ஞாயிறு, 21 ஜூன், 2020

தமிழகத்தில் அக்டோபர் முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’!

தமிழகத்தில் அக்டோபர் முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’!மின்னம்பலம் : தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் செயல்படுத்தப்படும் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளைக் கணினிமயமாக்கும் பொருட்டு, மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டதுதான், ‘ஒருங்கிணைந்த மேலாண்மை பொதுவிநியோகத் திட்டம்’. இதன்மூலம், நாடு முழுவதுமுள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்படும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருள்கள் வாங்கமுடியும். இந்தத் திட்டம்தான் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ என்று அழைக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அனைத்து மாநிலங்களிலும் இது செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் மத்திய அரசால் முதலில் அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் இந்தத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்ப, “தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் பொது விநியோகத் திட்டத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" என அறிவித்திருந்தார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.
தொடர்ந்து, இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு இருந்துவந்த நிலையிலும், கடந்த ஜனவரி மாதம் முதல், சோதனை முயற்சியாக, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் என அறிவித்தார் அமைச்சர் காமராஜ். பின்னர் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ எனும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 20) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “தமிழகம் முழுவதும் தேவையான அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், தமிழகத்தில் எங்கெல்லாம் நெல் விளைகிறதோ அங்கெல்லாம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அடுத்த மூன்று மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்குவதற்காக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் .
தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம், அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம்” என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
-ராஜ்

கருத்துகள் இல்லை: