சனி, 17 ஆகஸ்ட், 2019

வசூல் வேட்டையில் அமைச்சர்களை மிஞ்சும் கலெக்டர்கள்!

டிஜிட்டல் திண்ணை:  அமைச்சர்களை மிஞ்சும் கலெக்டர்கள்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு முதல் வாரத்தில் மாவட்ட ஆட்சியர்களின் மாநாட்டை இரண்டு அமர்வுகளாக தலைமைச் செயலகத்தில் நடத்தினார். அப்போது தமிழக அரசின் திட்டங்கள் கடைநிலை மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளதா, சேரவில்லை என்றால் ஏன் சேரவில்லை, அதற்கான வழிமுறைகள் என்ன, அதை எப்படி வேகப்படுத்துவது என்பது குறித்தெல்லாம் கலெக்டர்களுடன் விவாதித்தார் முதல்வர்.
கலெக்டர்கள்தான் தமிழக அரசின் முகமாகவும், கண்களாகவும், கரங்களாகவும் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, குடிமராமத்து, மழைநீர் சேகரிப்பு, பசுமை வீடுகள் திட்டம், பொது விநியோகத் திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டம், குடிநீர் விநியோகம், வீட்டுமனைப் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்குதல் அம்மா திட்டம் உள்ளிட்ட நேரடியாக மக்களோடு தொடர்புடைய அடிப்படைத் திட்டங்கள் பற்றி மாதா மாதம் தனக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கலெக்டர்களுடன் ஒருபக்கம் வெளிப்படையான ஆலோசனைக் கூட்டம் என்றால், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் பற்றிய விசாரணை அறிக்கை ஒன்றையும் உளவுத்துறையிடம் கேட்டு உத்தரவிட்டார் முதல்வர்.
தமிழகத்தில் இப்போது பதவி வகிக்கும் கலெக்டர்களில் பெரும்பாலானோர் கன்ஃபர்டு ஐஏஎஸ் அதிகாரிகள்தான். அதாவது ஐ.ஏ.எஸ். படித்து வந்தவர்கள் அல்லர், படிப்படியாக முன்னேறி ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்றவர்கள். கலெக்டர்களில் பலர் மீது ரகம் ரகமான புகார்கள் முதல்வரிடம் சென்றிருக்கின்றன. சில கலெக்டர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீரின் சிபாரிசால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் தங்களுக்குள் ஒரு தனி சிண்டிகேட் அமைத்து தனி ராஜ்யம் நடத்துவதாகவும் முதல்வருக்கு தகவல்கள் சென்றிருக்கின்றன.
இன்னொரு பக்கம், அமைச்சர்களை விட அதிக முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் தங்களுக்குக் கீழே இருக்கும் அதிகாரிகளை இதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் முதல்வருக்கு சில குறிப்பிட்ட கலெக்டர்கள் பற்றி ஏற்கனவே நோட் போயிருக்கிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தின் கலெக்டர் டவுன் பிளானிங் அப்ரூவல் வழங்குவதற்கு ஹோட்டல் சங்கத் தலைவரை தனது பிரதிநிதியாக வைத்திருக்கிறார். பெரிய கட்டிடங்களுக்கு கலெக்டரின் ஒப்புதலை வங்க வேண்டுமென்றால் அந்த ஓட்டல் சங்க தலைவரைப் பார்த்தால் போதும். எல்லாம் முடிந்துவிடும். இதேபோல நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை என முதல்வரின் துறையின் கீழ் வரும் பணிகளுக்குக் கூட துறைக்கு ஒரு பிரதிநிதியை சில கலெக்டர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களின் மூலமே வசூல் நடைபெறுகிறது.
தலைநகரின் சுற்று வட்டார மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் இருந்து எப்படி பெரும் தொகை அதிகாரிகள் வழியாக கைமாறுகிறது என்பது குறித்தும் இந்த விசாரணைப் படலத்தில் தகவல்கள் முதல்வருக்குக் கிடைத்திருக்கின்றன.
இந்த தகவல்களை எல்லாம் வைத்து என்ன செய்யப் போகிறார் முதல்வர்? கோட்டை வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, ‘சமீபத்தில் முதல்வர் எடப்பாடி டெல்லி சென்றபோது அங்கே தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை ரகசியமாக சந்தித்தார். ஆனால் அந்த சந்திப்பு பற்றி இரு தரப்பிலும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.
அதேசமயம் பிரசாந்த் கிஷோரின் முதல் அறிவுரையே, ‘ஜெயலலிதா மேடம் காலமானதில் இருந்து தமிழ்நாட்டில் மாவட்ட கலெக்டர்கள்தான் அதிக அதிகாரம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அமைச்சர்கள் மீடியா முன் வந்து சென்றாலும் கலெக்டர்கள் கையில்தான் முழு அதிகாரம் இருக்கிறது. அதை சிலர் சரியாக பயன்படுத்துகிறார்கள், பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். எனவே முதலில் கலெக்டர்களைப் பற்றி விசாரியுங்கள். கலெக்டர்களின் செயல்பாடுதான் உங்கள் ஆட்சிக்கான நல்ல பெயரை முடிவு செய்யும்’ என்று கூறியிருக்கிறார்.
அதன் அடிப்படையில்தான் கலெக்டர்கள் மாநாட்டைக் கூட்டிய முதல்வர், அதே நேரம் ஒவ்வொரு கலெக்டர் பற்றி தனித்தனியாக விசாரணையும் நடத்தி விவரம் சேகரித்திருக்கிறார். இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் விரைவில் மெகா கலெக்டர்கள் மாற்றமோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாக கலெக்டர்கள் மாற்றமோ நடக்கும்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: