Chinniah Kasi : வாகன சோதனையில் முருகேசனை அடித்து கொலை செய்த போலீசார்...!
தந்தையை இழந்த மூன்று குழந்தைகள்..!!
காட்டுமிராண்டிகளாக மாறிய காக்கிகள்..!!!
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பாப்பநாய்க்கன்பட்டியில் ஏத்தாப்பூர் காவல் நிலைய போலீசாரின் தற்காலிக சோதனைசாவடி உள்ளது.
நேற்று 22.6.21 மாலையில் SSIபெரியசாமி தலைமையிலான போலீசார் பணியில் இருந்தபோது இடையப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, அவ்வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த சம்பவத்தில் SSIபெரியசாமிக்கும் முருகேசனுக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
அதிகார திமிரில் SSIபெரியசாமி தான் வைத்திருந்த லத்தியில் காட்டுமிராண்டித்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இத்தாக்குதலில் நிலைகுலைந்த முருகேசன் கதறிஅழுது கொண்டே சாலையில் விழுந்தார். மருத்துவ முதலுதவி கிடைக்காததால் சில நிமிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் முருகன், திவாகர், பாலாஜி ஆகியோர் வேடிக்கை பார்த்து கொண்டும், வீடியோ எடுத்து கொண்டும், தாக்குதலுக்கு ஊக்கமளித்து ஆபாசமாக பேசிக்கொண்டும் இருந்துள்ளனர்.
இதுசம்மந்தமான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவரவே இப் படுகொலை சம்பந்தமாக கொலைக் குற்றவாளிகளான, சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி, காவலர் முருகன், மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் திவாகர், பாலாஜி ஆகியோர் மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
இன்று நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர், காவல்துறை சரக துணைத்தலைவர் ஆகியோர் சம்மந்தப்பட்ட காவலர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்தும், மேலும் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க முக்கிய இடங்களில் பாதுகாப்பை உறுதிசெய்தும் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய தூத்துக்குடி காவலர்களின் கொடூரத்தால் பெஃனீக்ஸ், ஜெயராஜ் படுகொலையின் ஓராண்டு நினைவு நாளிலேயே சேலத்தில் இப்படியொரு கொடூரம் காவல்துறையால் நடந்துள்ளது என்பதை பார்க்கும்போது காவல்துறையில் மனிததன்மையற்ற, கொடூர எண்ணம் கொண்ட, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் உள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
இதுபோன்ற சம்பவம் எக்காரணத்தை கொண்டும் தொடரக்கூடாது.
இக்கொலைபாதக செயலில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனை அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும். அதற்கான நடவடிக்கையை பாரபட்சமின்றி தமிழக அரசும், தமிழ்நாடு காவல்துறையும் முன்னெடுக்க வேண்டும்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த முருகேசனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தந்தையை இழந்த இவர்களின் எதிர்காலத்திற்கு உரிய நிவாரணம் தேவை. கணவரை இழந்த முருகேசனின் மனைவிக்கு அரசுவேலை தேவை. இதில் உடனடியாக தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும்.
இதற்காக அனைவரும் குரல் எழுப்புவோம்.
~Pravinkumar முகநூல் பதிவு...
#TNPolice #salemdistrictpolice
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக