வியாழன், 25 ஜூன், 2020

தந்தை, மகன் மரணம் : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

தந்தை, மகன் மரணம் : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு தினமலர் :  மதுரை : போலீஸ் தாக்குதலில் காயமடைந்த தந்தை, மகன் கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணம் அடைந்தது குறித்து தானாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, 'ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க போலீசார் பின்பற்றும் வகையில் வழிகாட்டுதல்கள் உள்ளனவா என அரசு தெளிவுபடுத்த வேண்டும். துாத்துக்குடி எஸ்.பி.,அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் 63, மரக்கடை நடத்தினார். இவரது மகன் பென்னிக்ஸ் 31. அதே பகுதியில் அலைபேசி கடை நடத்தினார். ஜூன் 19 இரவு 9:00 மணிக்கு சில போலீசார் ரோந்து சென்றனர். ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கடையை திறந்து வைத்திருப்பதாகக்கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை கடைகளை மூடுமாறு கூறினர். இதில் இருதரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது.


தந்தை, மகனை சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது ஊழியரின் உத்தரவிற்கு கீழ்படியாமல் இருத்தல், மிரட்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஜூன் 22 ல் பென்னிக்ஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காயங்களுடன் இருந்த ஜெயராஜூம் ஜூன் 23ல் இறந்தார். இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.ஜெயராஜ் மனைவி செல்வராணி, 'இருவர் மரணத்திலும் சந்தேகம் நிலவுகிறது. அவர்களை போலீசார் தாக்கியுள்ளனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மற்றும் அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நேற்று முன்தினம் மனு செய்தார்.

அவசர வழக்காக விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, 'திருநேல் வேலி அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்விவகாரத்தின் தீவிரத் தன்மையைக் கருதி உயர்நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதியின் கவனத்திற்கு பதிவுத்துறை கொண்டு செல்ல வேண்டும்,' என உத்தரவிட்டார்.உயர்நீதிமன்றக் கிளை பதிவாளர் (நீதித்துறை), 'இருவர் மரணம் குறித்து காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இதை தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என மனு செய்தார். இதனடிப்படையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு நேற்று தானாக முன்வந்து காணொலியில் விசாரித்தது. நீதிபதிகள், 'டி.ஜி.பி.,மற்றும் துாத்துக்குடி எஸ்.பி., காணொலியில் ஆஜராக வேண்டும்,' என உத்தரவிட்டு சிறிது நேரம் ஒத்திவைத்தனர்.

மீண்டும் நீதிபதிகள் விசாரித்தனர்.அரசுத் தரப்பில், 'கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகள் கூட்டத்தில் டி.ஜி.பி., பங்கேற்றுள்ளார். ஆதலால் ஆஜராக முடியவில்லை. பதிலாக மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் ஆஜராகிறார்,' என தெரிவிக்கப்பட்டது.ஐ.ஜி.,சண்முக ராஜேஸ்வரன்: கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரிக்கிறார். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எஸ்.பி., அருண் பாலகோபாலன்: தற்போது இங்கு அமைதி நிலவுகிறது. இருவரின் உடல்களைப் பெற உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கின்றனர்.
நீதிபதிகள்: இச்சம்பவம் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.,: சம்பவம் வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன்: எஸ்.ஐ.,கள் பாலகிருஷ்ணன், ரகு கணேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏட்டுகள் முத்துராஜ், முருகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணை நடக்கிறது. அதை இந்நீதிமன்றம் கண்காணிக்கிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அமைதி காக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க போலீசார் பின்பற்றும் வகையில் வழிகாட்டுதல்கள் உள்ளனவா, அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அதை மேலும் மேம்படுத்துவது குறித்து அரசுத் தரப்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

மாஜிஸ்திரேட் விசாரணைக்கு துாத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும். சம்பவம் மற்றும் தற்போதைய நிலை குறித்து துாத்துக்குடி எஸ்.பி., ஜூன் 26 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாஜிஸ்திரேட் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.


விசாரிக்க கோரிக்கை


சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் நேற்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி கூறியதாவது: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கி வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது மாஜிஸ்திரேட்டும் முறையாக விசாரிக்காமல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சட்டப்படி மாஜிஸ்திரேட் நடந்தாரா என்பதை விசாரிக்க வேண்டும். உயர் நீதிமன்றமே வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும், என்றார். கோரிக்கை குறித்து உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் மனு அளிக்கும்படியும் அதை பரிசீலிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பதிவாளர் ஜெனரலுக்கு சூரியபிரகாசம் கடிதம் அனுப்பினார்.


தலா ரூ.10 லட்சம் நிவாரணம்


முதல்வர் பழனிசாமி அறிக்கை: ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்

கருத்துகள் இல்லை: