான வாதங்களோடும் கடந்துபோகும் பிரகாஷின் நாட்களைத் தூக்கிப் போட்டு பந்தாடப்போகிற ஒரு சந்திப்பு மிகச் சாதாரணமாக ஜட்ஜ் தாத்தாவின் மரண வீட்டில் நிகழ்கிறது.
இணையதளங்களில் இனிவரும் நாட்களில் மிதமிஞ்சிய அளவில் பரவப்போகிற, ஓர் அறிமுகக் காட்சியை அவ்வளவு ஒளி அழகுடன் கதைநாயகிக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள். அவ்வளவு திருத்தமான தமிழ் முகம் அவருக்கு. (ஆனால், சொந்த ஊர் சட்டீஸ்கராம்!) ‘டேய் நீ என் அத்தைப் பையன் தானே! என்னடா என்ன ட்ரை பண்ணப் பாக்குறியா!’ என்று முதல் உரையாடலிலே பிரகாஷைப் பேச்சிழக்க வைத்துவிடுகிறார் டிஜே பாணு.   
இவர்கள் இருவரையும் ஒரே புள்ளியில் இணைக்கிறான் பாணுவின் மகன் யாத்ரா. அவனது அடாத சுட்டித்தனத்தின் காரணமாக எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைக்குப் பிறகு, பிரகாஷின் உதவியை நாடுகிறார் யாத்ராம்மா (பாணு). வம்படியாக இந்த சிக்கலில் சிக்கிக் கொண்டு விழிபிதுங்கி நிற்கும் பிரகாஷை அதிலிருந்து வெளியே கொண்டுவந்து, ஒரு பெரிய வனத்தின் மடியில், அவன் தன்னையே ஒப்புவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திச் செல்கிறாள் ஈகுவேரா!
இவ்வளவு நேர்கோட்டுத் தன்மையிலா படம் இருக்கிறது..? இல்லை.
படத்தை ஒரு கதையாகச் சொன்னால் இப்படியும் சொல்லலாம். இன்னும் சுருக்கமாக, ‘செய்தித்தாளில் வெளிவந்து பெரிதுபடுத்தப்படும் ஓர் விஷயத்திற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உளவியல்’ என்றும் சொல்ல்லாம். ஆனால், இந்தப் படம் ஒரு பயண அனுபவம். பயணத்தின் அனுபத்தைக் கடத்துவது அவ்வளவு எளிமையானதும் கோர்வையானதும் அல்ல! நான் மேகமலைக்குச் சென்றுவந்தேன் என்று ஒரு வரியில் அனுபவத்தை ஒருவருக்குக் கடத்திவிட முடியாதில்லையா?  
"மெஸேஜ் பண்ணா ஏன் பதில் சொல்ல மாட்டேன்ங்கிற?" என்று சீறும் முப்பதாவது நாள் காதலி. வாட்ஸப் உரையாடலில், நான் மொத்தமும் உனக்குத்தான் என்று தன் காதலனுக்கு மெஸேஜ் அனுப்பிவிட்டு, வீட்டில் மாட்டிக்கொண்ட பிறகு, மொத்த குடும்ப உறவுகளும் கிளம்பிவந்து, நடுவீட்டில் அதே மெஸேஜைப் படித்துக்காட்டி பஞ்சாயத்து பேச வைக்கப்படும் தங்கை. திடீரென்று எங்கிருந்தோ கிளம்பி வந்து என் மகனை ஒரு பத்து நிமிஷம் பார்த்துக்க முடியுமா பிரகாஷ் என்று கேட்கும் யாத்ராம்மா!
‘யாத்ராம்மாவ பிரகாஷ் அங்கிள் மர்டர் பண்ணிட்டாரு’ என்று போலீஸிடம் கத்தும் பத்துவயது சிறுவன் யாத்ரா. கள்ள பாஸ்போர்ட் கேஸில் சிக்கி, போலீஸிடம் இருந்து தப்பும்போது, தன்னையும் உடன் அழைத்துக்கொண்டு  ஓடும் ஈகுவேரா என்று கதைமாந்தன் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் அவன் வழக்கமான வாழ்க்கையில் இருந்து அவனை ஒவ்வொரு கண்ணியாக விடுவிக்கிறார்கள். வேறு புதிய சிக்கலுக்குள் சிக்க வைக்கிறார்கள். அல்லது வேடிக்கை பார்க்கிறார்கள்.
எல்லாவற்றிலும் இருந்து மீள்பவன் தன்னையே இயற்கை எனும் பேராற்றலின் மடியில் விழுந்து மீட்டெடுக்கிறான் என்பதுதான் படத்தின் உச்சம். நாளை என்பதின் கவலைகளை இன்றே தூக்கிக்கொண்டு திரியாதே என்பதை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போகும் ஈகுவேராவின் ‘நாளைக்கு.. நாளைக்கு..’ எனும் வசனம் தான் #வாழ் கடத்த விரும்பும் வேதியியல் மாற்றம்!
அளவான தொகையில் இவ்வளவு ததும்பத் ததும்பக் காட்சிகளுடன் கூடிய ஒரு  ட்ராவல் மூவியினைப் படமாக்க முடியுமா என்பதே நல்ல சவால்! எனக்குத் தெரிந்து, தமிழ்சினிமாவின் கேமிராக் கண்கள் இந்த மிகக் குறுகிய காலகட்டத்தில் அதிகதிகம் மனிதர்களின் கைகளில் இருந்து விடுபட்டு வான் நோக்கிப் பறக்கத் துவங்கிவிட்டதாகத் தோன்றுகிறது. ட்ரோன் காட்சிகளைத்தான் சொல்கிறேன். அகண்ட திரையில் தமிழ்நிலத்தை அவ்வளவு உயரத்தில் காண்பது பேரனுபவம். படத்தில் தனுஷ்கோடி மணற்திட்டுக்களை அலைகளுக்கு மத்தியில் காட்சிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள் …ப்பா!
அமெரிக்கன் கல்லூரியில் பழந்தமிழர் மானுடவியல் படிக்கும் பொலிவியப் பெண்ணாக வரும் ஈகுவேரா (திவா தவான் -அமெரிக்க பஞ்சாபி!)  கையில் அருணகிரிநாதரின், கந்தர் அனுபூதியில் இருந்து, செம்மான் மகளைத் திருடும் திருடன்; பெம்மான் முருகன், பிறவான், இறவான்; சும்மா இரு, சொல் அற.. என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே..” என்று கிடாரில் பாட வைக்கும் இடத்திலெல்லாம் ‘மெய்மறந்தேன்’. படம் முடிந்தபிறகு திரையில் ஒவ்வொரு பாடலுக்கும் இசைக்குறிப்பு படிஎடுத்தவர் பெயர் வரைக்கும் குறிப்பிட்டு நன்றி சொல்லி இருப்பது நிர்வாகச் சிறப்பு!
நடிகர்கள், இசை, காட்சியமைப்பு மூன்றும் படத்தின் பலம்! நல்ல உழைப்பின் திருப்தியை அனுபவிக்க வாய்ப்பது அவ்வளவு எளிதல்ல. பிறகு, பயணத் திரைப்படங்களின் எடிட்டிங் அவ்வளவு சாதாரணம் அல்ல. மனம்போக்கில் எடுத்துத் தள்ளப்படும் அழகழகான காட்சிகளில் மனதைத் தொலைக்காமல் அவற்றைக் கோர்வையாக்குவது அத்தனை எளிமையும் அல்ல.
அதிலும் படம். சென்னை- தஞ்சை- நாகை- தனுஷ்கோடி- திருச்செந்தூர்- உவரி- பழங்குடிகளின் வாழ்நிலமாகத் திகழும் பப்புவா நியூகினியா தீவுகள் என்று பஞ்சமில்லாமல் குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பெருநகரியம் (!) என்று பல திணைகளில் பயணப்படுகிறது. எடிட்டர் ரேமண்ட் டெட்ரிக் கிறஸ்டா குழுவினர் கனத்த இதயத்தோடுதான் வேலை செய்திருக்கவேண்டும்.   
இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். இந்த படத்துக்குள் என்ன குட்டிக்கதை வைத்திருக்கிறார் என்று நம்பியே போனேன். ஒரு புறாக் கதை வைத்திருக்கிறார். எளிய விஷயங்களில் இருந்து பின்னகர்த்திச் சென்று, அதில் அடங்கிக் கிடக்கும் அன்பின், வாழ்தலின் நிலைகளைக் காட்சிப்படுத்தும் இவரது கதைசொல்லல் முறையினை நானும் ரசிக்கிறேன். பிறகு, அருவியில் நிகழ்ந்ததுபோலவே தர்க்க வேற்றுமைகளுக்கும் இடம் உண்டு. அவற்றை தமிழ்சினிமாவின் நுகர்வுக் கலாசாரம் மற்றும் அதன் படிநிலை வளர்ச்சியோடு இணைத்து உள்வாங்கிக் கொள்கிறேன்.
தயாரிப்பு சிவகார்த்திகேயன்! அவரது இந்த மூன்றாவது சமூகமுதலீடு அவருக்குப் பொருள் ஈட்டித்தரட்டும் என்று நானும் விரும்புகிறேன். மற்றபடி இன்னும் கொஞ்சநாளில் (வரும் 17ம் தேதி சனிக்கிழமை) #வாழ் திரைப்படம் SonyLiv- OTT தளத்தில் வெளியாகிறது. கண்டு ரசிக்கலாம் நீங்களும்! முன்னோட்டக் காட்சிக்கு அழைப்புவிடுத்து, சக மனிதனுக்கான பண்புடன் நடத்திய படக்குழுவினருக்கு நன்றி!  
-கார்த்திக் புகழேந்தி
14-07-2021

கருத்துகள் இல்லை: