BBC : உத்தரப் பிரதேச மாநிலம் புதிய மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் நலச் சட்டம் 2021 குறித்து, பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் அரசு சலுகை போன்றவற்றை ரத்து செய்ய வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தின் சட்ட ஆணையம் ‘உத்தரப் பிரதேச மக்கள் தொகை கட்டுப்பாடு, நிலைப்படுத்தல் மற்றும் நலச் சட்டம் 2021’-ன் முதல் முன்வரைவை வெளியிட்டு இருக்கிறது. இம் மாதம் 19ஆம் தேதிவரை இந்த சட்டம் தொடர்பான கருத்துக்களை சமர்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
“மாநில சட்ட ஆணையம் உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சில திட்டங்களை அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறது. இரண்டு குழந்தைகளை மட்டும் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு அனைத்து அரசு சலுகைகளும் வழங்க பரிந்துரைத்திருக்கிறோம். அவர்களால் அரசின் அனைத்து நலத்திட்ட சலுகைகளையும் பெற முடியும்” என ஏ.என்.ஐ முகமையிடம் கூறியுள்ளார் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் ஆதித்யநாத் மித்தல்.
மேலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்களுக்கு அரசு சலுகைகளை ரத்து செய்யவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார் சட்ட ஆணையத் தலைவர்.
“யாராவது இச்சட்டத்தை பின்பற்றவில்லை எனில் அவர்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியாது. அவர்களின் ரேஷன் அட்டைகள் நான்கு நபர்களுக்கு மட்டுமே தகுதியுடையதாக கருதப்படும். அவர்களால் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. ஒருவேளை அவர்கள் ஏற்கனவே அரசுப் பணியாளர்களாக இருந்தால், அவர்களுக்கு பணி உயர்வுகள் வழங்கப்படாது” எனவும் கூறியுள்ளார் ஆதித்யநாத் மித்தல்.
இந்த திட்டத்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அரசிடம் சமர்பிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அடுத்த 2022ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு தான் இந்த மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரப்படுவதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் கூட உத்தரப் பிரதேச மாநில தேர்தலை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக