மின்னம்பலம் : ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளதால் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினோம்; பயன்படுத்தி வருகிறோம்; இனியும் பயன்படுத்துவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஒன்றிய அரசு, தமிழ்நாடு என்கிற வார்த்தை பயன்பாடு அரசு அறிவிப்புகளிலும், அறிக்கைகளிலும், ஊடகங்களிலும் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சொல்லாடல் விவாதப்பொருளாகவும் பேசப்பட்டது. இந்த வார்த்தை பயன்பாட்டிற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.
தமிழ்நாட்டில் மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ என்று அழைத்தால், நாங்கள் ’பாரத பேரரசு’ என்று அழைப்போம் என பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16ஆவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளாக, ஆளுநர் உரை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று (ஜூன் 23) நடைபெற்றது.
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், 'மத்திய அரசை, ஒன்றிய அரசு எனக் கூறுவது ஏன்?' என முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ”ஒன்றிய அரசு எனக் கூறுவதை குற்றமாக கருத வேண்டாம். நமது அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட்டதை தான் நாங்கள் சொல்கிறோம். கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலேயே ஒன்றிய அரசு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரியிலேயே (INDIA SHALL BE A UNION OF STATE )இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய முதல்வர், இந்த சொல்லை கேட்டு யாரும் மிரள வேண்டாம்” என்றார்.
”அண்ணா, கருணாநிதி மத்திய அரசு என்ற சொல்லைத்தான் பயன்படுத்தி வந்ததாகவும், அவர்கள் கூறாததை நாங்கள் கூறுவதாகவும் விமர்சிக்கின்றனர். 1957ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுகவின் முதல் தேர்தல் அறிக்கையிலேயே ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1963ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா இதுபற்றி பேசியிருக்கிறார்” என்று கூறிய முதல்வர், ”ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளதால் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினோம், பயன்படுத்தி வருகிறோம்; இனியும் பயன்படுத்துவோம்” என்று பதிலளித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், ”இந்தியாவில் இருந்து பிரிந்ததுதான் மாநிலங்கள்…..இந்தியாவுக்குதான் சுதந்திரம் கொடுத்தார்கள். நிர்வாக வசதிக்காக நாம் பிரிச்சுகிட்டோம்.” என கூறினார்.
”இதை டிபெட் ஆக்க வேண்டாம். அடுத்ததற்கு வாங்கள்.. இதுகுறித்து இன்னொரு முறை டிபெட் வைத்துக் கொள்ளலாம்” என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
தொடர்ந்து, இதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ”இந்தியாவில் இருந்து மாநிலங்கள் பிரியவில்லை, எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்து உருவானதுதான் இந்தியா என்பதை மாநில உறுப்பினர் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு கூட்டாட்சி.. அவ்வளவுதான்..அந்த அடிப்படையில்தான் தலைவர் ஒன்றிய அரசு என்று கூறி வருகிறார்.” என்று விளக்கமளித்தார். -வினிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக