வெள்ளி, 26 ஜூன், 2020

சாத்தான் குளம் காவல் நிலையத்தில் அரங்கேறிய வெறியாட்டம் ... சவுக்கு சங்கர்

சாத்தான்குளம் கடைசியாக இருக்கட்டும் savukkuonline.com : தமிழகத்துக்கு கஸ்டடிகொலைகளும், போலி மோதல் படுகொலைகளும் புதிதல்ல. இதில் வட இந்தியா, தமிழகம் இரண்டுக்கும் வேறுபாடெல்லாம் இல்லை. கஸ்டடி எடுப்பவர்களை அடித்து துவைப்பது என்பது அன்றாட நிகழ்வு. இதில் கொலைகளும் நடந்து விடுவதுண்டு. இது போல நடக்கும் கஸ்டடிகொலைகளில், நூற்றில் ஒரு வழக்கில்கூட சம்பந்தப்பட்ட காவல் துறையினர் தண்டிக்கப்படுவதில்லை.  சில நிகழ்வுகளில் துறை நடவடிக்கை எடுக்கப்படுவதுண்டு.  ஆனால் 95 சதவிகித நிகழ்வுகளில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.
காவல் நிலையத்தில் வைத்து ஒரு கைதியை அடித்தே கொலை செய்த பிறகு கூட நம்மை நமது துறை காப்பாற்றி விடும் என்கிற காவல் துறையினரின் அசாத்திய நம்பிக்கையே இதுபோன்ற கொலைகள் தொடர  காரணமாக இருந்து வருகிறது. இது தான்  சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் காவல் துறையினரால் கொலை செய்யப்பட்டதற்கான அடிப்படை காரணம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்து போன பென்னிக்ஸ் (31) மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் (58) ஆகியோர் மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்.   பொது பிரச்சினைகளில் கூட தலையிடாதவர்கள்.  பென்னிக்ஸ் ஒரு செல்போன் கடை வைத்துள்ளார்.  அவர் தந்தை ஜெயராஜ் மரக்கடை நடத்தி வருகிறார்.  இவர்கள் எந்த காரணத்துக்காகவும் காவல் நிலையத்துக்குச் சென்றதில்லை. ஆனால் இவர்கள்தான் பொதுமுடக்க சமயத்தில் கடையை மூடவில்லை என்ற ஒரே காரணத்துக்காக இன்று அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிறன்று, (19 ஜூன்) மாலை காவல் துறை வாகனம் ரோந்துப் பணியில் வருகையில், செல்போன் கடையில், பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜ்இருந்துள்ளார்.   அந்த கடைக்கு முன்பாக ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது.  அந்த ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் நீண்ட நாட்களாக ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக உரசல் இருந்துள்ளது.   உதவி ஆய்வாளர் ஞாயிறன்று ரோந்து வந்திருக்கிறார். செல்போன் கடை திறந்திருப்பது குறித்து எச்சரித்துள்ளார். உதவி ஆய்வாளர் அங்கிருந்து துறை சென்றதும், ஜெயராஜ்  புலம்பியுள்ளார்.   “மூணு மாசமா வருமானம் இல்ல.  இவனுங்க வேற வந்து கடையை மூடு, கடையை மூடுன்னு உயிரை எடுக்குறானுங்க” என்று புலம்புகிறார்.
அந்த ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ வைத்திருந்த காளி என்ற நபர், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக இருக்கும் முருகன் என்பவரோடு அவ்வப்போது மது அருந்தும் அளவுக்கு நல்ல நெருக்கம்.   அந்த காளி, பழைய முன்விரோதத்தை மனதில் வைத்து, தலைமைக் காவலர் முருகனை அழைத்து, செல்போன் கடையில் இருந்த ஜெயராஜ், ரோந்து வந்த உதவி ஆய்வாளரை மிகவும் அவதூறாக பேசினார் என்று தகவல் சொல்கிறார்.
மறுநாள் காவல் துறையினர் ஜெயராஜை காவல் நிலையம் அழைத்து செல்கின்றனர்.    தந்தை கைது செய்யப்பட்டதை அறிந்த மகன் பென்னிக்ஸ், உடனடியாக காவல் நிலையம் செல்கிறார்.   அங்கே வாக்குவாதம் நடக்கிறது.   பென்னிக்ஸ் முன்னிலையிலேயே சாத்தான்குளம் உதவி ஆய்வாளர், ஜெயராஜை அடிக்கிறார்.   உதவி ஆய்வாளரை ஃபென்னிக்ஸ் தாக்க பாய்கிறார்.  அவ்வளவுதான்,  காவல் நிலையத்தில் இருந்த மொத்த காவலர்களும், உதவி ஆய்வாளர்களும் சேர்ந்து, இரவு முழுக்க தந்தை மற்றும் மகனை கடுமையாக தாக்குகிறார்கள்.    அவர்களுக்கு காயம் அதிகமாகவே, இவர்களை நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விடலாம் என்று கருதி,  கோவில்பட்டி கிளைச்சிறையில்அடைக்கிறார்கள்.  அங்கே பத்து மணி நேர இடைவெளியில் தந்தை மகன் இருவரும் இறக்கிறார்கள்.
இந்த இறப்பின் காரணமாக இரு காவல்துறையினரை பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.   ஆனால்,  கொலை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.  சந்தேகத்திற்கிடமான மரணம் என்று மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய அவலமான ஒரு நிலையை தடுக்கவோ, நிறுத்தவோ, எந்த அதிகாரியும், எந்த அரசியல் தலைவரும் முன்வருவதில்லை என்பதுதான் வேதனை. காவல்துறையில் சீர்த்திருத்தம் தேவை என்று அனைவருக்கும் தெரிந்த பின்னரும் அதற்கான முயற்சிகள் கிடப்பிலேயே இருக்கின்றன.
ஏனெனில், அரசியல்வாதிகளுக்கு, காவல் துறை பல நேர்வுகளில் அவர்களின் கூலிப்படையாக செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.  இல்லையென்றால், ஜெயலலிதாவிடமும், சசிகலாவிடமும் இருந்து பல கோடிகளை திருடி விட்டார் என்ற காரணத்தால், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனை ஹெராயின் வழக்கில் உள்ளே தள்ள முடியுமா ?   சசிகலாவின் கணவர் நடராஜனோடு நெருக்கமாக இருந்தார் என்ற காரணத்துக்காக, செரினாவின் மீது கஞ்சா வழக்கு போட முடியுமா ?   இதற்காகத்தான், காவல் துறையில் சீர்திருத்தங்களை அரசியல்வாதிகள் வெறுக்கிறார்கள்.   திமுக ஆட்சியிலும் இந்த பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
தமிழக காவல் துறையில் பணியாற்றும் கடைநிலை காவலர் முதல் மூத்த அதிகாரி வரை எவரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள்.    ஒருவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டால், அவரை அடிப்பதோ, துன்புறுத்துவதோ தவறே இல்லை என்று சாதிப்பார்கள்.
காவல்துறையினர் முன்பாக யார் அளிக்கும் வாக்குமூலமும், நீதிமன்றத்தின் முன்பு செல்லாது என்று சட்டம் இருக்கும் நிலையிலேயே இத்தகைய சித்திரவதைகள் நடைபெற்று வருகின்றன.   இந்தச் சட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு விதிவிலக்கை வைத்துத்தான் இன்று வரை இந்தியா முழுக்க இருக்கும் காவல் நிலையங்களில் சித்திரவதைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, காவல் துறை அதிகாரியிடம் ஒரு குற்றவாளி அளிக்கும் வாக்குமூலத்தில், வழக்கு சம்பந்தமான பொருட்களை பறிமுதல் செய்யும் பகுதியை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளலாம் என்று உள்ளது. (Confession resulting in seizure)   இதனை பயன்படுத்தி தான், பெரும்பாலான குற்றவாளிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
உதாரணத்துக்கு ஒருவர் கொலை செய்ததாக கைது செய்யப்படுகிறார் என்றால்  ‘நான் தான் கொலை செய்தேன்’ என்று காவல்துறை அதிகாரி முன்பு ஒப்புதல் வாக்குமூலம் தந்தாலும் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளாது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது சொல்லப்படுபவை மட்டுமே நீதிமன்றம் பரிசீலிக்கும். ஆனால் ‘நான் இந்தக் கத்தியை வைத்து கொலை செய்தேன். அதனை இந்த இடத்தில் பதுக்கி வைத்திருக்கிறேன்’ என்று பிடிபட்டவர் சொல்வார் என்றால் அந்தக் கத்தியை கைப்பற்றி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் நீதிமன்றம் அதனை ‘வழக்கின் சொத்தாக’ கருதி ஏற்றுக்கொள்ளும்.  குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் இந்த பகுதியை மட்டும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்.
இந்த ஒரு விதிவிலக்கை வைத்துத்தான், காவல் நிலையத்தில் சித்திரவதைகள் இன்றுவரை தொடர்கின்றன.
கஸ்டடிகொலைகள் பெரிய அளவில் நடவடிக்கைகள் இல்லாமல் மூடி மறைக்கப்படுவதன் பின்னணியில், பொதுமக்களிடம் இதற்கு இருக்கும் ஆதரவும் ஒரு காரணம் என்பதை மறுக்கவியலாது.   ஒரு திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக இருக்கும் நாயகன், “இவனை காலம் பூரா ஜெயில்ல வச்சி கவர்மெண்ட் சோறு போடுறதுக்கு பதிலா 50 ரூபாபு ல்லட்டுல இவன் லைஃபை முடிச்சிடுறேன்” என்று வசனம் பேசுகையில், புல்லரித்து கைத்தட்டுவதும் நாம்தான்.    கொடும் குற்றங்கள், பாலியல் வன்முறைக் குற்றங்கள் போன்றவற்றில் சம்பந்த்தப்பட்டுள்ள குற்றவாளிகள், “தப்பிக்க முயற்சி செய்தபோது காவல் துறையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை” என்ற செய்தி வருகையில் நாம்தான் மகிழ்கிறோம். ‘இவனுங்களையெல்லாம் இப்படித்தான் நடு ரோட்டுல வச்சி சுடணும்.  கோர்ட்டுக்கு போனா வருசக்கணக்குல இழுத்தடிச்சிக்கிட்டு இருப்பாங்க’ ’என்று நாம் மறைமுகமாக தரும் ஆதரவே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணங்களுக்கான உந்துசக்தி.
பிக்பாக்கெட் அடிப்பவர்களையும், சங்கிலி பறிப்பவர்களையும் கைது செய்யும் காவல்துறை, பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்கள் என்று அவர்கள் கைகள் உடைக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுகையில், நாம்தானே கொண்டாடினோம் !!!  நாம்தானே அகமகிழ்ந்தோம் !!!  அதன் விளைவுதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணங்கள்.
இது போல கைகால்கள் உடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குற்றவாளிகளை தங்கள் முன் ஆஜர்படுத்துகையில் ஒரே ஒரு நீதித்துறை நடுவர் கூட ‘இவர்களுக்கு எப்படி கைகால் உடைந்தது, ஏன் இப்படி நடந்தது’என்று  விசாரணைக்கு கூட உத்தரவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ள மனித உரிமை ஆணையங்களும் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் கைகால் உடைப்பு குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்தும் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
2012ம் ஆண்டில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், ஒரு காவல் ஆய்வாளருக்கும், அந்த ஊரில் உள்ள ஒருவருக்கும் போனில் நடந்த சாதாரண உரையாடல், அந்த ஆய்வாளர் தன் துப்பாக்கியால், அந்த நபரை சுட்டுக் கொலை செய்யும் அளவுக்கு சென்றது.  பட்டப்பகலில், எவ்வித முகாந்திரமும் இன்றி வானுமாமலை என்பவரை, காவல் ஆய்வாளர், பலர் முன்னிலையில் சுட்டுக் கொலை செய்தார்.   இந்த வழக்கு என்ன ஆனது என்று நினைக்கிறீர்கள் ?  இறந்தவரின் மனைவிக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அரசு வேலை மற்றும் நிவாரணம் அறிவித்தார்.  அந்த வழக்கு அப்படியே மூடப்பட்டது.  இணைப்பு

இறந்துபோன வானமாமலையை மடியில் கிடத்தி அழும் அவர் மனைவி
இது போல தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடந்த பல போலி என்கவுண்ட்டர்கள், கஸ்டடிபடுகொலைகள் குறித்து வரிசையாக பட்டியலிட முடியும். இவற்றில் ஒரு வழக்கில் கூட சம்பந்தப்பட்ட காவல் துறையினர் தண்டிக்கப்படவில்லை.
போலி என்கவுண்ட்டர்கள், மற்றும் கஸ்டடிபடுகொலைகளை எதிர்த்து இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த, ‘சிறைக்கைதிகள் உரிமை மையத்தின்’இயக்குநர் வழக்குரைஞர் புகழேந்தி இது குறித்து பேசினார்.

வழக்கறிஞர் புகழேந்தி
“லாக்அப் மரணங்கள் மற்றும் போலி மோதல் படுகொலைகள் குறித்து இது வரை இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகளை எங்கள் அமைப்பின் மூலமாக தாக்கல் செய்துள்ளோம்.  ஆனால் எந்த வழக்கிலும், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லை.
சமீபத்தில் கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளேன்.
வேலூர் மாவட்டத்தில் ஜானி பால் ராஜன் என்பவர் உள்ளார்.  அவர் மனைவி பெயர் ஷாலினி.  அவர்களுக்கு ஜெனிசால் என்ற பெயரில் 9 வயது மகள் இருக்கிறார்.   இந்த ஜானி பால் ராஜன் மீது பல குற்ற வழக்குகள் இருக்கின்றன.  காவல்துறை இவரைத் தேடி வருகிறது.  அவர் தலைமறைவாகி விட்டதால், அவர் மனைவி ஷாலினி மீது காவல் துறை பொய் வழக்கு போட்டு கைது செய்தது. கைது செய்கையில், அவர்களின் 9 வயது மகள் ஜெனிசாலும் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார்.   ஷாலினி சிறைக்கு அனுப்பப்பட்டார்.   அவர் சிறை சென்றதால், அவர்களின் மகள் ஜெனிசால், பால்ராஜனின் தாயார் பாப்புகுட்டியோடு வசித்து வந்தார்.
பாட்டி வீட்டுக்கு சென்ற காவல் துறையினர்,  பாட்டியை மிரட்டி, 9 வயது ஜெனிசாலை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றி, அரசு குழந்தைகள் முகாமில் அடைத்துள்ளனர்.   அதற்கு காவல் துறையினர் சொன்ன காரணம், ஜெனிசாலின் பாட்டி அந்த குழந்தையை பார்த்துக் கொள்ள மறுத்து விட்டார் என்பதே.
குழந்தைகள் முகாமுக்கு சென்று பேத்தி ஜெனிசாலை தன்னுடன் அனுப்புமாறு பாப்புக்குட்டி கேட்டதற்கு, காவல் துறையினர் உத்தரவில்லாமல் அனுப்ப இயலாது என மறுத்திருக்கிறார்கள்.  இப்போது தன் பேத்தியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குழந்தையின் பாட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
ஒரு குற்றவாளியைப் பிடிப்பதற்காக, ஒன்பது வயது குழந்தையைக் கூட நிம்மதியாக வாழ விடாமல் செய்ய காவல் துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?   பாட்டி வீட்டில் வசிக்கும் 9 வயது பெண் குழந்தையை வலுக்கட்டாயமாக பிரித்து, அரசு முகாமில் காவல் துறையினர் சேர்த்துள்ளனர்.   இது தொடர்பாக காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட பல புகார்களில் ஒன்றின் மீது கூட இது வரை நடவடிக்கை இல்லை” என்கிறார் புகழேந்தி.
கஸ்டடிமரணங்கள் தொடர்வதற்கு, நீதித்துறையின் மௌனமான ஒத்துழைப்பு ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.  ஒரு நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஒரு குற்றவாளியை ஆஜர்படுத்துகையில்,  அவருக்கு காயங்கள் இருக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் Criminal Rules of Practice 2019 சொல்கிறது. அந்த காயங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவ்விதி வலியுறுத்துகிறது.  ஆனால், இவ்வாறு பதிவு செய்தபின், அந்தக் காயங்களுக்கு என்ன காரணம் என்பதை விசாரிக்க வேண்டும் என்றோ, குற்றவாளி தன்னை யார் அடித்தார்கள் என்பதை குறிப்பிட்டால், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ எவ்வித வழிகாட்டுதலும் இல்லை.

தற்போது பணியில் இருக்கும் ஒரு நீதித்துறை நடுவர் இது பற்றி கூறுகையில்  “ரிமாண்டுக்கு அழைத்து வரப்படும் குற்றவாளி தன்னை காவல் துறையினர் தாக்கினார்கள், கொடுமைப்படுத்தினார்கள் என்று சொன்னால், அதை அப்படியே பதிவு செய்து கொள்கிறோம்.   அதன் பின்னர், அந்த விபரங்களை, மாவட்ட Chief Judicial Magistrate மற்றும், Principal District Judgeஆகியோருக்கு கடிதமாக அனுப்புகிறோம்.  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கும் இதன் நகலை அனுப்புகிறோம்.  ஆனால், இந்த அறிக்கைகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது எங்களுக்கு தெரியாது” என்று கூறினார்.
இவரின் கருத்தை வழக்கறிஞர் புகழேந்தியும் ஆமோதிக்கிறார். “நீதித்துறை தலையிட்டாலேயே, காவல்நிலையங்களில் நடக்கும் பல சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.   ஒரு கைதி ரிமாண்டுக்கு அழைத்து வருகையில் அவருக்கு காயம் இருந்தால், அவரை ரிமாண்ட் செய்ய மாட்டேன் என்றோ,  அல்லது காயங்கள் எப்படி ஏற்பட்டன என்று விசாரணைக்கோ உத்தரவிடுவார்கள் என்ற அச்சம் இருந்தால், 80 சதவிகித காவல்நிலைய சித்திரவதைகளை தடுக்க முடியும்” என்கிறார் புகழேந்தி.
இந்தியா முழுக்க காவல்துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2006ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.  இதில் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளவில்லை.
2014ம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.  இணைப்பு இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக காவல்துறை,  அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் 1567 காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தது. ஐந்தாண்டுகள் கடந்து விட்டன. ஆனால் எனக்கு தெரிந்து தமிழகத்தின் எந்த காவல்நிலையத்தின் உள்ளேயும் சிசிடிவி இருப்பதாக தெரியவில்லை.
தமிழகத்தின் தெருக்கள்தோறும் சிசிடிவி நிறுவ வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தும் காவல்துறையினர், காவல்நிலையத்தின் உள்ளே சிசிடிவி நிறுவுவதை தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்பதிலிருந்து,  குற்றவாளிகளை சித்திரவதை செய்வது தொடர வேண்டும் என்று காவல்துறையினர் விரும்புகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
காவல் நிலையங்களில் நடக்கும் இது போன்ற கஸ்டடி கொலைகளில் இறப்பவர்களில் பெரும்பாலானோர் விளிம்புநிலை மக்களாகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் என்பதும் நாம் கவனிக்க வேண்டிய செய்தி.
பென்னிக்ஸ், ஜெயராஜ் கொலைகளுக்காவது உரிய நீதி கிடைக்குமா என்ற நமது எதிர்ப்பார்ப்பில் மண்தான் விழுந்திருக்கிறது.  இறந்துபோன இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுவதற்கு முன்னதாகவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  பென்னிக்ஸ் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார் என்றும், அவர் தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கீழ்தான் காவல்துறை வருகிறது.    பென்னிக்ஸும், ஜெயராஜும் கொலை செய்யப்பட்டார்களா என்பதை தமிழக காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள்தான் விசாரிப்பார்கள். அதிகபட்சம் இதை சிபி.சிஐடி விசாரிக்கலாம்.  சிபி.சிஐடியும் முதல்வருக்குக் கீழ்தான் வருகிறது.
எந்த காவல்துறை அதிகாரி முதல்வரின் அறிக்கைக்கு எதிராக விசாரணை செய்து அறிக்கை அளிப்பார் என்று நினைக்கிறீர்கள் ?   இதில் தமிழக காவல்துறை விசாரணை நடத்தினால் எப்படி உண்மை வெளியே வரும் ?
இந்தியாவில் ஆயிரக்கணக்கான பாலியல் வன்முறைகள்  நடந்திருக்கின்றன என்றாலும், டெல்லியில் நடந்த நிர்பயாசம்பவம்தான் இந்தியாவின் மனசாட்சியை உலுக்கியது.  அதுவே, பாலியல் வன்முறை தொடர்பான சட்டங்களில் பல சீர்திருத்தங்களை கொண்டு வரவும், மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் அமையவும் காரணமாக இருந்தது.  அது போல, பென்னிக்ஸ், ஜெயராஜ் கொலைகள், இனி தமிழகத்தில் கஸ்டடிகொலைகள் நடக்காமல் இருக்க காரணமாக அமையட்டும்.
பென்னிக்ஸ், ஜெயராஜ் வழக்கினை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.    இதை விசாரிக்கும் அமர்வின் மூத்த நீதிபதி பி.என்.பிரகாஷ் நீதிபதியாகும் முன்பு கிரிமினல் வழக்கறிஞராக இருந்தவர்.  காவல் துறையினர் செய்யும் அத்தனை தில்லுமுல்லுகளையும் அறிந்தவர்.   தமிழக காவல்துறையினர் விசாரித்தால், இந்த வழக்கில் உண்மை வெளிவராது என்பதையும் அவர் அறிந்தவர்.  அதனால், உயர்நீதிமன்ற மேற்பார்வையில், சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடும் என்று நான் நம்புகிறேன். இந்த வழக்கிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் காப்பாற்றப்படுவார்களேயானால், காவல் நிலையங்கள் கொலைக்கூடங்களாக மாறுவதை தவிர்க்க இயலாது.
பென்னிக்ஸ் மற்றும், ஜெயராஜின் மரணங்கள், தமிழகத்தில் நடக்கும் கடைசி கஸ்டடி கொலையாக இருக்கட்டும்.


FacebookTwitterWhatsAppTelegram



Share

கருத்துகள் இல்லை: