LR Jagadheesan : இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றியின் உண்மையான ஆழ அகலத்துக்கான அளவுகோளாகவும் தமிழக அரசியலின் அடிப்படை பண்பு மாற்றத்துக்கான குறியீடாகவும் இந்த இரு தொகுதிகளும் அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் திமுக கூட்டணி வேட்பாளர்களும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. இருக்கவேண்டும் என்பது கோரிக்கை.
இன்றைக்கு உலக அளவில் பேசப்படும் ஆரம்பப்பள்ளிகளின் இலவச மதிய உணவை இந்தியா சுதந்திரம் அடைவதற்கும் முன்பே தமிழ்நாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தக்காரணமான எல் சி குருசாமிகளின் அரசியல் வாரிசுகள் சுதந்திர இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல் அரங்கில் ஏறக்குறைய இல்லாமலே போனார்கள்.
பல பத்தாண்டுகள் எந்த குரலும் அற்றுப்போன சமூகத்தில் இருந்து அவர்களின் வலுவான குரலாக காலம் உருவாக்கியவர் அதியமான்.
உண்மையில் பல்வேறு நெருக்கடிகளுக்கும் புறக்கணிப்புகளுக்கும் முகம் கொடுத்து உருவானவர் என்பதே சரி. தமிழ்நாட்டு சட்டமன்றத்துக்குள் அவரது குரல் தனித்துவக்குரலாக மட்டுமல்ல; குரலற்றவர்களுக்கான குரலாகவும் ஒலிக்கும்.
இதே கொங்குமண்டலத்தைச்சேர்ந்த சி சுப்பிரமணியம் தான் பசுமைப்புரட்சியின் மூலம் சுதந்திர இந்தியாவை உணவுதானிய உற்பத்தியில் தன்னிறைவை எட்டச்செய்து பட்டினிச்சாவுகளை பெரும்பாலும் இல்லாமல் செய்த வரலாற்று சாதனையின் மூலவர்களில் ஒருவராக உருவானார். திராவிடம் ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தின் உதவியோடு.
அந்த பசுமைப்புரட்சியின் அமலாக்கத்தில் எதிர்காலத்தில் அரசு இயந்திரமும் அதிகாரவர்க்கமும் செய்திருக்கவேண்டிய தேவையான மாற்றங்களை உரியகாலத்தில் உரியமுறையில் செய்யாமல் போனதன் விளைவு பக்கவிளைவுகளும் அதன் பாதக அம்சங்களும் படிப்படியாக அதிகரித்து இன்று அது உடனடியாக எதிர்கொண்டாகவேண்டிய சுற்றுச்சூழல், நீர்மேலாண்மை மற்றும் பொருளாதார நெருக்கடியாக உருவெடுத்திருக்கிறது.
ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருக்கும் வற்றாத ஜீவநதிகள் போன்ற வலுவான இயற்கை நீராதாரங்கள் இல்லாத தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த நீர் சேமிப்பு கட்டமைப்புகளை தமிழ்நாட்டின் தொழில்புரட்சியும் அதனால் ஏற்படும் நகர்ப்புற வளர்ச்சியும் சேர்ந்து விழுங்கிவிட்டது ஒருபுறம்.
மிச்சமிருக்கும் நீராதாரங்களைக்கூட உரியவகையில் முறையாக பராமரிப்பு செய்யாமல் கடந்த பத்தாண்டுகளில் முழுமையாய் சிதைத்து கெடுத்து வைத்திருக்கும் அதிமுக கொள்ளைக்கும்பல் செய்திருக்கும் நீர்மேலாண்மை சீரழிவு/சீர்குலைவு மறுபுறம்.
இப்படி விவசாயம், நீர்மேலாண்மை, சுற்றுச்சூழல் என ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று முக்கிய வாழ்வாதார பிரச்சனைகளிலும் தமிழ்நாடு இன்று மிகப்பெரும் சவால்களை சந்திக்கிறது.
இவற்றுக்கான ஆக்கப்பூர்வ தீர்வுகளை கண்டாக வேண்டிய நெருக்கடியில் தமிழ்நாடு இருக்கிறது. அந்த தீர்வுகளில் கார்த்திகேய சிவசேனாதிபதி போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இவரைப்போன்றவர்கள் அடுத்த தலைமுறை தமிழக அரசியலை முன்நோக்கி நகர்த்த பெரிதும் பயன்படுவார்கள்.
ஆனப்பெரிய பெரியார் முதல் சுப்பராயன், சி சுப்பிரமணியம், சி டி தண்டபாணி, சக்தி மகாலிங்கம், ஜி டி நாயுடு என பலவகையான ஆளுமைகளை தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் தந்து பெருமைபெற்ற கொங்குமண்டலம் தமிழ்நாட்டின் வர்த்தக தலைநகராகவும் இருந்தது; இன்றும் இருக்கிறது.
இன்றும் நீடிக்கும் விவசாயம்; கடுமையான உடல் உழைப்பு; வற்றாத வர்த்தகத்துடிப்பு மூன்றும் சமவிகிதம் கொண்ட தமிழ்நாட்டின் தனித்துவ பிரதேசம் கொங்குமண்டலம்.
ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் சொத்துத்தகறாரில் சொந்த பங்காளியையே கடப்பாரையால் குத்திக்கொன்ற கொலைகாரர்கள்; கொடநாடு படுகொலைகளை ஆணையிட்டு நடத்திக்காட்டியவர்கள்; மூன்று மாணவிகளை உயிரோடு எரித்துக்கொன்றவர்கள்; பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குரூரர்கள்; சாதிக்கு வெளியே காதல் திருமணம் செய்பவர்களை கொல்லும் ஜாதிவெறியர்கள்; மதவெறி கும்பல்கள் போன்ற சமூக விரோதிகள் இங்கே களையாக முளைத்து களங்கமாய் வளர்ந்து நிற்கிறார்கள்.
உண்மையில் இவர்கள் எண்ணிக்கையில் மிக மிகச்சிறுபான்மையினர் தான். ஆனால் வல்லாதிக்கம் செலுத்துவதிலும் சமூக ஒற்றுமையை சிதைப்பதிலும் பெரும்பங்காற்றுகிறார்கள்.
அத்தகைய களைகளை அகற்றி தம் மீதான களங்கத்தை போக்குவதற்கு கொங்குமண்டலத்துக்கு கிடைத்திருக்கும் புதிய ஆயுதங்களில் வலுவான ஆயுதங்கள் இவர்கள் இருவரும். இவர்களைப்போன்றவர்களின் வெற்றி கொங்கு மண்டலத்துக்கு மட்டுமல்ல மொத்த தமிழ்நாட்டுக்குமே நன்மை செய்யும். செய்யவேண்டும். அதற்குரிய ஆதரவை அந்தந்த தொகுதி வாக்காளர்கள் வழங்கவேண்டும்.
பிகு: ஈழத்தமிழர்களுக்காக அதிகநாட்கள் சிறையில் இருந்த தமிழ்நாட்டுப் பெண் அரசியல் தலைவர் இதே கொங்குமண்டலத்தைச்சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வேகமாக வாய்வீரம் காட்டும் 99% வேஷதாரிகள்/ஈழவியாபாரிகள் இவர் பெயரை மறந்தும் உச்சரிக்க மாட்டார்கள். முதல் காரணம் திமுக மீதான அவர்களின் ஆழ்மன வெறுப்பு.
இரண்டாவது காரணம் சுப்புலட்சுமிக்கு நடந்த அந்த வன்கொடுமையை நடத்தியவர் ஈழ வியாபாரிகளுக்கு தன் உடனுறை தோழியின் கணவர் மூலம் படியளந்த பெருமாட்டி “ஈழத்தாய்”. கொங்குமண்டலத்தில் அதிமுக மூலம் அரசியலுக்கு வந்தவர் சுப்புலெட்சுமி ஜகதீசன்.
அவர் சமகாலத்தில் அதே பகுதியில் உருவானவர் தான் முத்துசாமியும் கூட. அப்படியாக எல்லா கட்சிகளிலும் பொறுப்பும் நாகரீகமும் கொண்ட அரசியல்வாதிகள் உருவான கொங்குமண்டலத்தின் முதல் அபஸ்வரம் செங்கோட்டையன். அதன் விபரீத வடிவம் எடப்பாடி.
அப்படிப்பட்டவர்களுக்கு மாற்றாக அதே கொங்குமண்டலத்தில் மீண்டும் சுப்புலெட்சுமிகளும் ஜோதிமணிகளும் காத்த்திகேய சிவசேனாதிபதிகளும் அதியமான்களும் உருப்பெருவதும் வலுப்பெறுவதும் உண்மையிலேயே ஆரோக்கியமான முன்னேற்றம் தான். அதற்கு வாக்காளர்களின் பேராதரவும் வலிமை சேர்த்தால் சிறப்பாகவே இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக