உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகள், அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர்.
போலி என்கவுன்டர்கள், லவ் ஜிகாத், கோவிட் பேரிடர் அலட்சியம் என பல விஷயங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். என்ன நடக்கிறது உ.பியில்?
இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி, காவல், வெளியுறவு, வனத்துறை, வருவாய் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள், `அரசியலமைப்புச் சட்டத்தின்வழி நடக்க வலியுறுத்தும் குழு (constituition conduct group)’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.
`அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியே ஆட்சி நடக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி அரசுக்குப் பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளனர்.
விவசாயிகள் போராட்டம், லட்சத்தீவு விவகாரம் போன்றவற்றில் சிசிஜி எழுதிய கடிதங்கள், அதிர்வலைகளை ஏற்படுத்தின.
அந்த வரிசையில், `உ.பி மாநிலத்தில் ஆட்சி முறையின் மொத்த சீர்குலைவு மற்றும் சட்டத்தின்படியான ஆட்சிக்கு எதிராகப் பல செயல்கள் நடக்கின்றன’ என்பதை திறந்த மடலில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.பாலச்சந்திரன்
கையொப்பமிட்ட 236 பேர்
அந்த மடலில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலராக இருந்த மீனா குப்தா, முதல் தகவல் ஆணையராக இருந்த வஜாகத் ஹபிபுல்லா, பா.ஜ.க அரசில் டெல்லி துணைநிலை ஆளுநராக பணிபுரிந்த நஜீப் ஜங், பஞ்சாப் ஆளுநரின் ஆலோசகர் மற்றும் ருமேனியாவின் இந்தியத் தூதராகப் பணிபுரிந்த ஜூலியோ ரிபைரோ, முன்னாள் வெளியுறவுத்துறை செயலராக இருந்த ஷ்யாம் சரண், வெளிநாடுகளில் தூதராகப் பணியாற்றிய சுஷில் துபே, மகாராஷ்டிர மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இருந்த வி.பி.ராஜா, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ராம்தாஸ், மேற்கு வங்க மாநில அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஜி.பாலச்சந்திரன் உள்பட 236 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
இவர்களில் 78 பேர் மட்டுமே சி.சி.ஜியை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்கள், மேலை நாட்டுக் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கையொப்பமிட்டுள்ளனர்.
“உ.பி மாநிலத்தைப் பற்றி தற்போது திறந்த மடல் எழுத வேண்டிய அவசியம் என்ன?” என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.பாலச்சந்திரனிடம் பிபிசி தமிழுக்காகப் பேசினோம்.
“ இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. 80 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்புகின்ற மாநிலம் அது.
மிக அதிகப்படியான மக்கள் தொகை உள்ள மாநிலமாக இருந்தாலும் படிப்பறிவின்மை போன்ற சில சமுதாய சிக்கல்களும் அங்கு காணப்படுகின்றன.
இங்கு சிறுபான்மைச் சமூகமான இஸ்லாமியர்கள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கின்றனர். உ.பி மாநிலத்தில் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு, `இந்துத்துவ’ என்ற மத அடிப்படையில் சில செயல்கள் நடப்பதும் அவை சிறுபான்மை மதத்தவருக்கு விரோதமாக இருப்பதும் கண்கூடாகக் காணப்பட்டது.
மக்களுக்காக எழுதப்பட்ட மடல்
இதுதவிர, `போலீஸ் என்கவுன்ட்டர்’ என்ற பெயரில் நடத்தப்படுகின்ற அரசு வன்முறைகள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பின்தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கு எதிராகக் காணப்பட்டது.
இந்த என்கவுன்டர்கள் காவல்துறையினரைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் அல்ல.
இதுதவிர `லவ் ஜிகாத்’ என்ற பெயரில் அரசு கொண்டு வந்த சட்டமாகட்டும். அதனைச் செயல்படுத்தும் முறைகள் ஆகட்டும் எல்லாமே சிறுபான்மையினருக்கு எதிரான செயல்களாக உணரப்பட்டது.
பொதுவாக, அரசை எதிர்த்து எந்தவொரு கருத்தைக் கூறினாலும் அதை தேசவிரோதக் கருத்தாகச் சித்தரிப்பதுவும், அத்தகையை கருத்துகளைக் கூறுவோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற மிகக் கடுமையான சட்டங்களைப் பிரயோகிப்பதுவும் காணப்பட்டது.
இவை அனைத்தும் ஜனநாயகத்துக்கு எதிரானவை. அதையும் தவிர, கோவிட் தொற்றுக்குத் தீர்வு காண்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகளைப் பற்றியும், அவை எந்தளவில் பின்னடைவை சந்தித்துள்ளன என்பதைப் பற்றியும் கூற முற்பட்டவர்களின் மீதும் குற்ற வழக்குகள் பாய்ந்துள்ளன என்பது மிகவும் துரதிஷ்டவசமானது.
இவை அனைத்தையும் கண்ட பிறகுதான் இப்படியொரு திறந்த மடல் எழுத வேண்டிய தேவை உள்ளது என்று உணர்ந்தோம். இந்த திறந்த மடல் மக்களுக்காக எழுதப்பட்டது. உ.பி.யில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது” என்கிறார்.
உ.பி அரசை விமர்சித்து சிசிஜியின் திறந்த மடல்
“உ.பி அரசு எந்தவகையில் சட்டவிரோதமாகச் செயல்படுவதாக உணர்கிறீர்கள்?” என்றோம். “ குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அமைதியான வழியில் மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது என்பது நாடு முழுவதும் நடைபெற்றது.
அதேபோல், உ.பியிலும் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை உ.பி அரசு எவ்வாறு கையாண்டது? அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த மாணவர்களைக் காவலர்கள் தாக்கிய சம்பவம் நடந்தது.
அவர்கள் மீது பயங்கரவாதிகளை தாக்குவதற்குப் பயன்படும் ஸ்டென் கிரானேடை பயன்படுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து 10,990 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் மரணமடைந்ததாக தகவல் வெளியானது.
கலவரத்தைத் தூண்டி, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாகவும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் 705 பேர் மீது வழக்குகள் பதிவானது.
13,000-க்கும் அதிகமான சமூக வலைதளப் பதிவுகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, 63 எஃப்.ஐ.ஆரும் 103 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
41 சிறார்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
பொதுச் சொத்துகளை நாசப்படுத்தியதாக 500 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இதற்காக நஷ்ட ஈடு தர வேண்டும் என 57 நபர்கள் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது.
வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில். இதன் முடிவு வருவதற்கு முன்னரே முன்னாள் டி.ஜி.பி உள்பட பலரின் புகைப்படங்களை பொது நோட்டீஸாக வெளியிட்டு அவர்கள் மீது பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கண்டித்த உ.பி உயர் நீதிமன்றம், `இது ஜனநாயகத்துக்கு விரோதமானது’ எனப் பதிவு செய்தது.
ஜனநாயகரீதியாக போராடுகிறவர்கள் மேல் இத்தகைய தாக்குல்களை நடத்துவது என்பது அரசின் சகிப்புத்தன்மையின்மையைக் காட்டுவதாகவே பார்க்கிறோம்.
எனவே, திறந்த மடலில் அதைக் குறிப்பிட்டோம். மிகக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், உத்தரபிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும், அரசு நிர்வாகத்தின் அனுமதியுடன் எரிக்கப்பட்ட வந்த தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரித்து செய்தி கொடுப்பதற்காகச் சென்ற சித்திக் கப்பான் என்ற பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்.
அவர் 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார். முதலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது உ.பி அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்பின், இதைப் பற்றி செய்தி எடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தனர்”.
“போலி என்கவுன்டர்கள் நடந்துள்ளதாகச் சொல்கிறீர்கள். அதைப் பற்றி விளக்க முடியுமா?” என்றோம்.
“ முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு 2017 முதல் 2020 வரையில் 124 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதாவது, 6,476 மோதல்களில் 124 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாம் கொடும் குற்றவாளிகள் எனக் கூறப்பட்டுள்ளது.
இவர்களைச் சுட்டுக்கொல்வது மட்டுமல்லாமல், பலரை முழங்காலுக்குக் கீழே சுடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் பல பேர் ஆயுள் முழுக்க மாற்றுத் திறனாளிகளாக வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த அரசு பதவியேற்றதற்குப் பின்னால் ஒவ்வொரு நாளும் ஐந்து மணிநேரத்துக்கு ஒருமுறை ஒரு என்கவுன்ட்டர் நடந்துள்ளது என்பதை அரசு கொடுக்கும் தகவல்களில் இருந்தே அறிய முடிகிறது.
இதுதவிர, 2019 ஜனவரியில் உ.பி மாநிலத்தின் தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், என்கவுன்டர்கள் போன்ற சட்டவிரோத மரணங்களை எல்லாம் அரசின் சாதனைகளாகக் குறிப்பிட்டிருந்தார்.
இவர்கள் யாரையெல்லாம் சுட்டுக் கொன்றுள்ளார்களோ, அவர்கள் எல்லாம் சிறு குற்றங்கள் புரிந்தவர்களாகவோ, அல்லது எந்தக் குற்றங்களும் செய்யாதவர்களாகவோ இருந்துள்ளனர்.
மிகப் பயங்கரமான குற்றவாளிகள், கைது செய்யப்படுவதை எதிர்த்து, காவலர்களுடன் சண்டையிட்டு, அதன் விளைவாய் காவலர்கள் உயிருக்கு ஆபத்து வரும் சூழ்நிலையில், தற்காப்புக்காக மட்டுமே, தங்களைத் தாக்குகிறவர்கள் மீது துப்பாக்கியை பிரயோகிக்க வேண்டும் என்பது விதி.
ஆனால், சிறு குற்றவாளிகளை நிரபராதிகளையோ `என்கவுன்டர்’ என்ற பெயரில் கொல்லுவதோ நிரந்தர காயம் ஏற்படுத்துவதோ எப்படிச் சரியாக இருக்க முடியும்.
அதிலும், 2020 ஆகஸ்ட் வரையில் இதுபோன்ற என்கவுன்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் அனேகர், சிறுபான்மையினராக உள்ளனர் என்பது தெரியவருகிறது.
இது தற்செயலானதா.. திட்டமிடப்பட்டதா என்ற கேள்வி எழத்தான் செய்யும். இவை தவிர, பசு தடுப்புக் குழு போன்ற சில குழுக்களை `காவலர் நண்பர்’ என்ற பெயரில் உ.பி அரசே ஆதரிப்பதையும் கவலைக்குரிய விஷயமாக உணர்ந்தோம்” என்கிறார்.
லவ் ஜிகாத் பின்னணி என்ன?
“சரி.. லவ் ஜிகாத் விவகாரத்தில் என்ன நடந்தது?” என்றோம். “ 2020 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று உ.பி அமைச்சரவை ஓர் அவசரச் சட்டத்தை (Uttar Pradesh Prohibition of Unlawful Religious Conversion) அமல்படுத்தியது. அதன்பிறகு 2021 பிப்ரவரி 25 அன்று முறையாக வாக்களிக்காமல் `குரல் வாக்கெடுப்பு’ மூலம் இது சட்டமாக்கப்பட்டது.
இதற்கென சிறப்பு நுண்ணறிவுப் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவால், பிற மதத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொள்ள ஊக்குவிக்க வெளிநாடுகளில் இருந்து நிதி வருவது குறித்தோ அல்லது திட்டமிட்ட சதிச் செயலாக இந்தக் காதல்கள் நடத்தப்படுகின்றன என்பது குறித்தோ எந்தவித ஆதாரத்தையும் கண்டறிய முடியவில்லை.
2021 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலின்படி பார்த்தால், லவ் ஜிகாத் என்பது எந்தச் சட்டத்தின்படியும் விளக்கமாகக் கூறப்படாத ஒன்று என்பது தெளிவாகிறது.
அதாவது, லவ் ஜிகாத் என்பது உ.பி அரசு கற்பித்துக் கொண்ட ஒரு வார்த்தைப் பிரயோகம் என்பது தெரியவருகிறது.
கட்டாய மதமாற்றத்தை எதிர்த்து இந்தச் சட்டம் இருப்பதால், அதன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.
ஆனால், உண்மையாகப் பார்த்தால் முஸ்லிம் ஆண்கள், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தால், திருமணம் செய்து கொண்டால் அவர்கள் மீது இந்தச் சட்டம் பாய்ந்திருக்கிறது.
இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளாகக் கைதானவர்களில் பெரும்பாலோனார் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இந்த அரசு பதவிக்கு வந்ததில் இருந்தே முஸ்லிம்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டதாக உள்ளது என்பது பல்வேறு செயல்களின் மூலம் திரும்பத் திரும்ப நிரூபணமாகியுள்ளது.
அண்மையில் பாரபங்கி என்ற இடத்தில் ஒரு மசூதி உள்ளடங்கியதாக உள்ள ஒரு கட்டடத்தை இடிப்பதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
அதையும் மீறி அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டது. இவைகளை எல்லாம் பார்க்கும்போது சட்டத்தின் வழி இவர்கள் நடப்பதாகத் தெரியவில்லை.
சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக தங்கள் செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது தெரியவருகிறது” என்கிறார்.
“உ.பியில் தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?” என்றோம். “ 1980 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது குற்றம் இழைப்பதற்கு முன்னர், குற்றம் இழைக்கும் மனப்பான்மை உள்ளவர்களைப் கைது செய்வதற்கும் அவர்களை ஓராண்டு சிறையில் வைப்பதற்கும் வழிவகை செய்கிறது.
யாரெல்லாம் இந்த நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக இருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் வைத்திருக்க முடியும்.
ஆனால், உ.பியில் இந்தச் சட்டம் முஸ்லிம்கள், பட்டியலினத்தவர்கள், மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள்மீது, சட்ட விரோத முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளின்படி பார்த்தால், உ.பியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 2020 ஆம் ஆண்டு 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 76 பேர் பசு வதைக்காகக் கைது செய்யப்பட்டனர். 13 பேர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்காக கைது செய்யப்பட்டனர். 37 பேர் கடுமையான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இவை தேசவிரோதமானவையா என்பதைப் பார்க்க வேண்டும். தவிர, பசு வதைக்காக கைது, குடியுரிமை சட்டத்துக்காக கைது போன்றவற்றின் மூலம் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது தெரியவருகிறது.
2017 ஆம் ஆண்டில் உ.பி மாநில டி.ஜி.பி, `பசு வதை செய்பவர்களையோ அல்லது பசுக்களை வதைப்பதற்காகப் பயணப்படுகிறவர்களையோ என்.எஸ்.ஏ மற்றும் குண்டாஸ் சட்டத்தின்கீழ் கைது செய்யுங்கள்’ என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது தெரிகிறது” என்கிறார்.
கங்கையில் மிதந்த பிணங்கள்
“சி.சி.ஜி எழுதியுள்ள மடலில் கொரோனாவை எதிர்த்து உ.பி அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை சாடியுள்ளது சரிதானா?” என்றோம். “ அப்படியில்லை. கொரோனாவை எதிர்த்து செயலாற்றுவது என்பது அரசின் கடமை.
உ.பியில் நிலைமை எப்படியிருந்தது எனப் பாருங்கள். `கடவுளின் இரக்கம் இருந்தால் மட்டும்தான் உ.பியில் மருத்துவ வசதிகள் கிடைக்கும் போலத் தெரிகிறது’ என அலகாபாத் நீதிமன்றம் கசந்து போய்த் தெரிவித்தது. கொரோனா தொடர்பாக முதலமைச்சரைச் சந்தித்து கருத்துக் கூற முயன்ற மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள தனோலி என்ற ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நபராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அங்கு பல சிற்றூர்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன அல்லது போதிய பணியாளர்கள் இல்லை என்ற விவரம் தெரியவந்துள்ளது.
கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகளவில் இருந்திருக்க வேண்டும். அங்கு நிலைமை அவ்வாறு இல்லை.
ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் இறப்பது சாதாரணமான ஒன்றாக இருந்துள்ளது. இப்படியெல்லாம் தகவல் வரும்போது, முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும்? இந்தக் கூற்றில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பதை ஆராய்ந்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல், `இப்படித் தவறான தகவல்களைப் பரப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என முதல்வர் கூறினார்.
`ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது’ என எந்த மருத்துவ நிலைய அதிகாரிகள் கூறினார்களோ, அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கோவிட் பரிசோதனை செய்வதற்கே மக்கள் பெரும் துயரங்களை சந்தித்தனர். இந்த நிலையில், பல நூற்றுக்கணக்கான பிணங்கள் கங்கையில் மிதந்து செல்வதை செய்திகள் மூலம் அறிய முடிந்தது.
கங்கையில் இறந்தவர்களின் பிணங்களைப் போடுவது மத வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் ஒரேநேரத்தில் இவ்வளவு பிணங்கள் வருவதற்கான காரணங்கள் என்ன என்பதை அரசு ஆராய்ந்திருக்க வேண்டும். அவ்வாறு உ.பி அரசு செய்ததாகத் தெரியவில்லை.
6 யோசனைகள்
“ இவற்றை நிவர்த்தி செய்வதற்கு சி.சி.ஜி முன்வைக்கும் ஆலோசனைகள் என்ன?” என்றோம். “ முதலாவது, உ.பியில் அமைதியான முறையில் போராடுகிறவர்களை எந்தக் காரணமும் இல்லாமல் கைது செய்வது, சித்ரவதை செய்வது போன்றவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இரண்டாவது, சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மீது சட்டவிரோதமாக நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஏறத்தாழ 6,000 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளதை பெரும் சாதனைகளாக அம்மாநில அதிகாரிகளே கூறுகின்றனர்.
கை தேர்ந்த, எதற்கும் அஞ்சாத குற்றவாளிகளுடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே காவல்துறை தன்னுடைய பலத்தைப் பிரயோகிக்க வேண்டும்.
மூன்றாவது, `போலீஸின் நண்பர்கள்’ எனச் சொல்லிக் கொள்ளும் இந்து யுவ வாகினி போன்ற குழுக்கள் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும். இத்தகைய குழுக்களுக்கு அரசு ஆதரவளிக்கக் கூடாது.
நான்காவது, யாராவது ஒரு முஸ்லிம், இந்துப் பெண்ணைப் காதலித்தாலோ, திருமணம் செய்தாலோ கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
கட்டாய மதமாற்றம் இருந்தால் நிச்சயமாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் ஒருவர் காதலிக்கிறார், திருமணம் செய்து கொள்கிறார் என்பதற்காகக் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
ஐந்தாவதாக, தேசிய பாதுகாப்புச் சட்டம் வரையறுத்துள்ள அதிகாரத்தின்படி, யார் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும். சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், அரசுக்கு எதிர்ப்பு உணர்வைக் காட்டுகிறவர்கள் போன்றவர்கள் மீது பிரயோகிக்கக்கூடாது.
அவ்வாறு பிரயோகிப்பது சட்டவிரோதமானது. அரசே அந்த சட்டவிரோதச் செயலைச் செய்யக் கூடாது என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
ஆறாவது, கோவிட் பேரிடர் என்பது உலகம் முழுவதும் உள்ள பிரச்னை. அரசுக்கும் நிச்சயமாக பிரச்னைகள் உள்ளன. மிகுந்த சிரமத்துக்கிடையேதான் இதனை தீர்ப்பதற்கு அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிவோம்.
இத்தகைய நோயைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எங்களின் ஆதரவைத் தெரிவிக்கிறோம்.
அதேசமயம், மருத்துவ வசதிகள் எந்த நிலைமையில் உள்ளது என்ற உண்மையைக் கூறினால்கூட வழக்கு போடும் நிலைமை மாற வேண்டும். தங்களிடம் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத குறைகளைப் போக்க வேண்டும்.
பல மாநில அரசுகள் இந்திய அரசிடமும் வெளிநாடுகளிலும் உயிர்காக்கும் ஆக்சிஜனை வாங்கின. தன்னிடம் இருக்கும் இயலாமையை மறைப்பது என்பது கோவிட் தொற்றை அதிகப்படுத்தவே செய்யும். திறந்த மனதுடன் கோவிட் தொற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளில் அரசு இறங்க வேண்டும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக