சனி, 13 மார்ச், 2021

மம்தாவைத் தாக்கியதில் பா.ஜ.க. சதி: திரிணமூல் கட்சி புகார் மனு!

மம்தாவைத் தாக்கியதில் பா.ஜ.க. சதி: திரிணமூல் கட்சி தரும் பகீர்!

minnambalam :மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 10ஆம் தேதியன்று நந்திகிராம் தொகுதியில் பிரச்சாரத்தின்போது நடந்த அசம்பாவிதத்தில் காயமடைந்தார்; அதற்கு பாஜகவினர் செய்த சதியே காரணம் என குற்றம்சாட்டுகிறது, திரிணமூல் காங்கிரஸ் கட்சி. தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை அக்கட்சியின் எம்.பி.கள் டெல்லியில் நேற்று சந்தித்து ’தாக்குதல்’ குறித்து எட்டு பக்க புகார் மனு அளித்தனர்.

டம்டம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் திரிணமூல் காங்கிரஸ் துணைத்தலைவருமான சுகத்தா ராய், மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரைன் ஆகியோர் உள்பட 6 திரிணமூல் எம்.பி.கள் குழுவினர் அரை மணி நேரம் சுனில் அரோராவிடம் பேசினார்கள். மம்தாவின் மீதான ‘தாக்குதலின்’ பின்னணியில் நந்திகிராமின் பாஜக வேட்பாளரும் முன்னாள் திரிணமூல் அமைச்சருமான சுவேந்து அதிகாரி செயல்பட்டுள்ளார் என்பது திரிணமூல் தரப்பு தந்த புகாரின் மையமான குற்றச்சாட்டு.

கிழக்கு மிதினாப்பூர் மாவட்டத்தின் நந்திகிராமில் சில மர்ம நபர்கள் மம்தாவைப் பிடித்துத் தள்ளிவிட்டார்கள்; அதனால் கீழே விழுந்ததில் அவருக்கு தோள்பட்டை, இடுப்பு, மணிக்கட்டு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது என்பதே மம்தா தரப்பினரின் புகார்.

ஆனால், மம்தாவின் கார் ஒரு இரும்புத் தூண் மீது மோதியதால்தான் சம்பவம் நேரிட்டது என வங்கத் தொலைக்காட்சியில் நேரடி சாட்சிகள் என இரண்டு பேர் கூறியதை ஒளிபரப்பினார்கள். அந்தக் காட்சியை பாஜகவினர் தங்கள் சமூக ஊடகங்களில் பரப்பிவருகின்றனர்.

ஆனால், சித்தரஞ்சன் தாஸ், தேவப்பிரத தாஸ் என்கிற அந்த இரண்டு நபர்களுமே சுவேந்து அதிகாரியின் கூட்டாளிகள் என்று திரிணமூல் கட்சியின் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 10 மாலை 5 மணியிலிருந்து மாவட்ட போலீஸ் அதிகாரியும் உள்ளூர் போலீஸ்காரர்களும் அந்த இடத்திலேயே இல்லாமல்போய்விட்டார்கள்; மாலை 6.15 மணிக்கு ‘தாக்குதல்’ நிகழ்ந்திருக்கிறது என்கிறார்கள் திரிணமூல் கட்சி தலைவர்கள்.

பாஜகவின் சதி இதில் இருக்கிறது என்பதற்கு அவர்கள் முன்வைக்கும் தகவல்கள், கொஞ்சம் பகீர் ரகம்தான்.

“ மம்தாவின் உயிருக்கு அச்சுறுத்தலாக நடத்தப்பட்டுள்ள சம்பவங்களையும் சில செயல்பாடுகளையும் கவனித்துப்பார்த்தால், முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பெரிய சதிப்பின்னல் இதில் இருப்பது சந்தேகமில்லாமல் தெரிகிறது. மார்ச் 8ஆம் தேதியன்று மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் தன் முகநூல் பக்கத்தில் ஒரு கேலிச்சித்திரத்தைப் பதிந்து, நந்திகிராமில் மம்தாவுக்கு அடி விழும் என்று குறிப்பிட்டுள்ளார். அதே சமயத்தில் அப்போதைய டிஜிபி, ஐஜி இருவரையும் மாற்றச்சொல்லி ஏராளமான பாஜகவினர் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்புகின்றனர். மாநில அரசாங்கத்துடன் எந்த ஆலோசனையும் செய்யாமல் அடுத்த நாளே டிஜிபி வீரேந்திராவை அந்தப் பதவியிலிருந்து தேர்தல் ஆணையம் மாற்றியது. இன்னொரு புறம் மார்ச் 9ஆம் தேதியன்று பாஜகவின் மாநில ஐ.டி. அணியின் தலைவர் சௌமித்ர கான் திரிணமூல் அமைச்சர் பிரத்யா பாசுவைக் கோத்துவிட்டு, தன் சமூக ஊடகப் பக்கத்தில், “நாளை மாலை 5 மணிக்கு மேல் உங்களுக்கு ஒரு தகவல் தெரியவரும்.” என்று தகவலிட்டு இருக்கிறார். அடுத்த நாள் நந்திகிராமில் வழக்கத்துக்கு மாறாக ஏதோ நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்துவைத்திருக்கிறார்கள். ” என நீள்கிறது, திரிணமூல் எம்.பி.களின் அந்தப் புகார் மனு .

திலிப் கோஷின் முகநூல் தகவல், டிஜிபியை நீக்கும் தேர்தல் ஆணையத்தின் திடீர் முடிவு, டுவிட்டரில் பாஜக எம்.பி. சௌமித்திரகானின் தகவல்பரிமாற்றம், மம்தா மீதான தாக்குதல், அதை மறைப்பதற்காக சாட்சியத்தை உருவாக்கம் என வரிசையாக சுவேந்து அதிகாரியின் கை இருப்பதாகவும் ஆகையால் இது பற்றி பக்கச்சார்பில்லாத விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் திரிணமூல் கேட்டிருக்கிறது.

அவர்கள் பிரதமர் மோடி கொல்கத்தா மேடையில் சொன்ன ஒரு வாசகத்தையும் இந்த விவகாரத்தில் இணைத்துப் பார்க்கிறார்கள் என்பது எல்லாவற்றையும்விட முக்கியமானது.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அலுவலகத்துக்கு ஸ்கூட்டரில் சென்றுவந்து தன் எதிர்ப்பைக் காட்டினார். வீட்டுக்குத் திரும்புகையில் வண்டியை எடுப்பதில் அவர் தடுமாற்றம் அடைந்தபோது, அருகிருந்த பாதுகாப்புப் படையினர் உதவினார்கள். அதற்குப் பிறகு பிரிகேட் பரேட் மைதானத்தில் பிரச்சாரம் செய்த மோடி, ”நந்திகிராமில் ஸ்கூட்டர் விழுந்துவிட்டால் நாம் என்ன செய்யமுடியும்?” என்று குறிப்பிட்டது, வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த விவகாரத்தில் மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் உள்பட சிலர் உடனடியாக, ’இது மம்தா நாடகம்’ என்கிறபடி கருத்துக்கூறிவிட்டனர். ஆனால் இந்த விவகாரம் மம்தாவுக்கு சாதகமாக மாறிவிடுமோ என யோசித்தது, பாஜக மேலிடம். இது குறித்து மேற்கொண்டு யாரும் பேசவேண்டாம் என அமித் ஷா உத்தரவிட்டுள்ளார் ( என அக்கட்சியின் நிர்வாகிகளே கூறியிருக்கின்றனர்).

குறிப்பாக, மம்தாவுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள அவரின் முன்னாள் அமைச்சரான சுவேந்து நேற்று பல இடங்களுக்குச் சென்றபோதும் எங்கும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. கோயில்கோயிலாகச் சென்று தரிசனம் மட்டும் செய்தார். சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் திரும்பத் திரும்பக் கேட்டும், அவர் சொன்ன ஒரே பதில், ‘ஓம் சாந்தி’!

மாநிலத்தில் அடக்கிவாசித்து விவகாரத்தை பாஜக அமுக்கமுயன்றபோதும் டெல்லியில் திரிணமூல் எம்.பி.கள் அளித்த பேட்டி, ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது. நெருக்கடிக்கு உள்ளான பாஜக தலைமை, வேறு வழியில்லாமல் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் எட்டு பேரை அனுப்பி, தேர்தல் ஆணையரிடம் போட்டி புகாரைக் கொடுக்கவைத்தது.

திரிணமூல் காங்கிரஸ் சொன்னதையே (முழுமையான விசாரணை நடத்தவேண்டும் என) பாஜகவும் கோரிக்கையாக வைத்தது. அத்துடன் நிற்காமல், அவர்கள் இன்னும் இரண்டு கோரிக்கைகள் வைத்தது கவனத்திற்குரியது.

”நந்திகிராம் தொகுதி பதற்றமானது என்பதால் அங்கு சிறப்பு பார்வையாளரை நியமிக்கவேண்டும்; இந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்; அவர்கள் மீது தேர்தல் விதிமீறல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்பது பாஜகவின் கோரிக்கைகள்.

அரசியல் குற்றச்சாட்டுகள் ஒரு பக்கம் இருக்கடும். நாடே பரபரக்கும் இந்த சமயத்தில், உயர்பாதுகாப்பு அரணுக்குள் இருக்கும் ஒரு முதலமைச்சர் மீது தாக்குதல் என்பது அவரளவுக்கான பிரச்னை மட்டும் இல்லை! எளிதில் விட்டுவிட்டு நகரக்கூடிய சாதாரண சம்பவமும் அல்ல!

- இளமுருகு

 

கருத்துகள் இல்லை: