செவ்வாய், 23 ஜூன், 2020

மீனவர்களை காப்பாற்றவோ ..கடத்தலை தடுக்கவோ பயனற்று போன ரோந்து படகுகள் .. ராமேஸ்வரம்

 பழுதாகி கிடக்கும் கடலோர ரோந்து படகுகள்மின்னம்பலம் : மண்டபத்தில் பல மாதங்களாக கடலோர போலீசாருக்கு வழங்கப்பட்ட ரோந்து படகுகள் பழுதாகி கிடக்கின்றன. இவை இருந்தும் பயனில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்திலேயே மிக முக்கிய கடல் மற்றும் கடற்கரை பகுதிகளைக் கொண்ட மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம். அதற்கு முக்கிய காரணம் இலங்கை மிக அருகாமையில் உள்ளதாலும் அவ்வப்போது இலங்கையில் இருந்து அகதிகள் வந்து செல்வதோடு தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதும், இங்கிருந்து இலங்கைக்கு கடல் அட்டை மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாலும் இந்த கடல் மற்றும் கடற்கரை பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவே விளங்கி வருகிறது

மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் பகுதியில் கடலோர போலீசார் ரோந்து செல்ல வசதியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 12 டன் மற்றும் 5 டன் எடை கொண்ட இரண்டு அதிவேக ரோந்து படகுகள் மண்டபம் கடலோரக் காவல் நிலையத்துக்கு வழங்கப்பட்டன.
இந்த நிலையில் இரண்டு படகுகளும் பழுதாகி பல மாதங்களாக சரி செய்யப்படாமல் மண்டபம் வடக்கு துறைமுகக் கடல் பகுதியில் நங்கூரமிட்டு வெறும் காட்சிப்பொருளாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சி.ஐ.டி.யு மீன்பிடி தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி, “தமிழகத்திலேயே முக்கிய கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளைக் கொண்ட ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடலோர போலீசாரின் ரோந்து பணிக்காக அரசு சார்பில் வழங்கப்பட்ட இரண்டு ரோந்து படகுகளையும் கடலோர போலீசார் ரோந்து பணிக்கு முழுமையாகப் பயன்படுத்தியது கிடையாது. ரோந்து படகில் கடலில் ரோந்து செல்ல மாதந்தோறும் அரசால் ஒதுக்கப்பட்டு வரும் டீசலை கூட முழுமையாகப் பயன்படுத்தாத நிலையே உள்ளது.
கடந்த 13ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து நான்கு மீனவர்கள் ஒரு விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர். இந்த படகு, கடலில் மூழ்கி ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு மற்ற மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். படகு மூழ்கி கடலில் மாயமாகும் மீனவர்களைத் தேடி கண்டுபிடிக்கக்கூட ரோந்து படகைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு இரண்டு படகுகளும் பல மாதங்களாக பழுதான நிலையில் காட்சிப்பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே பழுதாகி கிடக்கும் ரோந்து படகுகளை உடனடியாக பழுது பார்க்கவும், கடலில் மீன் பிடிக்க சென்று இயற்கை சீற்றங்களில் சிக்கி படகு மூழ்கி கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் மற்றும் படகை மீட்க கடலோர போலீசாரும் துரித பகுதியில் செயல்பட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ராஜ்

கருத்துகள் இல்லை: