Raja Rajendran Tamilnadu : நேற்றிரவு க்ளப்ஹவுசில், புலம்பெயர்ந்த அதிதீவிர புலி ஆதரவாளர்கள் சிலர் இணைந்து கதைத்துக் கொண்டிருந்தனர். தலைப்பு என்ன தெரியுமா ?
திராவிடர் பின்னேற்றக் கழகம் !
எரிமலை வெடிப்பாக குழம்பை உமிழ்வது போலத் துவங்கிய அந்தத் தர்க்கம், முடியும் போது சோர்வாகவும், குழம்பாறின் மீது பட்ட கடல் நீராகவும் புகைத்துப் போனது !
ஏன் ??
அரக்கர்கள் ஞாயிறன்று நடத்திய ஸ்பேஸ் அரங்கும், நேற்று நடத்திய க்ளப்ஹவுஸ் கூட்டமும், புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களை பெரிதும் உசுப்பி விட்டிருக்கிறதாம் !
தூங்கிக் கிடந்த எங்களைச் சுரண்டி விட்டுவிட்ட அரக்கர்களை இனி தூங்க விட மாட்டோம் எனச் சபதம் செய்தார்கள் !
அரக்கர்கள் என்ற சொல்லுக்கு எதிராக கரிகாலர்கள் அல்லது கரிகாலன் என்கிற அடையாளத்தோடு களம் காணப்போவதாக உறுதி கூறினர் !
இருந்தாலும் இன்னும் மூன்று நாட்களுக்குள் அரக்கர்கள், புலிகளையும், எங்கள் தலைவர் பிரபாகரனையும் பயங்கரவாதிகள் என்று பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டால், இந்த ஓப்பரேசன் கரிகாலனை
மறுபரிசீலனை செய்வோம் என்றும் உத்திரவாதமளித்திருக்கிறார்கள் !
இல்லையெனில்,
எங்கள் தேசியத்தலைவரைச் சீண்டியதால், உங்கள் தலைவர் கலைஞர் இனி எங்களிடம் தொடர்ந்து வதைபடப் போகிறார். விளைவுகளுக்குத் தயாராகிக் கொள்ளுங்கள் !
இதில் மாடரேட்டராக இருந்த யோகோ அருணகிரி எனும் நபர், கலைஞரை பகிரங்கமாக, கொலைகாரர், வித்அவுட் டிக்கெட், சாதிக் கலவரங்களைத் தூண்டியவர்,
ஆசியாவின் பெரும் பணக்காரர், அதனால்தான் திமுக இம்முறை எந்த நன்கொடைகளும் பெறாமல், பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடி பணம் கொடுத்து ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. எனவே இதைக் கலைக்க நாங்க கலைஞர் பிம்பத்தை உடைக்கத்தான் செய்வோம் ;
அவதூறுகளுக்காக கிஷோரை, சாட்டை துரைமுருகனை கைது செய்த திமுக அரசு, எங்கள் தேசியத்தலைவரை பயங்கரவாதி என்று அவதூறு சொன்ன டான் அசோக்கை ஏன் கைது செய்யவில்லை ? எண்டு வைத்தால் திமுக அரசு அரக்கர்களுக்கு ஆதரவளிக்கிறதுதானே ? இனி சும்மா இருக்க முடியாது !
இவர்கள் மன்னராட்சியைத் தக்கவைக்கவே நம்மைச் சீண்டுவதை கையிலெடுத்திருக்கிறார்கள். இன்று ஸ்டாலின், நாளை உதயநிதி, பின் இன்பநிதி என்று எடுத்துச் செல்ல, நம் தேசியத் தலைவரை இழிவு செய்கிறார்கள். கருணாநிதி எங்களுக்கு இழைத்த துரோகங்கள் கருப்பு பக்கம். அது யாருக்கும் தெரியாது. அதைச் சொல்ல வைக்கவே கிறுக்கர் கூட்டம் முயல்கிறது
என மிக ஆவேசமாகப் பேசினார் !
மாறாக, சிவ ரதன் என்கிற மாடரேட்டர் லண்டன் வாழ் புலம்பெயர் புலி ஆதரவாளர். துவக்கத்தில் ஆவேசமாகவும், பின் தணிந்தும், பல சமயங்களில் மிகப் பொறுப்பாகவும், நியாயமாகவும் கூடப் பேசினார். அவர் மட்டுமே கலைஞர் என்கிற பதத்தைப் பயன்படுத்தினார். அதிலேயே அவருடையப் பண்பு விளங்கியது !
இவர்தான் நிறைய பேருக்கு பேசவும் வாய்ப்பளித்து திறம்பட அந்த உரையாடலை கட்டியிழுத்துச் சென்றார் !
சரவணன் எனும் ஓர் இந்தியத்தமிழர், அரக்கர்களுக்கு திமுக தலைமையின் பரிபூரண ஆசியுண்டு என்று ஆர் எஸ் பாரதியின் புதல்வர் டாக்டர் சாய் லட்சுமிகாந்தை இழுத்துச் சான்றாக காட்டினார் !
செம்பியன் என்கிற இந்தியத் தமிழர், திமுகவை வுட்றாதீங்கப்போ என எரியும் நெருப்பில் பஞ்சு மூட்டைகளை லோடு லோடாக கொட்டிச் சென்றார். வெள்ளைக் கொடி ஏந்தி செல்லச் சொன்னது கனிமொழி. ஆனால் அவர்களுக்கு இறுதியில் நிகழ்ந்தது என்ன ? கனிமொழி இதுபற்றி வாய் திறப்பாரா ?
ஒருவேளை நீங்கள் திமுகவை மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்கப் போவதில்லை. குழுக்களைத் திரட்டி அவர்களின் துரோகங்களை பட்டியலிடப் போகிறோம் !
கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விடுமோ என இவர்களிருவரும் பதட்டப்பட்டதற்கு காரணமிருந்தது !
அவ்வளவு ஆக்ரோஷத்துடன் இருந்த அந்த அவையில் மேலும் சில இந்தியத் தமிழர்கள், அவர்களுடைய திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை துணிந்து விமர்சித்தனர். அது எனக்கு வியப்பையளித்தது !
ஜோயல் என்பவர் தெளிவானத் தமிழக வரலாற்றை எடுத்துரைத்தார். திமுகவை எதிர்த்துக் களமாடி நீங்கள் என்ன அதிமுகவுக்கா உதவப் போகிறீர்கள் ? திமுக தலைமையாவது இதுவரை புலிகளை வெளிப்படையாக குறை கூறியதில்லை. மாறாக அதிமுகவின் ஜெயலலிதாவோ பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்றவர். புலிகள் தடையை சாகும் வரை ஆதரித்தவர். உங்கள் நிலைப்பாட்டில் எவ்வளவு குழப்பம் என்று பார்த்தீர்களா ??
சில ஆயிரம் பேரை எதிர்க்க, இரண்டு கோடி மக்கள் வாக்களித்த திமுகவை அசிங்கப்படுத்த நீங்கள் முனைந்தால், யாருக்கு வெற்றி கிடைக்கும் ?
இவருக்கு முன் வேறு சில இந்தியத் தமிழர்களும் இதில் கலந்துக்கொண்டு பேசினார்கள்.
அவர்களும், திமுகவை ஒட்டுமொத்த எதிரியாகப் பாவித்து எதிர்வினை ஆற்றாதீர்கள். இன்றையச் சூழலில் உங்களுக்கு அது மேலும் பின்னடவைத் தரும் என்று தகுந்த காரணங்களுடன் எடுத்துக் காட்டினார்கள் !
எதிர்பாராத விதமாக ஆறு பேருக்கும் மேல் இத்தகைய கருத்துக்களைச் சொன்னவுடன், சிவரதன் மேலும் மென்மையாகிப் போனார் !
ஆனாலும், யோகோ அருணகிரி போன்ற மேலும் சில புலிகளின் ஆதரவாளர்கள், திரும்பத் திரும்ப, கலைஞருக்கு துரோகி பட்டம் கொடுத்து, இழிவு செய்வதிலேயே குறியாக இருந்தார்கள் !
அடுத்து ரகசிய அறைக்குள் எடுக்கப்படும் முடிவில் சிற்சில மாற்றங்கள் இருக்கலாம், ஆனால் ஓப்பரேசன் கொன்ஃபர்ம் என்றும் சொல்லி முடித்திருக்கிறார்கள் !
முடிக்கும் முன் இந்தத் தலைப்புக்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதாக சிவரதன் சொன்னார். இந்தத் தலைப்புக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. தலைப்பு வைத்து நிகழ்ச்சியின் இடையில்தான் என்னை அழைத்தார்கள் என்றார் !
அவ்வளவுதான்.
எனக்கு யோகோ அருணகிரி எனும் நபரின் மிக வன்மமான திமுக காழ்ப்பு தெரியுமென்பதால் அங்கு பேச விருப்பமில்லை. எதிர்பாராதவிதமாக சிவரதன் இப்படி மென்மையாவார் என அவதானிக்காததால் இறுதிவரை அது இயலாமலேயே போய்விட்டது !
இங்கு கேட்கலாம்.
1.) திரு சிவரதன், இனிமேல் கலைஞரின் கருப்பு பக்கங்களை கூற உங்களிடம் புதிதாக என்ன இருக்கிறது ? வனவாசத்தையும், வாட்ஸ்அப்பையும் தாண்டிய தரவுகள் உங்களிடம் இருக்கிறதா என்ன ??
2.) அரக்கர்களுக்கும், திமுகவுக்கும் தொடர்பில்லை, அவர்கள் சிறு கூட்டம் என்று பகடி செய்துவிட்டு, இறுதியில் கருணாநிதியைக் கொச்சைப்படுத்துவோம், திமுகவை அழிப்போம் என உங்களில் பலர் மீண்டும் மீண்டும் சொல்கிறார்களே, ஏதோ நெருடவில்லை ?
3.) சீமானுக்கு ஆதரவாக பேசவந்த ஒரு புலம்பெயர் தமிழரை உடனே மறித்து நிறுத்தினீர்கள். சீமானுக்கும் எங்களுக்கும் எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை என்கிறீர்கள். ஆனால் செய்யப் போவது சீமானிஸத்தைத் தானே ?
4.) தமிழ்நாட்டில் இனிமேலும் புலி ஆதரவு எடுபடும் என்றா நினைக்கிறீர்கள் ? நான் ஒரு முன்னாள் புலி என்று கூறி ஒரு வீட்டை இங்கு இன்று வாடகைக்கு எடுக்க முடியுமா ? சிவராசன் கூட்டத்துக்கு எத்தனை ஊரில் எத்தனை பேர் புகலிடம் கொடுத்தார்கள் என அறிந்தவர்கள்தானே நாம் ?
5.) ஈழத்தில், சரணடைந்த புலிகள் நிலை என்ன ? வாழ்வாதாரங்களைத் தொலைத்த ஈழத்தமிழர்களுக்கு புலம் பெயர் புலிகள் ஆதரவாளர்கள் எப்படி உதவிக் கொண்டிருக்கிறார்கள் ? இன்றளவும் அங்கு இனப்படுகொலைகள் நடப்பதாக லண்டன் நடேசன் சொல்கிறாரே, இதற்கு உங்களின் எதிர்வினை என்ன ?
இதுபற்றியெல்லாம் ஏன் இந்தியத் தமிழர்களுக்கு எந்தச் செய்தியும் தெரிவதில்லை ?
எங்களுக்கு அதுபற்றிச் சொல்ல வேண்டுமா அல்லது திமுகவின் கருப்பு பக்கங்களுக்கு மேலும் மேலும் கருப்புச் சாயம் பூசி கம்பி கட்டும் கதைகள் சொல்ல வேண்டுமா ??
6.) அரக்கர்களிடமிருந்து பல இணைய உ.பிக்களே தள்ளி நிற்கும்போது, நீங்கள் திமுகவை / கலைஞரை மேலும் சிதைப்போம், பழிக்குப்பழி என இறங்கினால் யாருக்கு ஆதரவு அதிகரிக்கும் ?
7.) அன்றும், இன்றும், என்றும் இந்தியத் தமிழர்களின் எந்த ஆதரவுமில்லாமல், தனி ஈழக் கனவு சாத்தியமா ? புலம் பெயர்ந்த தமிழர்களால் இந்தியாவை உதறிவிட்டு விட்டு, அந்த இலக்கை நோக்கி பயணிக்க துளி வாய்ப்பேனும் உள்ளதா ?
8.) புலிகள் மாவீரர்கள், பிரபாகரன் அகசாய சூரன் எல்லாம் சரி. ஆனால் அதில் எங்கள் பங்கு என்று எதுவுமே கிடையாதா ?
கேள்விகள் இன்னமுமுள்ளன. நீங்கள் ஏராளமாய் கற்றும் பெற்ற பின்னும் போதாமைகள் மிச்சமுள்ளன. அதை இன்னும் கதைத்து அறியுங்கள்.
மற்றபடி போருக்கு நாங்கள் என்றுமே தயார். இனி ஒரே ஓர் அவதூறைக் கூட நீங்கள் கலைஞர் மீது என்றும் எப்போதும் வைக்க முடியாது எனச் சூளுரைக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக