யாழ்ப்பாணக் கோட்டையை இராணுவம் பிடித்தது, மாத்தையாவை சுதுமலையில் வைத்துக் கைது செய்தது, அவருடன் இருந்த புலிகள் இருநூறு பேருக்கும் மேல் சுட்டுக்கொல்லப்பட்டது, யோகியை வெளியேற்றியது போன்ற செய்திகள் அனைத்தையும் புதிதாகப் பிடித்து வரும் சகோதரர்கள் மூலமாகத்தான் அறிந்தோம். பிடித்து வரப்பட்டவர்கள் அடித்து நொருக்கப்பட்டு அவர்களது காயங்கள், வலிகள் ஆறிய பின்னர்தான் இவை போன்ற செய்திகளை நாங்கள் கேட்டு அறியலாம். அவர்களது கவலை, பயம் இவை தீர்ந்த பின்னர்தான் அவர்களும் வாய்திறந்து செய்திகளைச் சொல்வார்கள்.
வழக்கமான காலை உணவுக்குப் பின் ஒருநாள் நாவல் மரத்து சித்திரவதையாளர்கள் உள்ளே வந்து எனது பெயரை உரத்த குரலில் சொல்லி அழைத்தனர். அதே போன்று ஈ.பி.ஆர்.எல்.எப். ன் திருகோணமலை மாவட்ட முக்கிய பொருப்பில் இருந்த சகோதரர் ஒருவரது பெயரையும் அழைத்தனர். அவரது பெயர் சிவா என்று நினைக்கிறேன். இருவரும் வெளியே சென்றோம். நாவல் மரத்தை நோக்கி நடக்கச் சொன்னனர். வேகமாக நட என்று எனது முதுகில் கையை வைத்துத் தள்ளினர். காலில் சங்கிலி விலங்கு இருந்ததால் தடக்கி குப்புற விழுந்தேன். ஈழச்செய்தி
தூசண வார்த்தைகளைச் சொல்லி ஓர் மண்வெட்டி பிடி போன்ற கட்டையால் அடித்தனர். முதுகில் அதே போன்று ஈ.பி.ஆர்.எல்.எப் சகோதரரையும் தள்ளிவிட்டு கீழே விழுந்தபின் அடித்தனர். கையில் விலங்கிடாதபடியால் கைகளை ஊன்றி எழுந்திருந்தேன். மீண்டும் நாவல் மரத்தை நோக்கி மெதுவாக நடந்து இடத்தை அடைந்தேன். அந்தச் சகோதரரும் என்னுடனேயே வந்தார்.
நாவல் மரத்தின் கீழே பல இடங்களில் பிடி இல்லாத பிக்காசுகளை நிரந்தரமாக நிலத்தில் பதித்து வைத்திருந்தனர். அவற்றில் மூன்று பிக்காசுகளுக்கு நடுவில் நிலத்தில் படுக்கும் படி கூறினர். அவர்கள் கூறியபடி படுத்தேன்! வானத்தைப் பார்த்தபடி படுத்த எனது கைகள் இரண்டையும் இழுத்து கைவிலங்கிட்டு வலது கையை ஒரு பிக்காசிலும், இடது கையை ஒரு பிக்காசிலும் பினைத்தனர். காலுக்குக் கீழே இருந்த பிக்காசில் இன்னுமோர் கைவிலங்கை எடுத்து கால்சங்கிலியில் போட்டு இழுத்து மாட்டினர். ஜேசுநாதரைச் சிலுவையில் அறைந்தது போன்று எங்களை நிலத்தில் வைத்து கைகளில் ஆணிகள் அடிக்காமல் விலங்குகளால் பிணைத்து அவரை ஞாபகப்படுத்தினர்.
புலி விலங்குகளில் ஏறக்குறைய பத்துப் பேர்வரை இருந்தனர். இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் கௌதமன். துணைக்கு நின்றவர்கள் மஞ்சு மற்றும் சின்னக் கேடி. இவர்களுடன் திசை மற்றும் மாசிலும் இருந்தனர். ஏனையோர்களது பெயர்கள் தெரியாது.
சுமார் பத்துமணிவரை நானும் அந்தச் சகோதரரும் வானத்தைப் பார்த்துக் கொண்டு கிடந்தோம். பிக்காசில் மாட்டப்பட்டிருந்த கைகளை இழுத்துப் பார்த்தேன். அது அசைவதாகத் தெரியவில்லை. நீண்ட காலமாக அவை நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தன என்பது தெரிந்தது. வந்தனர் வீரர்களாகத் தெரிந்த விலங்குகள்.
கௌதமனும் மஞ்சுவும் கேள்விகளை ஆரம்பித்தனர்.
கேள்வி – உண்மையாகச் சொல்லு ஈ.என்.டி.எல்.எப்.புடன் உனக்கு தொடர்பு இருக்குதானே!
சோல்லு!
பதில் - இல்லை, எனக்கு இப்போது எந்தத் தொடர்பும் கிடையாது.
கேள்வி – நீ பொய் சொல்கிறாய்!
பதில் - நான் சொல்வது உண்மை.
சின்னக் கேடி எனது வயிற்றில் தனது வலது காலால் மிதிக்கிறார். பின்னர் காலைத் தூக்கி வயிற்றில் உதைத்தார்.
கேள்வி – உன்னைப் பிடிக்கேக்க நீ சங்கிலி போட்டிருந்தனி. கொள்ளையடிச்சுத்தானே வாங்கினனீ?
பதில் - இல்லை! எனது முதலாளி வாங்கிக் கொடுத்தார். நீங்கள் அவரிடமே கேளுங்கள். அவர் எங்க வாங்கியது என்றும் சொல்வார்.
இதைக் கேட்டதும் கோபம் வந்தது கௌதமனுக்கு. என்னடா எங்களைப் போய்க் கேக்கச் சொல்றியா என்று கேட்டு ஓர் தடியினால் எனது நெஞ்சில் அடித்தார். அப்போது மஞ்சு வயிற்றில் அடித்தார்.
கேள்வி – கிளிநொச்சியில ஆயுதங்கள் புதைச்சு வைச்சிருக்கு. எங்க புதைச்சு வச்சனீ?
பதில் - எனக்குத் தெரியாது. அப்படி ஆயுதம் எதுவும் புதைக்கப்பட்டதை நான் பார்க்கவும் இல்லை.
கேள்வி - ஈ.பி.ஆர்.எல்.எப். ராஜாவுடன் உனக்கு தொடர்பு இருக்கு. ஏன் தொடர்பு வைத்தாய்?
பதில் - இயக்க ரீதியாக எனக்கு யாருடனும் தொடர்பு கிடையாது. எந்த இயக்கத்தவர்களையும் நான் சந்தித்ததும் கிடையாது.
கேள்வி - ஈ.பி. தோமசை சந்தித்தனிதானே?
பதில் - இல்லை தோமஸ் எனது ஊர்தான். ஆனால் இயக்க ரீதியாக நான் அவருடன் கதைத்தது கிடையாது.
டேய், இவன் எதையும் சொல்றான் இல்லை! கொண்டு வாடா துண்டை என்றார் சின்னக் கேடி!
வெள்ளை நிற துண்டு ஒன்றைக் கொண்டு வந்தனர். அது வேட்டியிலிருந்து கழித்தெடுக்கப்பட்ட துண்டாக இருந்தது. எனது முகத்தில் அந்தத் துணியைப் போட்டார் மஞ்சு. எனது நெஞ்சில் அமர்ந்தார் சின்னக் கேடி. நெஞ்சின் மேல் அமர்ந்த சின்னக் கேடி தனது இரு கைகளாலும் எனது நாடியை மேல் நோக்கிப் பலம் கொண்டு தள்ளினார். அவர் அப்படித் தள்ளிக் கொண்டு இருக்கும் போது கௌதமன் ஒரு பிளாஸ்ரிக் போத்தலிருந்த தண்ணீரை எனது மூக்கினுள் விட்டார். எனக்கு மூச்சுத் தினறியது. மிருகங்களின் கழுத்தை நெரித்தால் ஏற்படும் சத்தம் போன்று எனது தொண்டையிலிருந்து வெளிவந்தது. அப்படிச் சத்தம் வருவதைத் தடுக்கும் விதத்தில் சின்னக் கேடி எனது நாடியை அதிக பலம் கொண்டு மேலும் மேலும் தள்ளினார். எனக்கு புரைக்கேறி மூச்சு நின்றுவிடும் போன்று இருந்தது. கைகால்களை இழுத்தேன், முடியவில்லை, பிக்காசுகள் அவ்வளவு பலத்தையும் தாங்கிக் கொண்டு நின்றன. சின்னக் கேடி மேற்கொண்டு மார்பைத் தனது பின் பக்கத்தால் நெரித்தார்.
கௌதமன் சத்தம் போடுகிறார். டே சொல்லடா, ஆயுதம் எங்கே இருக்கு சொல்லடா! தொடர்ந்து தண்ணீர் எனது மூக்கு வழியாக இருதயம வரை சென்று மூச்சுத் தினறல் ஏற்பட்டது. தெரியும் சொல்கிறேன் என்றும் சொல்ல முடியாத நிலை! கைகள் கட்டப்பட்டுள்ளன, நாடியை மேல் நோக்கித் தள்ளி மூடிப் பிடித்துள்ளனர், மூக்கினுள் தண்ணீரை விடுகின்றனர் எனவே எதனையும் சொல்லமுடியாத நிலையில் சொல்லடா என்கின்றனர்.
கேடியின் கை சற்றுத் தளர்ந்ததும், தெரியும் சொல்கிறேன் என்றேன். உடனே தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தினர். வேட்டித் துண்டை எடுத்தனர். சொல்லடா என்றார். நான் எதைச் சொல்வது. மீண்டும் தெரியாது என்று கூறி, நீங்கள் இப்படிச் செய்வதைத் தாங்க முடியாமல் தான் தெரியும் என்று சொன்னேன் என்று கூறினேன்.
டே பாரடா, எங்களுக்கு சுத்துறான் என்று கூறி மீண்டும் அதே வெள்ளைத் துணியை மூகத்தில் போட்டனர். இப்போது மஞ்சு எனது மார்புப் பகுதியை அமர்த்தினார். இன்னுமோர் புலி எனது தலைப் பகுதியிலிருந்து இரண்டு கைகளாலும் எனது நாடியை மேல் நோக்கி இழுத்தார். கௌதன் மீண்டும் தண்ணீரை ஊற்றினார் மூக்கினுள்.
வயிற்றின் மேல் சின்னக் கேடி ஏறி நின்றார். அவர் வயிற்றில் ஏறி நின்று மிதித்ததும் என்னை அறியாமல் சிறுநீர் வெளியேறியது. இப்போது நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஒரு போத்தல் தண்ணீர் முடிய அடுத்த போத்தல் தண்ணீர் இப்படி அருகில் ஒரு வாளி தண்ணீர் இதற்கென்றே வைத்திருந்தனர்.
சொல்லடா, சொல்லடா என்று தண்ணீரை ஊற்ற எனக்கு மூச்சுத் திணர்தலைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. மார்பில் ஒருவரும், வயிற்றில் ஒருவருமாக மிதிக்கின்றனர். ஒருவர் நாடியைப் பிடித்த பிடி சற்றும் தளர்வதாகத் தெரியவில்லை.
மூக்கினுள் ஊற்றப்படும் தண்ணீர் மீண்டும் சுவாசக் குழாயை அடைக்க மூச்சுத் தினறல் ஏற்பட்டு தலை மற்றும் மார்புப் பகுதிகளில் வலி ஏற்பட்டது. நான்கு பேர் சேர்ந்து செய்யும் இந்தக் கொடுமையை எப்படிப் பலவீனமானவர்கள் உடலை உடையவர்கள் தாங்கினரோ தெரியவில்லை! கண்டிப்பாக இறந்திருப்பார்கள். அப்போது தான் நினைத்தேன் அடி,சித்திரவதை தாங்க முடியாமல் அவர்களது குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதாகக் ஜோன்சன் கூறியதில் எவ்வளவு உண்மை உள்ளதென்று.
இவர்கள் செய்யும் கொடுமைகளை விட நான் இறந்து போவது மேல் என்று தோன்றியது. ஆனால் எப்படி இறப்பது? நாடியை மேல் நோக்கி இழுப்பதால் கழுத்துப் பிய்ந்து விடும் போல் இருந்தது. நெஞ்சின் மேல் நின்ற மஞ்சு ஒரு காலால் கழுத்திலும் மிதித்தார், சொல்லடா, எங்க இருக்கு ஆயுதம்? என்னடா தொடர்பு ஈ.என்.டி.எல்.எப். புடன்? எங்க வச்சிருக்கிறாய் காசு? இவர்களது கேள்விக்குப் பதில் சொல்லக் கூடிய விதத்திலா என்னை வைத்திருந்தனர்? என்னைப் போன்றே பிணைக்கப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர் அருகில் மல்லாந்து படுத்தபடி எனக்குச் செய்யும் கொடுமைகளைக் கண்டு மிரண்டு முளிகள் பெரிதாக ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்து தனக்கு என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்கும். அதனால் அவர் ஓர் விறைப்புடன் எனக்குச் செய்யப்படும் கொடுமைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
மார்பு எலும்புகள் உடைந்துவிடுமோ என்ற பயத்தினால் கூடியவரை தம்கட்டி, உடையாமல் இருக்க உடலை இறுக்கி அனைத்துச் சக்திகளையும் மார்புக்குச் செலுத்தியிருந்தேன். மார்பில் நின்று கொண்டிருந்த மஞ்சு கால் தவறி (வழுக்கி) கீழே விழுந்தார். அப்படி விழுந்தவர் எழுந்து இரு கைகளாலும் எனது மார்புப்பகுதியை அமர்த்தினார். சின்னக்கேடி வயிற்றின் மேல் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார். தொடர்ந்து அவரால் வயிறறின் மேல் நிற்க முடியவில்லை. மண்வெட்டிப் பிடி போன்ற ஓர் கட்டையால் எனது இரண்டு தொடைகளிலும் அடித்தார் சின்னக்கேடி. அப்படி அடிக்கையில் ஒரு அடி எனது ஆண் உறுப்பிலும், விதையிலும் பட்டது. ஒரு பக்கம் மூச்சை அடைக்கச் செய்துகொண்டிருந்தனர். மறுபக்கம் கீழ்ப் பகுதியைத் தாக்கினர். எனக்கு எந்த வலியைத் தாங்குவதென்று தெரியவில்லை. உயிர் பிரிந்து விட்டது என்று நினைத்தேன். நான் ஏற்கனவே பாதி கிழிந்த சறத்தைத்தான் உடுத்தியிருந்தேன். அந்தச் சறம் இவர்கள் மிதிக்கும் போது மேல்நோக்கி வந்துவிட்டது. அந்த வதை முகாமில் இருந்த எங்கள் அனைவரது உள்ளாடைகளையும் (அண்டவெயர்) புலி விலங்குகள் பறித்துவிட்டனர். அனைவரும் உள்ளாடை இல்லாமல்தான் இருந்தோம் அங்கே! எனது விதையில் பட்ட அடியின் வலிக்காக நான் இன்றுவரை சிகிச்சைப் பெற்று வருகிறேன். இரத்தக் கட்டி கான்சராக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். அதனால் தொடர்ந்து மருந்து எடுத்து வருகிறேன்.
எனது சறம் மேல்நோக்கி வந்ததும் சின்னக் கேடி சொன்னார். டே இங்கபாரடா இவன்ர இதை, (பச்சையாகத் தூசண வார்த்தையைச் சொன்னார். நான் அந்த வார்த்தையை இங்கு பயன்படுத்தவில்லை) என்று கூறி வாளியிலிருந்த தண்ணீரை எடுத்து எனது ஆண் உறுப்பின் மேல் ஊற்றினார். இந்த நேரத்தில் கூட எனது மூக்கினுள் தண்ணீர் விடுவதை அவர்கள் நிறுத்தவில்லை.
நேராக தண்ணீரை மூக்கினுள் விட்டிருக்கலாம், எதற்காக துணியைப் போட்டு அதன் மேல் தண்ணீரை ஊற்றி மூக்கினுள் போகும் படி செய்கின்றனர் என்பது புரியாமல் இருந்தது. சற்று நேரத்துக்குப் பின்னர்தான் அதன் ரகசியம் தெரிந்தது. நேரடியா தண்ணீரை ஊற்றினால் அந்தத் தண்ணீர் புலி விலங்குகளின் முகங்களில் தெறிக்கும். அது அவர்களை நனைத்துவிடும், அவர்களுக்கு அது அருவெறுப்பாக இருக்கும். துணியைப் போட்டு ஊற்றினால் நாம் மூக்கினால் பலமாகச் சீந்தும் தண்ணீர் துணியில் பட்டுத் தடைபடும். அது அவர்கள் முகங்கள் மீது தெறிக்காது. இதை அவர்கள் அனுபவ பூர்வமாகக் கண்டுதான் துணி போடும் வித்தையைப் பயன்படுத்தத் தொடங்கினர், இதுதான் முகத்தில் துண்டுபோடும் இரகசியமே தவிர வேறில்லை!
எனக்கு வயிற்றிலும் நெஞ்சிலும் மிதித்தவைதான் வலியை ஏற்படுத்தின. மூக்கினுள் தண்ணீர் விடுவது வலியில்லை, மூச்சுத் தினறல்தான். ஆனால் வலியைவிட இது மரணத்தின் வாசலை எட்டிப்பார்க்கும் சிக்கலான ஓர் தருணம். இரண்டாவது தடவையும் அவர்கள் களைப்படைந்து, வெறுப்படைந்து தண்ணீர் விடுவதை நிறுத்தி, “சொல்லடா, தெரியுமா” என்று கேட்டனர். எனக்கும் ஓர் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் ஓம் தெரியும் என்றேன். ஆ! விலத்து என்று சொல்லிக்கொண்டு கௌதமன் என் முகத்துக்கு நேரே நின்று கொண்டு, “சொல்லடா” என்றார்!
மூக்கு, தொண்டை, இருதயக்குழாய் இப்படி அனைத்துப் பகுதியினுள்ளும் தண்ணீர் புகுந்திருந்தது. மூக்ககைச் சீறி, தும்மி தண்ணீரை வெளியே அனுப்பிவிட்டு, சற்று நிதானமாக மூச்சை உள்ளே இழுத்துவிட்டு, சொன்னேன், “எனக்கு ஒன்றும் தெரியாது” என்று. கௌதமனுக்கு மீண்டும் கோபம் வந்தது. “கொண்டுவாடா அந்த அலவாங்கை, இவனை ஒரே குத்தாய் குத்தி கொண்டுவிடவேண்டிதுதான்” என்றார். ஆனால் யாரும் அலவாங்கை எடுத்து வந்து கொடுக்க வில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன் எனது கண்களிலும் அலவாங்கு எதுவும் தென்படவில்லை!
“டே, திரும்பவும் ஊத்தடா தண்ணீயை” என்றார் கௌதமன். மீண்டும் ஆரம்பித்தனர். இப்போது சின்னக்கேடி எனது மார்பை இருகைகளாலும் பலமாக அமத்தினார். மஞ்சு ஓர் கட்டையை எடுத்து எனது உள்ளங்காலிலும், தொடகளிலும் அடிக்க ஆரம்பித்தார். துண்டை முகத்தில் போட்டு தண்ணீர் ஊற்றினார் பெயர் தெரியாத புலி விலங்கொன்று! அதே மூச்சுத் தினறல் மீண்டும். மூச்சு; தினறலை சமாளிக்க எந்த வழியும் தெரியவில்லை. எனது கைகளைப் பலங்கொண்ட மட்டும் உள்நோக்கி இழுத்தேன் கை விலங்குகள் அண்டுவதன் மூலம் வலி அதிகரித்ததால் முகத்தில் ஏற்படும் வலி வேதனை இடம் மாறிக் கைகளுக்குச் செல்லும், எனவே நானாகவே வலியை இடம்மாற்றம் செய்ய முயற்சித்தேன்! எனக்கும் அதிக களைப்பு ஏற்பட்டபடியால் தண்ணீர் தொண்டைக்குள் சென்றதும் ஆடு, மற்றும் கோழிகளின் கழுத்துக்களை நெரிக்கும் போது எற்படும் சத்தம் போன்று எனது வாய் மூக்கு வழியாக அது போன்ற சத்தங்கள் வெளியாயின. இப்போது அனைவரும் சேர்ந்து கேட்கின்றனர், ‘சொல்லடா, சொல்லடா” என்று.
எதை நான் சொல்வது? நான் ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்தில் இருந்ததை தவிர வேறு எதுவும் “ஓம்” என்று சொல்வதற்கில்லை. மூன்றாவது தடவை குறைந்தது மூன்று நிமிடங்கள் வரை செய்ததையே மீண்டும் மீண்டும் செய்தனர். நானும் அதே போன்று மூக்கினுள் வரும் தண்ணீரை எனது சக்தியைக் கொண்டு வெளியே சீறித் தள்ளிக் கொண்டே இருந்தேன். அவர்கள் களைப்படைந்திருந்ததால் நாடியைப் பிடித்து இழுத்து கொண்டிருந்தவர் சற்று தளர்ச்சியகப் பிடித்திருந்ததால் தண்ணீரை வெளியே தள்ளக் கூடியதாக இருந்தது. சற்றுத் தளர்ந்ததும் சொன்னேன், தெரியும் சொல்கிறேன் என்று.
இப்போது எல்லோரும் நிறுத்தினர், களைத்திருந்தபடியால் அனைவரும் தண்ணீர் குடித்தனர். சின்னக் கேடி சொன்னார், ‘இவன் இப்படித்தான் சொல்லுவான், திருப்பிக் கேட்டால் தெரியாது என்று சொல்வான்” என்றார். இவங்களை எல்லாம் வச்சிருக்கக் கூடாது. போட்டிர வேனும்! என்றார் மஞ்சு. சற்று நேரத்தில் கௌதமன் என் அருகில் வந்து நிலத்தில் குந்திக் கொண்டு இருந்தார். அன்ரனி , சொல்லு! நீ சொன்னால் பிரச்சினை இல்லை! சொல்லாமல் விட்டால்தான் சித்திரவதை செய்வம். அதனால பயப்படாமல் சொல்லு என்றார்.
முதலில் இருந்த வீரியம் குறைந்து, இப்போது இரைந்து கேட்க ஆரம்பித்தார். நானும் நிதானமாச் சொன்னேன், அண்ண! நீங்கள் இப்படிக் கொடுமைப் படுத்திற படியால்தான் ஓம் என்று சொல்கிறேன். எனக்கு உண்மையில் அவர்கள் எங்கே ஆயுதங்களை வைத்துவிட்டுச் சென்றனர் என்பது தெரியாது. உங்களுடைய அடியைத் தாங்க முடியாமல்தான் தெரியும் என்று சொல்கிறேன். நான் சொல்வது உண்மை. இதையும் நீங்கள் நம்பாமல் தொடர்ந்து இப்படிச் சித்திரவதை செய்தால் நான் சாவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. ஆதலால் சித்திரவதை செய்யாமல் என்னைக் கொன்றுவிடுங்கள், பெரிய அளவில் நோகாமல் கொன்றுவிடுங்கள் என்று அவருக்குப் புரியும்படியாகச் சொன்னேன்.
கௌதமன் இப்போது தெரிந்து கொண்டார் என்னிடமிருந்து இனிமேல் எதையும் எடுத்துவிட முடியாது என்பதை! சற்று யோசித்தவர் தள்ளிச் சென்று ஏனையோரிடம் சிறிது நேரம் கதைத்தார். நான் தலையைத் திருப்பி அவர்களைப் பார்க்காதது போல் கவனித்துக் கொண்டிருந்தேன். கூடி நின்று கதைத்த அவர்களது பார்வை என்மீது பதிந்து பின்னர், ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர் மீது பதிந்தது. எனக்கு அப்போதே புரிந்தது ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர் மீது தங்கள் கைவரிசையைக் காண்பிக்கப் போகின்றனர் என்று.
என் மீது ஏறக்குறைய மூன்று வாளித் தண்ணீர்வரை ஊற்றியிருந்தனர். நிலத்தில் கொட்டிய நீர் மண்ணைச் சேறும் சகதியுமாக்கி செம்பாட்டு நிறத்தில் நனைந்திருந்தது. உடல் முழுவதையும் முதுகு முழுவதும் ஈரமாகி தண்ணீரில் ஊறியது. மறுபக்கம் திரும்பி ஈ.பி.ஆர்.எல்.எப் தோழரைப் பார்த்தேன். அவருக்கும் தெரிந்திருந்தது தனது முறை நெருங்கிவிட்டது என்று. என்னை அனுதாபத்துடன் நோக்கினார். என்மீது அனுதாபப்பட்ட அவர் தன்னுடைய சித்திரவதைக்குத் தயாரானார். எனது அருகில் வந்த மஞ்சுவும், சின்னக்கேடியும் என்னை முறைத்துப் பார்த்தனர். சின்னக் கேடி மண்வெட்டிப் பிடி போன்ற ஓர் கட்டையை எடுத்து தனது தலைக்கு மேலாக ஓங்கி எனது முகத்துக்கு நேரே அடிக்க வந்தார். ஆனால் அடிக்கவில்லை. அந்த அடி எனது முகத்தில் பட்டிருந்தால் எனது முகம் பாதிக்கு மேல் உள்ளே போயிருக்கும். அவர் தனது வெறுப்பை அவ்விதம் மிரட்டிக் காண்பித்தார். அவருக்கு அதிர் ஓர் திருப்தி ஏற்பட்டது.
சித்திரவதையில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்:
சிறிது நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் தோழரது முகத்தில் துணியைப் போட்டனர். மஞ்சு அவரது நெஞ்சில் ஒரு காலை வைத்து மிதித்தார். சின்னக் கேடியும் தனது வலது காலால் அவரது வயிற்றில் மிதித்தார். வெறொருவர் அவரது தலைப் பகுதியில் இருந்து கொண்டு இரண்டு கைகளாலும் அவரது நாடியைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தார். கௌதமன் போத்தலில் இருந்த தண்ணீரை அவரது மூக்கின் மேல் ஊற்றினார். அவர் தினறினார். கால்களை இழுத்தார். மூக்கு வழியாக சத்தம் வந்தது. தலைப் பகுதியிலிருந்தவர் கைகளை எடுத்து அவரது கன்னத்தில் இரண்டு கைகளாலும் அறைந்தார். சத்தம் போடாமல் இரடா என்றார். ஆட்டாமல் இரடா என்றார். டே, இவன்ர கால் சங்கிலி லூசா இருக்கடா! கயித்தால இழுத்து பிக்காசில கட்டடா என்று கௌதமன் கத்தினார்.
இரண்டு புலிகள் அலுவலகத்துக்கு ஓடிப்போய் இரண்டு கயிற்றுடன் வந்தனர். அவரது காலை பிக்காசுடன் இணைத்துக் கட்டினார்கள். இவை நடந்து கொண்டு இருக்கும் போது அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். அவருக்கு எப்படியான ஆறுதலைக் கூற முடியும் என்று யோசித்தேன். வாயைத் திறந்து எதுவும் சொல்ல முடியாது. கைகள் பிக்காசுடன் பிணைக்கப்பட்டிருந்தன. வெறும் கண்களால் எதனைச் சொல்லமுடியும்? கண்களால் வானத்தைக் காண்பித்தேன். கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டதை அவரும் புரிந்துகொள்வார் என்று நானே எனக்குள் நினைத்தக் கொண்டேன்! அவரது உச்சந்தலை நிலத்தில் படுமளவுக்கு கழுத்துத் தாடையையும் சேர்ந்து ஒருவர் இழுத்துப் பிடிக்க தண்ணீரை ஊற்றினார் அவரது மூக்கினுள்.
சொல்லடா சி.வி.எப். க்கு குடுத்த ஆம்ஸ் எல்லாம் எங்கேடா வைச்சிருக்கிறாய்? பிரேமச்சந்திரனுக்கும், பெருமாளுக்கும் என்னடா தொடர்பு? அடிச்ச காசெல்லாம் எங்கடா வச்சிருக்கிறாய்? வயிற்றில் உதைப்பவரும் கேட்கிறார், நெஞ்சில் மிதிப்பவரும் கேட்கிறார், கழுத்தைப் பிடிப்பவரும் கேட்கிறார் ஆனால் அவரால்தான் பதில் சொல்ல முடியாது. வாயைத் திறக்க முடியாமல் தலைப் பதியிலிருநது எனக்கு இழுத்தது போன்று அவரையும் இழுத்துக் கொண்டிருக்கிறார் இன்னுமொருவர். என்னைச் சித்திரவதை செய்யும் போது பேசப்பட்ட தூசண வார்த்தைகளை விட அதிகமான வார்த்தைகளை மிகவும் தாராளமாகவே பயன்படுத்தினர்.
அவர் தினறும் சத்தம் மிகவும் அதிகமாக கேட்டது. சினனக் கேடி சொன்னார் “டே இவன் கத்துகிறது வெளியில் இருக்கிற ஆக்களுக்கு கேக்கப் போகுது. துண்டைப் போட்டு அமத்துங்கடா” என்றார். மூச்சு விட முடியாத அவர் எழுப்பும் ஒலி வெளியில் இருக்கும் ஒருவரது காதில் விழுந்தால் யாரோ ஒரு மனிதனது கழுத்தை புலிகள் வெட்டுகின்றனர் என்று நினைக்கத் தோன்றும். இதைப் பார்க்க முடியாமல் நான் சிலவேளை கண்களை மூடினேன். அப்போது எனக்கும் அது போன்ற ஓர் எண்ணம்தான் தோன்றியது. நானும் அப்படித்தான் சத்தமிட்டிருப்பேன் என்று எனக்கு அப்போதுதான் தோன்றியது! ஜேசுநாதரை சிலுவையில் அறைந்து ஈட்டியால் குத்தினார்கள். இவர்கள் விலங்கு போட்டு படுக்கவைத்து பலபேர் சேர்ந்து ஏறி மிதித்துக் கொல்லப்பார்க்கிறார்கள்.
எனக்கு இடைவேளை விட்டது போன்று இவருக்கும் கொண்டுஇடைவேளை விட்டனர். அந்த இடைவேளையில் கேட்டனர் சொல்லடா என்று. அவரும் எனக்கு எதுவும் தெரியாது, ஆயுதங்களை எங்கே புதைத்தனர் என்று யாரும் எனக்குச் சொல்லவில்லை. அப்படி எனக்குத் தெரிந்தால் நான் எடுத்துக் கொடுத்துவிடுவேன். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்? என்று அவர்களிடத்தில் கேட்டார்.
“டே பார்டா இவனுக்கு சரியான திமிர்! இவனை விடக்கூடாது, இவனக் கொல்லத்தான் வேனும்” என்று கத்தினார் மஞ்சு! இரண்டு நிமிடங்களில் மீண்டும் ஆரம்பித்தனர் தங்களது தலையாயக் கடமையை! ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர் ஏறக்குறைய ஆறு அடி உயரம் இருப்பார். நல்ல உடல் கட்டமைப்புக் கொண்டவர். கண்கள் பிரபாகரனது கண்களை விடவும் பெரிதானது! அதிகமாக யாருடனும் கதைக்க மாட்டார். அவரது குடும்பத்தை நினைத்தோ அல்லது வேறு உறவுகளை நினைத்தோ அவர் கண்கள் கலங்கியதை அந்தச் சிறையில் இருந்த நாட்களில் நான் பார்த்திருக்கிறேன். மிகவும் அமைதியான மனிதர் அவர்.
அப்படியான ஒருவரை மல்லாக்கப் போட்டு நார் உரிக்கின்றனர் புலி விலங்குகள். சித்திர வதையைத் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் சித்திரவதைப் பார்த்துக்கொண்டு இருக்க எந்த மனிதனாலும் முடியாது. புலிகள் இவற்றுக்கு விதி விலக்கான விலங்குகளாயினர். தமிழ் இனம் மரணத்தையா விடுதலையாகக் கோரினார்கள்? விடுதலையை நேசிக்கும் எவனும் மனிதனுக்கான உரிமைகளை மீற மாட்டான். எனவே இவர்களுக்கு விடுதலை அல்ல நோக்கம் என்பது இவர்களது கொடுஞ் செயல் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.
அந்தத் தோழர் அலறுகிறார் ஒலி வரவில்லை, அதனுடைய சத்தம் கேட்கிறது. மரணப் பகுதிக்குச் சென்று மீண்டும் வருகிறார். இவர்கள் தடிகளால் அடிக்கின்றனர், கால்களால் உதைக்கின்றனர், கைகளால் குத்துகின்றனர் அடிக்கின்றனர் மூச்சை நிறுத்த துணிபோட்டுத் தண்ணீர் ஊற்றுகின்றனர். சின்னக்கேடி கத்துகிறார் “டே அந்தக் கட்டையை எடுத்துக் கொண்டு வாடா” என்று அந்த வளவின் மூலையில் கிடந்த மரக்கட்டையைக் காண்பிக்கிறார். ஒரு புலி ஓடிச்சென்று அந்த மரக்கட்டையை எடுத்து வருகிறார். அந்த மரக்கட்டை ஒரு முக்கால் அடி விட்டங்கொண்டது. நீளம் நான்கு அடிகள் இருக்கும்.
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக